இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday, 6 February 2013

மதனப் பெண் 40 - சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம் !

சீனியர் வழக்குரைஞரும் அவரது மனைவி கண்மணியும் முன் வைத்த கருத்துகள், வேண்டுகோள் ஆகியன தற்போது கண்ணனை பேச வைத்தன.

"சார்..., நீங்க ரெண்டு பேரும் என்னோட, என் குழந்தைகளோட, என் வருங்கால  நன்மைக்காக பேசுறீங்க என்பதை என்னால நல்லாவே உணர முடியுது. ஆனா, பவித்ரா இறக்கறப்போ அவ பேசுனது என்னை இந்த விசயத்திலே ஒரு முடிவுக்கு வர முடியாமே தடுக்குது. அவ ஆஸ்பத்திரியிலே சாகக் கிடக்கிறப்போ, 'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டா.... அந்த கேள்விக்கு எது சரியான விடையாக இருக்கும் என்பது எனக்கு இன்னும் விளங்கலே...." என்று கண்ணன் தனது மனதில் இருந்த ஒரு ஐயப்பாட்டை இருவருக்கும் விளக்கினார்.

பிறகு அங்கிருந்த சட்ட புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தவாறு, "எனக்கு இருக்கிற சங்கடமெல்லாம், என்னை கல்யாணம் செஞ்சுகிற பொண்ணு என்னையும் என் வருமானத்தையும் பாத்து வேண்டுமானால் கல்யாணம் பண்ணிக்கலாம்; ஆனா என் குழந்தைகளை பாத்து கல்யாணம் செஞ்சுக்குவா என்கிறதிலே எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. குழந்தைகளுக்காக கல்யாணம் பண்ணி, வர்றவ குழந்தைகளை பாத்துக்காம போன கூட பரவாயில்லை... அதுக்கு பதிலா கொடுமை செய்ய ஆரம்பிச்சா... இல்லை பாரபட்சம் காமிச்சா... இல்லை நான் குழந்தைகளை கவனிச்சுகிறதிலே இடைஞ்சல் செஞ்சா என் மனசு என்ன வேதனைப்படும் என்கிறதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளைக்கு அவளுக்கென்னு ஒரு குழந்தை பிறந்தா.., தன் குழந்தையை பாப்பாளா ? இல்லை... என் குழந்தைகளை பாப்பாளா ? அதோட வர்றவ எந்த உள்நோக்கத்தோடு வர்றா என்பது யாருக்குத் தெரியும் ?" என்று தனது தரப்பில் உள்ள நியாயமான அச்ச உணர்வுகளை விளக்கினார்  கண்ணன்.

அவரே தொடர்ந்து, "நிம்மதிக்காக, சமூக வாழ்க்கைக்காக இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, பின்னாடி அந்தக் கல்யாணத்தாலேயே அந்த நிம்மதியை தொலைச்சிரக் கூடாது, என்கிறது என் அபிப்பிராயம்" என்று கண்ணன் தனது நிலையை தெளிவாக்கினார்.

இதையெல்லாம் பொறுமையாக தனது கணவர் நாகலிங்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கண்மணி, "கண்ணா ... நீ இந்த விசயத்துக்கு ரொம்ப தூரம் யோசனை செய்றேன்னு நான் நினைக்கின்றேன்.. அஃப்கோர்ஸ் ... யோசனை பண்ண வேண்டியது நியாயம்தான்... ஏன்னா.. கல்யாணமென்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். அதனாலே... நீ இப்படி யோசிக்கிறதிலே நியாயம் இருக்கு... உனக்கு சொந்தத்திலும் பெண் கிடையாது... இருந்தா அந்தப் பொண்ணேக்  கேட்கலாம். ஊர் உலகத்திலே பொண்டாட்டி, புருஷன் செத்தவங்க... முதோ கல்யாணத்திலே குழந்தை இருக்கிறவங்க, ரெண்டாம்  கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் புதிசில்லே.. (தனது கணவர் நாகலிங்கத்தைப் பார்த்து) இவரோட தம்பி மகனோட பொண்டாட்டி ஒரு குழந்தையை விட்டுட்டு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செத்துப் போய்ட்டா.. இப்போ அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இல்லையா?" என்று சற்று படபடப்புடன் கண்ணனை நோக்கி பேசினார்.

