இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday 19 October 2011

மதனப் பெண் 12 - என்ன குழந்தை பிறக்கப் போவுது டாக்டர்?

வம்சம் தழைக்க தனக்கு ஒரு பேரன் பிறக்கப் போகிறான் என்று நினைத்து  வரலக்ஷ்மி மிகவும் மகிழ்ந்தார். 

பெண் குழந்தையை லக்ஷ்மி கடாட்சமாக வரவேற்ற கண்ணனின் சித்தப்பாமார்கள் உள்ளிட்ட அனைவரும் தற்போது தங்கள் மருமகள் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்ததும், இப்போது பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். 

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது ஆண்டவன் நிர்ணயம் செய்தது! நம் கையில் ஏதும் இல்லை !

"நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!"

அதுபோல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கண்ணனோ-பவித்ராவோ ஏதும் நினைக்கவில்லை. பிறக்கப் போகும் குழந்தை எதுவாக இருந்தாலும் அது நன்றாக பிறக்க வேண்டும்... நன்றாக இருக்க வேண்டும் என்றே நினைத்தார்கள்.ஆண்டவன் சித்தம் எதுவோ அது நன்றாக நடக்கட்டும் என்று அவர்கள் இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை வரவேற்க சித்தமாக இருந்தார்கள். எனினும் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக, விருப்பமாக இருந்தது. குறிப்பாக வரலக்ஷ்மியின் அவாவாக இருந்தது.

பவித்ராவை கண்ணன் தவறாமல் டாக்டர் செகப்புக்கு அழைத்து சென்றார்.  கரு நன்றாக உள்ளதா... இயல்பான பிரசவத்திற்கு தோதான நிலையில் உள்ளதா என்பதை அறிய டாக்டர் அவ்வப்போது ஸ்கேன் செய்து பார்த்தார். 

அந்த விவரங்களை கண்ணன் கேட்டறிந்து கொண்டார்.. ஒரு முறை, கண்ணன்  டாக்டரிடம், "டாக்டர்.. நீங்க இதுவரைக்கும் பவித்ராவுக்கு  மூன்று தடவை ஸ்கேன் செய்து பர்த்து இருக்கீங்க.. கரு நல்ல வளர்ந்து வருதுன்னு சொன்னீங்க.. எனக்கு ரொம்ப சந்தோசம்.... நான் கேட்கக் கூடாது.. நீங்களும் சொல்லக் கூடாது.. இருந்தாலும்... கேட்டா என்ன என்று ஒரு ஆர்வம். அதனாலே கேட்கிறேன்.. நீங்க டாக்டர்.. நான் வக்கீல்.. அதனாலே தப்பில்லைன்னு நான் கேட்கிறேன்.." என்று பீடிகை போட்டவரே கண்ணன், தொடர்ந்து, "பிறக்கப் போற  குழந்தை என்ன குழந்தைன்னு ஸ்கேன்லே தெரியும். அதனாலே பவித்ராவுக்கு என்ன குழந்தை பிறக்கப் போவுது டாக்டர்?"  என்று கேட்டார்.

ஆனால் இந்தக் கேள்விக்கு தனது புருவத்தை உயர்த்தி டாக்டர் வியப்பாக  பார்க்கவில்லை. அதாவது இந்தக் கேள்வியை டாக்டர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று சொன்னால் அதனால் குழந்தைக்கு எந்த பாதகமும் விளையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த டாக்டர் பளிச்சென  "மிஸ்டர் கண்ணன்.... உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது" என்று சொன்னார். 

கண்ணனுக்கு சில நொடிகள் ஒரு தடுமாற்றம் முகத்தில் தோன்றினாலும், "நிஜமாவா டாக்டர்?" என்று சற்று சுருதி குறைந்த  குரலுடன் கேட்டார்.

"ஆமா மிஸ்டர் கண்ணன்.. 'பிமர் போன்' வளர்ச்சியை ஸ்கேனில் பார்த்தால் இது சென் பெர்சென்ட் பெண் குழந்தைதான்" என்று திட்டவட்டமாக சொன்னார்.

