இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Tuesday 22 November 2011

மதனப் பெண் 25 - "மாமா.. பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?"

மருத்துவமனையில் பவித்ராவுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் தொடங்கின. அறுவை அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டாள். விவரம் அறிந்து கண்ணனின் சக வழக்குரைஞர் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

பவித்ராவுக்கு தலையில் அறுவை தொடங்கியது. எலும்பு முறிவு ஆன இடத்திலும் அறுவைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கண்ணன் அறுவை அரங்கிற்கு வெளியே மனம் கொள்ளாமல் துக்கத்தில் தவித்தார். வரலக்ஷ்மி மிகவும் கவலையுடன் குழந்தைகளை கட்டிபிடித்தபடி அமர்ந்திருந்தார். பவித்ராவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து காரில் கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஐந்து மணி நேரம் அறுவை நடந்தது. மூத்த மருத்துவர் ஒருவர் வெளியே வந்தார். கண்ணனும், அவரது நண்பர்களும் விவரம் அறிய அவரை பதற்றத்துடன் நெருங்கினர்.

"கண்ணன்.. ஆபரேசன் எல்லாம் நல்லபடியா முடிச்சது. தலையில் ரொம்ப அடி பட்டிருக்கு. மல்டிபிள் பிராக்ச்சர் ஆகி இருக்கு. ரத்தம் ரொம்ப வெளியே போய்டிச்சு. இப்போ எதுவும் சொல்ல முடியாது. பவித்ரா கண் முளிச்சதான் என்னன்னு சொல்ல முடியும். கடவுளை வேண்டுங்க. " என்று எந்த வகையிலும் சேர்த்தி இல்லாமல் மருத்துவர் சொல்லி விட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் பவித்ராவை அறுவை அரங்கிலிருந்து அவசர சிகிச்சை பிரிவு அறைக்கு மாற்றினர். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உடல் முழுவதும் கட்டுகள் போடப்பட்டிருந்தன. பவித்ராவின் உடலில் எந்த அசைவும் இல்லை. பிராண வாயு பொருத்தப்பட்டிருந்தது.

"இந்தக் காட்சியை காணத்தானா இவளை குலதெய்வம் கோவிலுக்கு அழைத்து சென்றேன்? தெய்வமே இது என்ன சோதனை?" என்று கண்ணன் வேதனையில் பிதற்றிக் கொண்டிருந்தார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தினர்.

இப்படியே இரவு ஆகி விட்டது. அதற்குள் பவித்ராவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து மதுரை வந்துவிட்டனர். அவசர சிகிச்சை அறையின் கதவுக் கண்ணாடி வழியாக பவித்ராவை பார்த்து அவளது தாய் சர்மிளா அழத் தொடங்கினர். சுந்தரத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சி. நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார். யார் யாரைத் தேற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை.

இரவு சுமார் 12  மணியளவில் பவித்ராவின் கை விரல் அசைவு தெரிந்தது.  மீண்டும்  ஏதோ முனகுவது போல் பிராண வாய் குழாயையும் மீறி வாய் அசைந்தது. கண்கள் மூடியே இருந்தன. உடனே அங்கிருந்த பயிற்சி மருத்துவர் மற்றொரு மூத்த மருத்துவருக்கு இன்டர்காம் வழியாக தகவல் தெரிவித்தார். அவரும் இன்னும் இரு மருத்துவர்களும் உடனே அவசர சிகிச்சை அறைக்கு வந்தனர். பவித்ராவை பரிசோதித்தனர். பின் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கண்ணனை உள்ளே வரும்படி அழைத்தனர்.

கண்ணன் உள்ளே சென்று பவித்ராவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "கண்ணன்.. அழக்கூடாது.." என்று மேலும் ஏதோ சொல்ல வருவதை போல மருத்துவர்கள் ஒருவர் மற்றொருவரின் முகத்தை பார்த்துக் கொண்டனர். அப்போது பவித்ராவின் உதடுகள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததை அவளது வாய் அருகே காது வைத்து கண்ணன் கேட்டார். விட்டுவிட்டு வந்த அந்த வார்த்தைகளை கோவையாக்கினால், "ம..மா..  பிள்ளைன் .. களை பாத்துப்பீங்....களா ?" என்பது தெளிவானது.. இது கேட்டு கண்ணனுக்கு துக்கம் இன்னும் அதிகமானது.. ஓவென அழ ஆரம்பித்தார்.. "பவித்ரா.. என்னை ஏமாத்திடாதே..." என்று கதற ஆரம்பித்தார். ஆனால் அவரது கதறல் தொடைக்குழிக்குள்ளே அடங்கிப் போனது.

மூத்த மருத்துவர் ஒருவர், "கண்ணன்.. பவித்ராவுக்கு பல்ஸ் இம்ப்ருவ் ஆகலே..  ஹார்ட் பீட் ரெகார்ட் சரியா இல்லே.. கிளாட் பார்ம் ஆகுது. அண்டிகொயக்குலன்ட்ஸ் போட்டாலும், கிளாட் பார்ம் ஆகுது. மனசை தேத்திக்கங்க கண்ணன்.." என்று மெல்ல சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது பவித்ரா ஏதோ ஆழ்ந்து மூச்சு விடுவது போல் நெஞ்சு மேலேறி வந்தது. மூன்று முறை அப்படி செய்திருப்பாள். பின் அவ்வளவுதான். எல்லாம் அடங்கி போனது. மருத்துவர் பவித்ராவின் நாடித்துடிப்பை பரிசோதனை செய்து பார்த்து, "சாரி கண்ணன்.. பவித்ரா இறந்து போய்ட்டாங்க..." என்று வேதனையுடன் கண்ணனின் கைகளை பிடித்துக் கொண்டு சொன்னார்.

கண்ணனுக்கு ஒன்று புரியவில்லை.. தான் சிறுவயது முதலே பார்த்து ஆசையுடன்  பழகிய தன் அன்பு மனைவி பவித்ரா இறந்து போனாளா? கண்ணனுக்கு நம்ப முடியவில்லை.. அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை.. அவருக்கு மூச்சு நின்று விடும் போல் ஆனது; பித்துபிடித்தார் போல் ஆனார்.

எல்லோரும்தான்..!

(தொடரும்)
 
Related Posts Plugin for WordPress, Blogger...