இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday, 6 February 2013

மதனப் பெண் 40 - சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம் !

சீனியர் வழக்குரைஞரும் அவரது மனைவி கண்மணியும் முன் வைத்த கருத்துகள், வேண்டுகோள் ஆகியன தற்போது கண்ணனை பேச வைத்தன.

"சார்..., நீங்க ரெண்டு பேரும் என்னோட, என் குழந்தைகளோட, என் வருங்கால  நன்மைக்காக பேசுறீங்க என்பதை என்னால நல்லாவே உணர முடியுது. ஆனா, பவித்ரா இறக்கறப்போ அவ பேசுனது என்னை இந்த விசயத்திலே ஒரு முடிவுக்கு வர முடியாமே தடுக்குது. அவ ஆஸ்பத்திரியிலே சாகக் கிடக்கிறப்போ, 'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டா.... அந்த கேள்விக்கு எது சரியான விடையாக இருக்கும் என்பது எனக்கு இன்னும் விளங்கலே...." என்று கண்ணன் தனது மனதில் இருந்த ஒரு ஐயப்பாட்டை இருவருக்கும் விளக்கினார்.

பிறகு அங்கிருந்த சட்ட புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தவாறு, "எனக்கு இருக்கிற சங்கடமெல்லாம், என்னை கல்யாணம் செஞ்சுகிற பொண்ணு என்னையும் என் வருமானத்தையும் பாத்து வேண்டுமானால் கல்யாணம் பண்ணிக்கலாம்; ஆனா என் குழந்தைகளை பாத்து கல்யாணம் செஞ்சுக்குவா என்கிறதிலே எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. குழந்தைகளுக்காக கல்யாணம் பண்ணி, வர்றவ குழந்தைகளை பாத்துக்காம போன கூட பரவாயில்லை... அதுக்கு பதிலா கொடுமை செய்ய ஆரம்பிச்சா... இல்லை பாரபட்சம் காமிச்சா... இல்லை நான் குழந்தைகளை கவனிச்சுகிறதிலே இடைஞ்சல் செஞ்சா என் மனசு என்ன வேதனைப்படும் என்கிறதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளைக்கு அவளுக்கென்னு ஒரு குழந்தை பிறந்தா.., தன் குழந்தையை பாப்பாளா ? இல்லை... என் குழந்தைகளை பாப்பாளா ? அதோட வர்றவ எந்த உள்நோக்கத்தோடு வர்றா என்பது யாருக்குத் தெரியும் ?" என்று தனது தரப்பில் உள்ள நியாயமான அச்ச உணர்வுகளை விளக்கினார்  கண்ணன்.

அவரே தொடர்ந்து, "நிம்மதிக்காக, சமூக வாழ்க்கைக்காக இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, பின்னாடி அந்தக் கல்யாணத்தாலேயே அந்த நிம்மதியை தொலைச்சிரக் கூடாது, என்கிறது என் அபிப்பிராயம்" என்று கண்ணன் தனது நிலையை தெளிவாக்கினார்.

இதையெல்லாம் பொறுமையாக தனது கணவர் நாகலிங்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கண்மணி, "கண்ணா ... நீ இந்த விசயத்துக்கு ரொம்ப தூரம் யோசனை செய்றேன்னு நான் நினைக்கின்றேன்.. அஃப்கோர்ஸ் ... யோசனை பண்ண வேண்டியது நியாயம்தான்... ஏன்னா.. கல்யாணமென்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். அதனாலே... நீ இப்படி யோசிக்கிறதிலே நியாயம் இருக்கு... உனக்கு சொந்தத்திலும் பெண் கிடையாது... இருந்தா அந்தப் பொண்ணேக்  கேட்கலாம். ஊர் உலகத்திலே பொண்டாட்டி, புருஷன் செத்தவங்க... முதோ கல்யாணத்திலே குழந்தை இருக்கிறவங்க, ரெண்டாம்  கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் புதிசில்லே.. (தனது கணவர் நாகலிங்கத்தைப் பார்த்து) இவரோட தம்பி மகனோட பொண்டாட்டி ஒரு குழந்தையை விட்டுட்டு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செத்துப் போய்ட்டா.. இப்போ அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இல்லையா?" என்று சற்று படபடப்புடன் கண்ணனை நோக்கி பேசினார்.

இப்போது சீனியர் நாகலிங்கம், "கண்ணா... உனக்கு வயசு கம்மி... உனக்கும், உன் குழந்தைகளுக்கும் ஒரு பெண் கட்டாயம் வேணும்... இதுக்கு உன்னோட பதில் என்ன...?" என்று பிரச்சனையை நெருக்கி, சுருக்கினார்.

இதற்கு கண்ணன், "எனக்கு நல்லா புரியுது.... ஆனா என்னோட முடிவுன்னு  கேட்டால் இப்போதைக்கு நான் சொல்ற பதில், நாம யாரிடமும் போய், என்னோட நிலையை விளக்கி, அவங்களை  சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம்... என்னோட நிலையை புரிந்து கொண்டு பொண்ணு தர தானா முன் வர்ற குடும்பதிலேருந்து பெண் பாப்போம், எல்லாம் ஒத்து வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஓரளவு படிந்து வந்தார்.

கண்ணன் இப்படியாவது ஒரு முடிவுக்கு வந்தாரே என்று நாகலிங்கமும், கண்மணியும் சற்று சந்தோசப் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து, "இப்படி பெண் பாக்கிறதுக்கு என்ன பண்ணப் போறே கண்ணா ?" என்று கண்மணி அவசரமாக கேட்டார்.