இப்போது சீனியர் நாகலிங்கம், "கண்ணா... உனக்கு வயசு கம்மி... உனக்கும், உன் குழந்தைகளுக்கும் ஒரு பெண் கட்டாயம் வேணும்... இதுக்கு உன்னோட பதில் என்ன...?" என்று பிரச்சனையை நெருக்கி, சுருக்கினார்.

இதற்கு கண்ணன், "எனக்கு நல்லா புரியுது.... ஆனா என்னோட முடிவுன்னு  கேட்டால் இப்போதைக்கு நான் சொல்ற பதில், நாம யாரிடமும் போய், என்னோட நிலையை விளக்கி, அவங்களை  சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம்... என்னோட நிலையை புரிந்து கொண்டு பொண்ணு தர தானா முன் வர்ற குடும்பதிலேருந்து பெண் பாப்போம், எல்லாம் ஒத்து வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஓரளவு படிந்து வந்தார்.

கண்ணன் இப்படியாவது ஒரு முடிவுக்கு வந்தாரே என்று நாகலிங்கமும், கண்மணியும் சற்று சந்தோசப் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து, "இப்படி பெண் பாக்கிறதுக்கு என்ன பண்ணப் போறே கண்ணா ?" என்று கண்மணி அவசரமாக கேட்டார்.

இதற்கு "என்னோட சூழலை விளக்கி கொஞ்ச நாள் கழித்து பேப்பர்லே விளம்பரம் செய்யப் போறேன்" என்று கண்ணன் பதிலளித்தார்.

இது அவர்கள் இருவருக்கும் சரியெனப்பட்டது. 'சுபம் சீக்கிரமே  நடக்கட்டும்' என்று வாழ்த்தி, இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார், கண்மணி.

இருவரிடமும் விடை பெற்று கண்ணன் வீடு திரும்பினார்.

எனினும் கண்ணன் தனது இந்த முடிவிலும் இரண்டு 'ரிசர்வேசன்' வைத்திருந்தார். 

அதை பின்னர் சொல்கின்றேன்.....

Monday, 4 February 2013

மதனப் பெண் 39 - இப்படி கூட நமது வாழ்வில் சில சமயம் நடந்து விடும் !

கண்ணன் கொடைக்கானலில் இருந்து திரும்பி வந்து தனது வழக்கமான பணிகளில் மனதை செலுத்திக் கொண்டிருந்தார். தனது இரு குழந்தைகளை தவிர வேறு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாத ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்படி சுமார் 1 மாதம் சென்று விட்டது. 

இந்நிலையில் கண்ணனுக்கு அவரது  சீனியர் வழக்குரைஞர் நாகலிங்கம் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தார். 

"ஹலொவ் கண்ணன் .... நான் பேசுறேன்... டைம் இருந்த வொர்க் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டு போயேன். ஐ வான்ட் டு ஹவ் எ டிஸ்கசன் வித் யு ...!" என்று சுருக்கமாக பேசினார்.

தனது சீனியர் ஏதாவது ஒரு முக்கிய வழக்கு குறித்து கலந்துரையாட அழைக்கின்றார் என்று கருதி, "எஸ் சார் ... இட் இஸ் மை பிளசர் ... நாளைக்கு சண்டே ... நிச்சயம் வர்றேன் சார்" என்று கண்ணன் தனது வருகையை பவ்யமாக உறுதிப்படுத்தினார். 

சீனியரின் வீட்டுக்கு ஞாயிற்று கிழமை காலை சுமார் 11 மணி அளவில் கண்ணன் சென்றார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், "இப்படி கூட நமது வாழ்வில் சில சமயம் நடந்து விடும்.. எல்லாம் சரி பண்ணிக்கலாம்... " என்று தனது கட்சிக்காரகளுக்கு முதலில் பயத்தை தெளிவித்து நம்பிக்கையையும்  உற்சாகத்தையும் ஊட்டுபவர் மூத்த வழக்குரைஞர் நாகலிங்கம். அன்றும் அதே உற்சாகத்துடன் அவர் கண்ணனை வரவேற்றார்.

