இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday, 24 December 2011

மதனப் பெண் 33 - மாமாவின் நல்ல ஆலோசனை

தனது மாப்பிள்ளை என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து மாமா சுந்தரம் பல்வேறு ஊகங்களுக்கு போனார். ஒருவேளை தான் நினைத்துக் கொண்டிருந்த விசயத்தைதான் மாப்பிள்ளையும் சொல்லப் போகிறாரோ..? என்றும் சுந்தரம் நினைத்தார். எனினும் மாப்பிள்ளை சொல்வதை முதலில் கேட்போம் என்று கருதி தான் சொல்ல வந்த விசயத்தை தள்ளி வைத்து விட்டார்.

"நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே.. சொல்லுங்க மாப்பிள்ளே.."

"ஒண்ணுமில்லே மாமா.. நான் உங்ககிட்டே ஏற்கனவே கோடு போட்டு காட்டியதுதான்... இருந்தாலும் அது சரி வருமா என்ற யோசனையும் எனக்கு இருந்தது... ஆனா அதுக்கான ஒரு டிசிசன் எடுக்க வேண்டிய கட்டாயம் இப்போ எனக்கு ஏற்பட்டு இருக்கு.. இது சரியான நேரமும் கூட.. முக்கியமா குழந்தைங்க நல்ல வளரனும்.. எங்க அம்மாவும் நல்ல இருக்கணும்.. எனக்கு தொழில் அது இதுன்னு நேரம் போய்கிட்ருக்கு.. நான் பெர்சனலா குழந்தைங்கலே கவனிக்க முடியுமா என்பது கொஞ்சம் டிபிகல்டியா இருக்கு.. அதுக்காகதான் இந்த முடிவு.. எனக்கு வேற வழி தெரியலை.. " என்று நிறைய பீடிகைகளை போட்டு கண்ணன் பேசிக் கொண்டே போனார்.

"அதெல்லாம் சரி மாப்பிளே.. என்ன முடிவு எடுத்திருக்கீங்கன்னு நீங்க இன்னும் சொல்லவே இல்லையே.." என்று சுந்தரம் சற்று அங்கலாய்ப்புடன் கேட்டார்.

"இப்போ ரோஹிணிக்கு சம்மர் வெகேசன். 2 -ஆம் வகுப்பு போகப் போறா. சத்தியா யு.கே.ஜி. போகப் போறான். ரோஹினி நல்ல படிக்கிறா. அவளை கொடைக்கானல்லே இருக்கிற போர்டிங் ஸ்கூல்லே சேர்க்கப் போறேன். அப்ப்ளிகேசன் வாங்கிட்டேன். சத்தியா 1 -ஆம் கிளாஸ் போகிறப்போ அவனையும் அந்த ஸ்கூல்லே சேர்க்க முடிவு செய்திருக்கேன். ரெண்டு குழந்தைகளையும் வைச்சு அம்மாவலே நேரத்துக்கு சமைச்சு போடா முடியலே.. ரெண்டும் ரொம்ப சேஷ்டை செய்யறாங்க.. தவிர  அம்மா, ஏதோ நியாபகத்திலே ஏதேதோ செய்றாங்க.. பதற்றபடறாங்க .. ஹோம் வொர்க் கோச்சிங் தெரியலே.. அதனாலேதான் இந்த முடிவு.  நான் மாசத்துக்கு ஒரு தடவை கொடைக்கானல் போய் ரோஹிணியை பார்த்திட்டு வரப் போறேன். என்ன மாமா.... மதுரையிலிருந்து இதோ இங்கிருக்கிற வத்தலகுண்டு ஒரு மன்நேரம். அங்கிருந்து 2  மணி நேரம்  கொடைக்கானல். போயிட்டு ஒரு நாள் அங்கே தங்கிருந்து ரோஹிணியை பாத்திட்டு அடுத்த நாள் வந்திடப் போறேன்," என்றார் கண்ணன்.