இதற்கு "என்னோட சூழலை விளக்கி கொஞ்ச நாள் கழித்து பேப்பர்லே விளம்பரம் செய்யப் போறேன்" என்று கண்ணன் பதிலளித்தார்.

இது அவர்கள் இருவருக்கும் சரியெனப்பட்டது. 'சுபம் சீக்கிரமே  நடக்கட்டும்' என்று வாழ்த்தி, இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார், கண்மணி.

இருவரிடமும் விடை பெற்று கண்ணன் வீடு திரும்பினார்.

எனினும் கண்ணன் தனது இந்த முடிவிலும் இரண்டு 'ரிசர்வேசன்' வைத்திருந்தார். 

அதை பின்னர் சொல்கின்றேன்.....

15 comments:

சேக்கனா M. நிஜாம் said...

தொடர் நல்ல விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு...

அவர்களின் உரையாடல் நம்மை சிந்திக்க வைக்கின்றன !

வாழ்த்துகள்...

இராஜராஜேஸ்வரி said...

கண்ணன் இப்படியாவது ஒரு முடிவுக்கு வந்தாரே என்று நாகலிங்கமும், கண்மணியும் சற்று சந்தோசப் பெருமூச்சு விட்டனர்.

சுபம் சீக்கிரமே நடக்கட்டும்' என்று வாழ்த்தி//

சுபம சீக்கிரமே நடக்க வாழ்த்துகிறோம் ....

உண்மைக்கதை என்று சொல்லி
உள்ளத்தை ஆக்ரமித்துவிட்டது ...

இராஜராஜேஸ்வரி said...

எனினும் கண்ணன் தனது இந்த முடிவிலும் இரண்டு 'ரிசர்வேசன்' வைத்திருந்தார். /

மிகத்தெளிவான முடிவுகள் எடுக்கும் கண்ணனுக்கு
இனிய வாழ்க்கை அமையட்டும் ...

இராஜராஜேஸ்வரி said...

மிக மிக பொருத்தமான படங்கள்..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

இராஜராஜேஸ்வரி said...

"நிம்மதிக்காக, சமூக வாழ்க்கைக்காக இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, பின்னாடி அந்தக் கல்யாணத்தாலேயே அந்த நிம்மதியை தொலைச்சிரக் கூடாது, என்கிறது என் அபிப்பிராயம்"

கண்ணனின் நல்ல குணத்திற்கும் , தாயன்பிற்கு ஏங்கும் அன்புக்குழந்தைகளுக்கும் தெயவ அருளால் உற்ற துணையாக தாய்மை நிறைந்த துணை கிடைத்து மகிழ தெய்வங்களைப் பிரார்த்திக்கிறேன் ...

இராஜராஜேஸ்வரி said...

'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டது ...

இன்னும் மனதை கலங்கவைத்துக்கொண்டிருக்கிறது ..தாயுள்ளம்ல்லவா ... !

Advocate P.R.Jayarajan said...

@சேக்கனா M. நிஜாம் said...
//தொடர் நல்ல விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு... அவர்களின் உரையாடல் நம்மை சிந்திக்க வைக்கின்றன !//

வருகைக்கு நன்றி நிஜாம் சார்.....

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...
//உண்மைக்கதை என்று சொல்லி
உள்ளத்தை ஆக்ரமித்துவிட்டது ...//

இன்னும் ஆக்கிரமிக்கும்....

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...
//மிகத்தெளிவான முடிவுகள் எடுக்கும் கண்ணனுக்கு இனிய வாழ்க்கை அமையட்டும் ...//

அப்படியே ஆகட்டும்.....

Advocate P.R.Jayarajan said...

@இராஜராஜேஸ்வரி said...
//கண்ணனின் நல்ல குணத்திற்கும் , தாயன்பிற்கு ஏங்கும் அன்புக்குழந்தைகளுக்கும் தெயவ அருளால் உற்ற துணையாக தாய்மை நிறைந்த துணை கிடைத்து மகிழ தெய்வங்களைப் பிரார்த்திக்கிறேன் ...//

இதை கண்ணனிடம் சொல்லிவிட்டேன்... நன்றி அம்மா...

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...
//'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டது ...
இன்னும் மனதை கலங்கவைத்துக்கொண்டிருக்கிறது ..தாயுள்ளம்ல்லவா ... !//

மனைவியை இழந்த கணவன் படும் வேதனைகள் இவை .... வருகைக்கும், முத்தான கருத்துகளுக்கும் நன்றி அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

1. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள எண்ணம்...?

2. மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத மணப்பெண் தேவை...?

Advocate P.R.Jayarajan said...

@ திண்டுக்கல் தனபாலன் said...
//1. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள எண்ணம்...?
2. மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத மணப்பெண் தேவை...?//

இவை இரண்டும் நல்ல ரிசர்வேசன்தான். ஆனால் கண்ணன் உடல் ரீதியாக இல்லாமல் உணர்வுபூர்வமான வேறு இயல்பான இரண்டு ரீசர்வேசன்களை வைத்திருந்தார். வருகைக்கும் ஊகித்தமைக்கும் நன்றி சார்...

Chellappa Yagyaswamy said...

தங்கள் வலைப்பூ நல்ல செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து படித்தால் சில குடும்பங்களிலாவது நிம்மதியைக் கொண்டுவரும் என்று தோன்றுகிறது.

சங்கவி said...

நிறைய அறிய வேண்டிய செய்திகள் உங்கள் தளத்தில் இன்று தான் பார்த்தேன்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...