"வா கண்ணா... அம்மா, குழந்தைகளெல்லாம் நல்லா இருக்காங்களா...? பவித்ராவோட திதிக்கு வந்தப்போ குழந்தைகளை பாத்தேன். ரோஹிணி நல்ல படிக்கிறாளா..? நீதான் எப்பவும் டல்லா இருக்கே.. கமான் சியர் அப் யங் மேன் .." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, "வா... கண்ணா .. எப்படி இருக்கே?" என்றவாறு சீனியரின் மனைவி கண்மணி கையில் காஃபி கோப்பைகளுடன் வந்தார்.

சீனியரும் அவரது மனைவி கண்மணியும் சிறிது நேரம் கண்ணனிடம் சில பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு கண்ணனை அழைத்த காரணம் தொட்டு சீனியர் பேச ஆரம்பித்தார். 


"கண்ணா... ஒரு முக்கியமான டிஸ்கசனுக்கு உன்னை நான்  கூப்பிட்டேன். ஆனா இப்போ உன்னோட டிஸ்கசன் பண்ணப் போறது யாரு தெரியுமா...? என்  டியர்தான்...!" என்று கண்மணியை ஓரக்கண்ணால் பார்த்தார். தொடர்ந்து, "என்ன டியர் ... நான் சொல்றது சரிதானே ?" என்று கண்மணியிடமும் கேட்டார் நாகலிங்கம். அதற்கு கண்மணி, "இதெல்லாம்  நான்தானே பேசியாகணும்.." என்று உதட்டோர புன்னைகையுடன் பதிலளித்தார். 

இருவரும் ஏதோ புதிராக பேசுகிறார்களே என்று கண்ணன் நினைத்துக் கொண்டிருந்த வெளியில், சீனியரின் மனைவி கண்மணி, "அது ஒண்ணுமில்லே கண்ணா.... நம்ம ரீலேசன் ஒருத்தர் இங்கே சிம்மக்கல் பக்கத்திலே இருக்கார். பேன்சி ஸ்டோர் வச்சிருக்கார். வியாபாரம் பரவாயில்லை. நல்ல குடும்பம். எதென்னாலும் உங்க சீனியர் பேச்சை தட்டமாட்டங்க.." என்று சற்று நிறுத்தி தனது கணவர் நாகலிங்கத்தை அதே ஓரக்கண்ணால் பார்த்தார்.


இதையடுத்து உரையாடலின் தொடர்ச்சியை நாகலிங்கம் எடுத்துக்கொண்டு சற்று தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "கண்ணா... நீ இன்னும் பவித்ராவோட வாழ்ந்துகிட்டிருகிறே என்கிறது எங்களுக்கு நல்லவே தெரியும்... பவித்ராவை உன்னாலே  மறக்க முடியாது என்கிறதிலே எங்களுக்கு மாற்றுக் கருத்து துளிக்கூட இல்லே.... மறக்கவும் கூடாது.... அதுதான் நியாயம். ஆனா உன் குழந்தைகளை நினைச்சு பாரு.. அதுகளுக்கு இப்பவே பவித்ராவோட இடத்திலே இன்னொரு பொண்ணே அறிமுகப் செஞ்சு வெச்சிட்டா அவங்க காலப்போக்கிலே அவளை தங்களோட பெத்த தாயா பாக்க ஆரம்பிச்சுடுவாங்க... கொஞ்சம் வளந்து பெருசான இதுக்கு சாத்தியம் குறைஞ்சு போய்டும்... அன்னியோன்யம் வராது... காலம் ரொம்ப சீக்கிரமா போய்டும். உனக்கும் ஒரு துணை வேணும் என்கிறது எங்களோட அபிப்பிராயம். கொஞ்சம் திங்க் பண்ணிப் பாரு..." என்று மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில் வாதிடுவது போல் கண்ணனிடம் பேசினார். 


