இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Thursday, 13 October 2011

மதனப் பெண் 7 - பவித்ரா ஒரு அழகு தேவதை !

"அம்மா.. பேப்பர்லே கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து யாரோ அப்புசாமின்னு ஒருத்தர் தன்னோட மகள் ஜாதகத்தை அனுப்பி இருக்கார்.. மெட்ராஸ்லே இருக்காங்கலாம்" என்றவாறு கண்ணன் சமையற்கட்டில் சாதம் வடித்துக் கொண்டிருந்த தன்னுடைய தாயை பார்க்கப் போனார். 

"பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கப்பா?" என்றாள் அம்மா வரலக்ஷ்மி.  

:"இருக்குன்னு எழுதியிருக்கு" என்றார் கண்ணன்.

"சரி என்கிட்டே கொடு ... நான் தவிட்டு சந்தையிலே இருக்கிற நம்ம கணபதி ஐயர் கிட்டே போய் பொருத்தம் பாத்துட்டு வர்றேன்"

"அம்மா.. எனக்கு இப்போ இந்தக் கல்யாணம் அவசியமா?" 

அம்மா சடக்கென புருவத்தை உயர்த்திப் பார்த்தாள். என்ன இருந்தாலும் பெத்த மனம் அல்லவா? அதுவும் ஒரே மகன். வேறு பிள்ளைகள் இல்லை. கையில் வேறு இரண்டு குழந்தைகள். கண்ணனுக்கு வயதோ 29. இப்படி பல கோணங்களில் கண்ணனின் அம்மா யோசித்தாள்.

"அம்மா.. கொஞ்சம் நினச்சு பாருங்க .. அவ இருந்த இடத்திலே என்னலே இன்னொருத்தியை நினைச்சு பார்க்க கூட முடியலே.. ஏதோ நீங்க சொன்னீங்களேன்னு நான் பேப்பர்லே விளம்பரம் கொடுத்தேனே தவிர.. எனக்கு இந்தக் கல்யாணத்திலே கொஞ்சம் கூட இஷ்டமில்லே.. நான் அப்படியே இருக்கேன்" என்றார் கண்ணன்.

"நீ இருந்தறலாம்.. மகராசி இந்தப் பிஞ்சு குழந்தைகளை பெத்துப் போட்டு போய் சேர்ந்துட்டா.. இதுக  என்ன பண்ணாங்க பாவம்.. ? இதுகளை நினைச்சாவது நீ கல்யாணம் பண்ணிதான் ஆகனம்.. எனக்கும் வயசாகிட்டு வருது.." என்றார் வரலக்ஷ்மி.


இப்படி இருவரும் பேசிக் கொண்டார்களே தவிர, இவர்கள் இருவரின்  நினைவுகள் அப்படியே ஒரு பிளாஷ்பேக்காக பின்னோக்கி நகர்ந்தன. 

கண்ணனின் அப்பா வேதாசலம் ஒரு சிறந்த மருத்துவர். ஊருக்கெல்லாம் இலவசமாகவோ, குறைந்த பீஸ் வாங்கிக் கொண்டோ மருத்துவம் பார்த்தார். தீர்க்க முடியாத நோய்களையெல்லாம் தீர்த்தார்.  ஆனால் தனக்கு தீராத நோய் வரப்போகிறது என்பதை அவர் அறியவில்லை. நல்ல பேர், புகழ், சம்பாத்தியம் என்று இருந்த அவருக்கு மூளையில் கேன்சர் நோய் வந்தது. அவர் படுத்திருக்கும் போது அவரை பார்க்க வந்த பழைய பேசண்ட் ஒருவர், "என்ன டாக்டர் சார்.. நான் ஒரு ஆல் ரௌண்டர்.. எனக்கு எல்லா பழக்கமும் உண்டு.. அப்பப்போ உங்ககிட்டே மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு இன்னிக்கு வரைக்கும் அதே ஆல் ரௌன்ட்லேதான் இருக்கேன். இப்போ எனக்கு வயசு 63  ஆகுது. இன்னிக்கு வரைக்கும் பெருசா ஒரு நோயும் கிடையாது. ஆனா உங்களுக்கு வயசு 41 தான் ஆகுது. எந்த மேற்படி பழக்கமும் இல்லே. ரொம்ப சுத்திபத்தி. உங்களுக்கு எப்படி கேன்சர் வந்திச்சுன்னு தெரியலையே ?" என்று தாடையை தடவியவாறு கேள்வி கேட்டுப் போனார்.  வேதாசலம் பதில் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டே இருந்தார். 