மாப்பிள்ளை கண்ணன் என்ன சொல்லப் போகிறாரோ என்று நினைத்த சுந்தரத்திற்கு இந்த சங்கதி அவரது மனதில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. தான் சொல்ல வந்த விசயத்தைப் பற்றி அவர் வாயைத்   திறக்கவில்லை. மாறாக, "அதான் குழந்தைகளே நாங்க கூட்டிகிட்டு போய் வளத்துரோம்ன்னு முதல்லேயே சொன்னோம்ல்லே மாப்பிளே.. . நீங்க இப்போ ஹாஸ்டல்லே சேக்கணும்ன்னு சொல்றீங்க.. இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை... நீங்க குழந்தைங்க ரெண்டு பேரையும் எங்ககிட்டே விட்டுரங்க.. கோவையில் எத்தனையோ நல்ல ஸ்கூல் இருக்கு. அதிலே குழந்தைகளை சேக்கறோம்.. நான் உங்கம்மாவையும் கோவைக்கே கூட்டிட்டிட்டு போறேன். அவ எங்ககூட இருக்கட்டும். நீங்க வந்து பாத்துட்டு போங்க.. நீங்க ரோஹிணியை ஹாஸ்டல்லே சேத்து நல்ல படிக்க வைக்கோணம்ன்னு சொல்றீங்க. வேணும்னா அவளை ஊட்டி  ஸ்கூல்லே சேர்ப்போம்.. சத்தியா கோவை ஸ்கூல்லே படிக்கட்டும்...  எங்ககூட இருக்கட்டும்.." என்று சுந்தரம் உள்ளபடி வீட்டுக்கு மூத்தவராக இருந்து படபடப்பாக தனது தரப்பை சொன்னார். 

இது ஒரு நல்ல ஆலோசனைதானே..? 

ஆனால் கண்ணன் இதற்கு வேறு ஒரு பதில் சொன்னார்.

(பிறகு சொல்கின்றேன்.)

Friday, 23 December 2011

மதனப் பெண் 32 - மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?

படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக  வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி,  திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி. தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும்  வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும்  மருத்துவமனைக்கு வந்து  வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4  நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.

சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப  சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

(பின் சொல்கிறேன்..) 

Wednesday, 21 December 2011

மதனப் பெண் 31 - அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..

கண்ணன் ஒருவித பீதியுடன் வரலக்ஷ்மியின் அருகில் சென்று பார்த்தார். மெல்லிய குறட்டை சத்தத்துடன் சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. இதைக் கண்டு கண்ணனுக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது. "அம்மா.. அம்மா.. என்னாச்சு உங்களுக்கு?" என்றவாறு  வரலக்ஷ்மியை கண்ணன் மெல்ல தட்டி எழுப்பினார். மெல்ல விழித்துக் கொண்ட  வரலக்ஷ்மி, சற்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "ஒண்ணுமில்லேப்பா... மதியம் சாப்பிட்ட பிறகு எப்பவும் இல்லாத மேனிக்கு ரொம்ப அசதியா இருந்தது... கண்ணை அப்படியே இருட்டிக்கிட்டு வந்தது.. கொஞ்ச நேரம் தலையை கீழே வைக்கலாம்ன்னு படுத்தேன்.. அப்படியே நல்ல தூங்கிட்டேன் போல.. மத்தபடிக்கு ஒண்ணுமில்லே" என்றார்.

"அம்மா.. பி.பி. மாத்திரை ரெகுலரா சாப்பிடுறீங்க இல்லே? மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் அவ இருக்கா.. பாத்துக்குவா... வேணுமின்னா டாக்டர் கிட்டே கூட்டுட்டு போகவா?" என்று கண்ணன் அனுசரணையாக கேட்டார். "வேண்டாம் கண்ணா.. ஏதோ அசதி.. அவ்வளவுதான்" என்றார் வரலக்ஷ்மி.

"சரி ... நீங்க படுத்திருக்கீங்கன்னு நான் அப்படியே மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.. வர்ற வழியிலே ஓட்டல்லே இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்.. சாப்பிடுங்க.. மதியம் கூட நீங்க கொஞ்சம் சாதம்தான் வச்சுகிட்டீங்க.." என்று கூறிகொண்டே தான் வாங்கி வந்திருந்த டிபன் பொட்டலங்களை கண்ணன் பிரிக்க ஆரம்பித்தார்.

வரலக்ஷ்மி 4  இட்லிக்களை திருப்தியுடன் சாப்பிட்டார். கண்ணனும் சாப்பிட்டார். பிறகு இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். கண்ணன் தொலைபேசியில் கோவையிலிருக்கும் தனது மகள் மற்றும் மகனுடன் சிறிது நேரம் பேசினார். இப்படியாக மாலைபொழுது முற்றிலும் மறைந்து இரவு 10௦ மணி ஆகிவிட்டது.

வரலக்ஷ்மி ஒரு கொட்டாவியுடன் மீண்டும் தனது அறைக்கு சென்று படுத்துக் கொண்டார். ஏதும் பேசவில்லை. கண்ணனும் தனது அறைக்கு சென்று படுத்து விட்டார். அவருக்கு நல்ல தூக்கம்.