இதையடுத்து சீனியரின் மனைவி கண்மணி பேசுகையில், "அந்த சிம்மக்கல் ரீலேசனுக்கு மூணு பொண்ணுங்க.... ரெண்டு பசங்க... மூத்த பொண்ணு பி.எ. டிஸ்கன்டினியு.  இருந்தாலும் நல்ல குடும்பபாங்கா பவித்ரா மாதிரியே இருப்பா... வசதி கம்மியின்னாலும் நல்ல குணம்.. பொறுமைசாலி...  அவளுக்கு வரன்  எதுவும் செட்டாகலே. தட்டிக் கழிச்சு போய்க்கிட்டுருக்கு. ஆனா உனக்கும் அவளுக்கும் பொருத்தம் நல்ல இருக்கு.  உனக்கு செவ்வா தோஷம், அவளுக்கும் செவ்வா தோஷம்.. ஒத்துப்போகுது. பொறுப்பு தெரிஞ்ச பெரிய குடும்பம் என்கிறதாலே உன் குழந்தைகளை நல்ல பாத்துப்பா. உங்க சீனியர் பேசினா ரெண்டாம் தாரத்துக்கு  நிச்சயம் ஒத்துப்பாங்க." என்றார் சற்று பெரு மூச்சுடன்.. சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்லி விட்ட ஒரு திருப்தி அவரது முகத்தில் தெரிந்தது.


எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு, தான் வழக்குப் பிரச்சனைகாக பேச அழைக்கப்படவில்லை என்பதும், தனது வாழ்க்கைப் பிரச்சனைக்காக பேச அழைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதும் புரிந்தது. 

கண்ணன் இதற்கு என்ன பதில் சொன்னார்....? 

அவர் இந்தப் பிரச்சனைக்கு ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுதான் என்ன..?


(தொடர்கின்றேன்)


Sunday, 3 February 2013

மதனப் பெண் 38 - ஒரு சித்தியால் தாய்க்குரிய அன்புடன் நடந்து கொள்ள முடியுமா?

பொங்கல் விடுமுறைக்காக கண்ணன் கொடைக்கானல் சென்று தனது மகள் ரோஹிணியை அழைத்து வந்தார். பவித்ரா இறந்த காரணத்தால் வீட்டில் பொங்கல் வைக்கவில்லை. எனினும் கண்ணனின் தாயார் வரலக்ஷ்மி தனது பேரக் குழந்தைகளுக்காக சிறிது  சக்கரை பொங்கல் செய்தார்.

பவித்ராவின் வருஷ திதி 21-ஆம் தேதி வந்தது. புரோஹிதம் செய்யும் ஐயரை அழைத்து வந்து பவித்ராவிற்கு ஆத்மார்த்தமாக திதி கொடுத்தார். விபத்தில்  அகால மரணம் என்பதால் வைதீக காரியங்கள் எளிய முறையில் செய்யப்பட்டன. கண்ணனின் சித்தப்பாமார்கள், மாமன்மார்கள், நண்பர்கள் என நெருங்கியவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

பவித்ராவின் நிழற்படத்திற்கு மாலை அணிவிக்கும் போது, கண்ணன் மனதளவில் உடைந்து போனார். அதை அவர் கண்களில் பொங்கி வெளி விழத்  தயாராக நின்று கொண்டிருந்த நீர்த் துளிகள் அனைவருக்கும் காட்டியது. ரோஹினி மௌனமாக நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு விவரம் புரிந்து விட்டது. ஆனால்... பாவம்...  சத்யதேவிற்கு எதுவும் புரியவில்லை. தனது தாத்தாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

பவித்ரா கண்ணனை தனிமையில் தவிக்க விட்டுச் சென்று ஓராண்டு காலம் ஓய்ந்து போனது. ஆனால் கண்ணனின் மனதில் அன்பு மனைவி பவித்ராவின் நினைவுகள் ஏதும் சற்றும் ஓயவில்லை.