வேதாச்சலத்திற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மூளையில் அறுவை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் விதி யாரை விட்டது. அறுவை தேதிக்கு 10  தினங்கள் முன்னரே ஒரு நாள் இரவு வேதாச்சலத்திற்கு திடீரென கடுமையான வலிப்பு வந்து, கூடவே வாந்தி பேதி கண்டு, மயக்கம் அடைந்தார். பின் அதே மயக்கத்திலேயே நினைவு திரும்பாமல் இறந்து போனார். அப்போது கண்ணனுக்கு வயது 17. +2 முடித்த கையுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு சட்டம் படித்துக்கொண்டிருந்தார். 

நெற்றியில் வட்டக் குங்குமம். எப்போது பார்த்தாலும் மங்களமாக தெரியும் முகம். செவ்வாக் கிழமை தங்க வளையல். வெள்ளிக் கிழமை கல் பதித்த  வளையல். மற்ற நாட்களில் கொஞ்சம் கிரண்டான கண்ணாடி வளையல்.  வண்ணம் மிகுந்த பெரிய கம்பெனி புடவைகள். வாய்க்கு ருசியான சமையல்.  எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. இப்படி வாழ்ந்தவர் வேதாச்சலத்தின் மனைவி. வேதாசலம் இறக்கும் போது அவருக்கு வயது 38. 

வேதாச்சலத்தின் அந்திமக் காரியம் நடக்கையில் தனது தாயின் தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து, குங்குமப் பொட்டை அழித்து, வளமாக வாழ வேண்டிய வயதில் தனது தாயை கைம்பெண்ணாக்கிய காட்சியும், கோலமும் கண்டு கண்ணன் துடித்துப் போனார். 

குடும்பத் தலைவன் இருக்கும் வரைதான் எல்லா மரியாதையும். அதுவும் சிறிய வயதில் ஒரு குடும்பத் தலைவர் திடீரென மரணமடைந்தால், அக்குடும்பத்திற்கு ஏற்படும் சிக்கல் நிறைய. அப்படிப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு கண்ணனும், அவரது விதவைத் தாயும் வாழத் தொடங்கினர். வேதாசலம் கீழவெளி வீதியில் கட்டிக் கொடுத்த வீடு, கொஞ்சம் கையிருப்பு, இன்சூரன்ஸ் தொகை, பிறந்த வீட்டில் போட்ட நகைகள், பிறகு வேதாசலம் செய்து கொடுத்த நகைகள் ௦- இவைதான் கண்ணன் படித்து முடித்து சம்பாதிக்கும் வரை சமாளிக்க உள்ள சொத்துக்கள். 

நிலைமையை உணர்ந்து கண்ணன் நன்றாகப் படிக்க ஆரம்பித்தார். பகுதி நேர வேலைகள் செய்து கொஞ்சம் பணம் சேர்த்தார். அதில் சேலைகள் வாங்கிக் கொடுத்து தாயை சிரிக்கச் செய்தார். இருக்கும் வீடு இருவருக்கு அதிகம் என்ற காரணத்தால் அதில் ஒரு பகுதியை தடுத்து ஒரு சிறிய குடும்பத்திற்கு வாடைகைக்கு விட்டார். அந்த வாடகைப் பணம் கண்ணனின் கல்லூரி கட்டணத்தை செலுத்த உதவி செய்தது. இன்சூரன்ஸ் தொகையை அப்படியே வங்கியில் டெபாசிட் செய்ததால் மாதாமாதம் வட்டி வந்தது. அது குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. 