பின்னிரவு மணி 3.30 இருக்கும். அப்போது, "கண்ணா.. கொஞ்சம் இங்கே வர்றையப்பா..." என்று தன்னை வரலக்ஷ்மி முனகலுடன் மெல்ல அழைப்பது போல் கண்ணன் உணர்ந்தார். கனவா.. என நினைத்து கண்ணன் சட்டென விழித்துக் கொண்டார். ஆனால் உண்மையில் கண்ணனை வரலக்ஷ்மி தனது அறையில் இருந்து அழைத்துக் கொண்டிருப்பது அவருக்கு நன்கு கேட்டது.

உடனே கண்ணன் வரலக்ஷ்மியின் அறைக்கு ஓடினார். அங்கே, இரவு மின் விளக்கின் ஒளியில் வரலக்ஷ்மி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது கண்ணனுக்கு தெரிந்தது. கண்ணன் உடனடியாக விளக்கை போட்டார். மேலே மின்விசிறி வேகமாக  சுற்றிக் கொண்டிருந்தது. எனினும்  வரலக்ஷ்மியின் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. மூச்சு விட சிரமப் படுவது போல் தெரிந்தது. 

"கண்ணா.. நெஞ்சை பிசையறா மாதிரி இருக்கு.. மூச்சு விட முடியலே.. மயக்கமா இருக்கு.. ஏதோ பன்னுதப்பா... " என்றார் வரலக்ஷ்மி. "நான் அப்போதே சொன்னேன்.. டாக்டர் கிட்டே ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடலன்னு.." என்றார் கண்ணன். பிறகு உடனடியாக தொலைபேசி செய்து ஒரு டாக்சியை வரவழைத்து வரலக்ஷ்மியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனை வாசலருகே வரும் போது வரலக்ஷ்மி மயக்கமாகி துவண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த டூட்டி மருத்துவர்கள் வரலக்ஷ்மியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலில் பிராண வாயு செலுத்தினர். இ.சி.ஜி. பார்த்தனர். அங்கேயே நெஞ்சின் மீது நுண்கதிர் படம் எடுத்தனர்.  வரலக்ஷ்மி வழக்கமாக பரிசோதித்துக் கொள்ளும் இருதய சிறப்பு மருத்துவரை துரிதமாக வரவழைத்தனர்.

அவர் வந்து வரலக்ஷ்மியை சுமார் இரண்டு மணி நேரம் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, ஊசிகள் சிலவற்றை அவருக்கு இட்டு, சில குறிப்புகளை அங்கிருந்த டூட்டி மருத்துவர்களிடம் கூறிவிட்டு ஐ.சி.யு.-வில் இருந்து வெளி வந்தார்.

"டாக்டர்.. அம்மாவுக்கு பி.பி. ரைஸ் ஆய்டிச்சா.. ஹார்ட் எப்படி இருக்கு?" என்று அடுக்கடுக்காக சில கேள்விகளை படபடவென கேட்டார் கண்ணன்.

"எஸ்.. யு ஆர் கரெக்ட் மிஸ்டர் கண்ணன்.. அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு.. மைல்ட்ன்னு சொல்ல முடியாது.. பி.பி. நர்மல்லே இல்லே.. நல்ல வேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்திட்டீங்க.. கொலஸ்ட்ரல், சுகர் எல்லாம் டெஸ்ட் செய்யனும். ரெண்டு நாள் இன்டென்சிவ் கேர்லே இருக்கட்டும்.. நாளைக்கு செக் பண்ணிட்டு சில டேப்லேட்ஸ் எழுதி தர்றேன்.." என்றார் மருத்துவர்.

"அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. டென்சன் கூடாது.." என்று கூறிக்கொண்டே கிளம்பி விட்டார் மருத்துவர்.

ஐ.சி.யு. அறைக்குள் வரலக்ஷ்மி பிராண வாயு முகமூடி அணிந்து, ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அதே கையின் ஆட்காட்டி விரல் நூனியில்  நாடித் துடிப்பைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்க, மற்றொரு கையின் மேல் பகுதியில் இரத்த அழுத்தத்தை தானாக கண்காணிக்கும் பட்டை பொருத்தப்பட்டிருக்க, தலைக்கு மேலே இவற்றின் அளவுகளை காட்டும் மானிட்டர் பெட்டியுடன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் அம்மாவுக்கு 'ஹார்ட் அட்டாக்' என்ற சேதி கண்ணனை நன்றாகவே உலுக்கிப் போட்டது. 


(தொடரும்..) 
Related Posts Plugin for WordPress, Blogger...