நீதிமன்றத்திற்கு செல்லும் முன் கோட், கவுனை  நன்கு துடைத்து பவித்ரா எடுத்துக் கொடுப்பாள். கார் வரை வந்து வழியனுப்பி வைப்பாள். நீதிமன்றத்தில் இருந்து திரும்பி வந்தவுடன் அன்றலர்ந்த செந்தாமரையாக பவித்ரா நன்கு முகம் கழுவி, நேர்த்தியாக உடை உடுத்தி, கொஞ்சம் பூ என்றாலும் நன்கு மணம் வீசும் மதுரை மல்லிகை வைத்துக் கொண்டு   பளிச்சென வந்து வரவேற்பாள். தொடர்ந்து ஒரு கையில் சொம்பு  நீரும், மற்றொரு கையில் சூடான டிகிரி காபியும் கொண்டு வந்து கொடுப்பாள். இவை யாவும் கண்ணனின் மனதில் திரும்ப திரும்ப வந்து, அலையாக அடித்துக் கொண்டிருந்தன. கட்டிய  மனைவிக்காக ஆசையாக கட்டிய வீடு கண்ணனைப் பொறுத்தவரை ஒரு சுழியமாக தெரிந்தது. 

கண்ணன் என்னதான் மெத்தப் படித்தவர் என்றாலும், பவித்ரா இல்லாத ஒரு வாழ்வை சட்டென ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதே நேரத்தில் பவித்ராவின் இடத்தில் பவித்ரா போல தனக்கு ஒரு அம்மா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மகள் ரோஹிணி சொன்ன வார்த்தைகள் கண்ணனை சிறிது பாதிக்கவே செய்திருந்தது. 


பவித்ராவின் இடத்தில் இன்னொரு பெண்ணை கண்ணனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பவித்ரா போல் தனக்கு இன்னொரு அம்மா வேண்டும் என்று குழந்தை ரோஹிணி  முன் வைத்த கோரிக்கையை கண்ணனால்  அவ்வளவு எளிதாக நிராகரிக்கவும் முடியவில்லை. 

மனைவி இறந்தவர் மறுமணம்  கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. தனக்காக செய்து கொள்ளாவிட்டாலும், தன் குழந்தைகளுக்காக செய்து கொள்வதிலும் தவறில்லை. ஆனால் பவித்ரவே கண்ணனின் நாடி, நரம்புகளில் எல்லாம் முழுக்க வியாபித்து இருக்கும் போது, எப்படி இந்தப் பிரச்சனையை சமரசம் செய்து கொள்ள முடியும்? 


கட்டிக் கொண்ட மறு தாரத்துடன் குடும்பம் நடத்துவதா..? 
இல்லை... குழந்தைகளுக்காக கட்டிக் கொண்டவள் என்று நடத்துவதா...? அப்படியானால் அது இன்னொரு பெண்ணின் கல்யாணக் கனவை சிதைப்பது போலாகுமே..! 
வந்தவள் குழந்தைகளை கவனித்துக் கொள்வாளா? 
இல்லை... சித்தி கொடுமைகள் செய்து நோகடிப்பாளா?
பெற்ற குழந்தைகளாக நடத்துவது போன்று நாடகம் வேண்டுமானாலும் ஆடலாமே தவிர, உண்மையில் ஒரு சித்தியால் அவ்வாறு ஒரு தாய்க்குரிய அன்புடன் நடந்து கொள்ள முடியுமா? அதுவும் தனக்கென ஒரு குழந்தை பிறந்து விட்டால் இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டுமா?


இப்படி பல நெருடலான பிரச்சனைகளை மனதில் கொண்டு ரோஹிணியை பள்ளிக்கு கொண்டு சென்று விட கண்ணன் காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார்.

(இது உள்ளபடி ஒரு நெருடலான பிரச்சனைதான். இதற்கு கண்ணன் விரைவில் ஒரு முடிவு செய்தார்.... அது என்ன என்று ஊகிக்க முடிகிறதா...?)

(மீண்டும் தொடர்வோம்)
Related Posts Plugin for WordPress, Blogger...