இப்படி 5 ஆண்டுகள் ஓடி விட்டன. கண்ணன் இறுதியாண்டு படிக்கும் போது கண்ணனின் திருமணப் பேச்சை அவரது தாய் மாமா எடுத்தார். அப்போது கண்ணனுக்கு வயது 22.   

"லக்ஷ்மி.. கண்ணன் இந்த மே மாசத்தோட வக்கீல் படிப்பை முடிக்கப் போறான். அப்புறம் ஒரு சீனியர்கிட்டே போய் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டு நல்ல சம்பதிக்கப்போறான். கண்ணன் புத்திசாலி. நல்ல வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீயே சமைச்சு போடுவே... என்மகளுக்கு அந்த வேலையே கொடுக்கலாமுன்னு இருக்கேன்," என்று கண்ணனின் தாய் மாமா சுந்தரம் மெல்ல பேச்சை ஆரம்பித்தார். 

இவர் கோவையில் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளராக இருக்கிறார். கண்ணனை தோளில் தூக்கிப் போட்டு வளர்த்த மாமா. கண்ணனுக்கு மாமா மீது நிரம்ப மரியாதை, பாசம். அதுவும் கண்ணனின் அப்பா இறந்த பிறகு இருவரும் பழகுவது பார்த்தால் நண்பர்கள் போல் தெரியும். அப்பா மறைந்த சோகத்தை மாமாதான் மெல்லமெல்ல ஆற்றினார். அவருடன் அவரது மகள் பவித்ராவும் சேர்ந்து கொண்டு உற்சாகப்படுத்தினாள். இருவருக்கும் சிறு வயது முதல் ஒரு ஈர்ப்பு. 

"அண்ணே... நீங்க சொல்றது சரிதான்... எங்களுக்கு ஒன்னும் பெருசா வருமானம் இல்லே.. கண்ணன் கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிக்கட்டும் அண்ணே.. கிணத்து வெள்ளத்தை ஆத்து வெள்ளமா  அடிச்சிக்கிட்டு போகபோவுது" என்று லஷ்மி இழுத்தாள்.

"நீ சொல்றதும் சரிதான். சின்ன வயசிலேயே அவளுக்கு இவன், இவனுக்கு அவள்-ன்னு நாம பேசிட்டோம். இப்போ கண்ணன் லீவு விட்ட கோயமுத்தூர் வர்றதும், இவளுக்கு லீவு விட்ட நான் அத்தையை போய் பாத்துட்டு வர்றேன் என்று பவித்ரா இங்கே மதுரை வர்றதும் ...  நான் பொண்ணை பெத்தவன் லஷ்மி.. சின்னச் சிறுசுகளை சேர்த்து வச்சுடலாம்..." என்று ஒரு தகப்பனின் அங்கலாய்ப்புடன் சுந்தரம் கூறினார். 

"சரி... எதுக்கும் உன் மாப்பிள்ளை கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ..." என்று சிரித்தவாறு கண்ணனின் திருமணத்திற்கு சொல்லாமல் சொல்லும் விதத்தில் பச்சைக் கொடி காட்டினார் லஷ்மி. இது வரை கண்ணனை தனது 'மகனாக' பேசிக் கொண்டிருந்த லஷ்மி இப்போது சுந்தரத்தின்  'மாப்பிள்ளையாக்கி' பேசினார்.

சுந்தரத்திற்கும் ஒரு நிம்மதி.. திருப்தி....

ஒரு நல்ல நாளில் கண்ணனுக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நடந்தேறியது.

18  வயது பவித்ரா ஒரு அழகு தேவதை ! 

(தொடரும்..) 

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

nice

Advocate P.R.Jayarajan said...

உங்களிடமிருந்து பின்னூட்டம் ஏதும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்... நன்றி...

ஒரு இதழ் இத்தொடர்கதையை பிரசுரம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறது.....

இராஜராஜேஸ்வரி said...

ஒரு இதழ் இத்தொடர்கதையை பிரசுரம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறது....//

அருமை. பாராட்டுக்கள் ..வாழ்த்துக்கள்.

Advocate P.R.Jayarajan said...

நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...