தனக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறக்கப் போகிறது என்பதை அறிந்த கண்ணன், குழந்தை எதுவானாலும் தாயும்-சேயும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று டாக்டர் சொன்ன விவரத்தை கண்ணன், பவித்ராவிடம் சொன்ன போது,  அவள், "ரோஹிணிக்கு தம்பிப் பாப்பா பிறக்கப் போவுதுன்னு நினைத்தோம்.. இப்போ தங்கச்சிப் பாப்பா பிறக்கப் போவுது.. அவ்வளவுதானே... நீங்க எனக்கு ஆண் குழந்தை.. உங்களுக்கு நான் பெண் குழந்தை.. வேணுமுன்னா ஒரு வருஷம் கழிச்சி ஒரு டிசம்பர் மாசத்திலே கொடைக்கானல் போலம்ப்பா!" என்று சொல்லி உதட்டை சுழித்து சிரித்தாள். 

பெண் குழந்தை பிறக்கப் போவதாக கண்ணன் பவித்ராவிடம் சொன்ன விவரம், அவளது தாய், தந்தைக்கு சென்றது. அங்கிருந்து வரலக்ஷ்மியின் காதுகளை அடைந்தது. அவர் கொஞ்சம் டிஸ்அப்பாய்ட்மென்ட் ஆனார். இது தொடர்ந்து கண்ணனின் சித்தப்பா, சித்தி, இதர மாமா, மாமி என அனைவரின் காதுக்கும் பரவியது. 

என்ன குழந்தை பிறக்கும் என்ற ஆவல் எல்லோருக்கும் மறைந்துவிட்டது. மாறாக பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் பெயர் தேட ஆரம்பித்து விட்டனர்.

இப்படியே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. 

ஒரு நாள் முற்பகல் பவித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இம்முறையும் பவித்ரா தனது தாய் வீடான கோவை செல்ல வில்லை. மதுரையில், தனது அன்பு மாமாவும், ஆசைக் கணவனுமான கண்ணனின் அருகிலேயே இருந்து பிள்ளை பெற்றெடுக்க விரும்பி தாம் முதலில் சேர்ந்த அதே மருத்துவமனையிலேயே இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக சேர்ந்து கொண்டாள்.

அன்று மதியமே பவித்ராவிற்கு பிரசவ வலி அதிகமாகி, பனிக் குடம் உடைந்து விட்டது. உடனே பவித்ரா பிரசவ அறைக்கு மாற்றப்பட்டாள். இம்முறையும் பவித்ராவிற்கு இயல்பான பிரசவம் நடப்பதற்கு தோதான நிலையில் அவளது உடல் இருந்த காரணத்தால் மருத்துவருக்கு அறுவை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்  ஏதும் ஏற்படவில்லை.

கண்ணன் பிரசவ அறைக்கு வெளியே ஒரு வித பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார். பிரசவம் நன்றாக நடக்க வேண்டும் என்று வரலக்ஷ்மி கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவ்வாறே சுந்தரமும், சர்மிளாவும் இருந்தனர்.

பவித்ராவை பிரசவ அறைக்குள் அழைத்து சென்று சுமார் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். அப்போது மதியம் சுமார் மூன்று மணி.

திடீரென உள்ளே இருந்து "மாமா......." என்று பவித்ரா உரக்க கத்தும் குரல் வெளியே கேட்டது. அனைவரும் 'என்னமோ.. ஏதோ' என அந்த பிரசவ அறையின் மூடியிருந்த கதவின் அருகே ஓடிச் சென்று நின்று கொண்டனர்..

சிறிது நேரத்தில் அந்த அறையின் கதவை ஒரு வித பரபரப்புடன் டாக்டர் திறக்கும் அறிகுறி தென்பட்டது..

அவர் என்ன சொன்னார்...? 

(தொடரும்..) 

Tuesday 18 October 2011

மதனப் பெண் 11 - இது ஊட்டியில் அடித்த லூட்டி!

'ஜில்பிலியுடன்' அனைவரும் சுகமாக மதுரை வந்தடைந்தனர். 

எல்லோரையும் கண்ணின் தாயார் வரலஷ்மி வரவேற்றார். பேத்தியை மெல்ல தூக்கி உச்சி மோர்ந்து தோளில் தூக்கி போட்டுக் கொண்டார். 

பவித்ரா சமையல் கட்டுக்குள் சென்று எல்லோருக்கும் உணவு தாயார் செய்தார். மறுநாள் காலை சுந்தரம் கோவை புறப்பட்டு சென்றார்.

கண்ணனும்-பவித்ராவும் குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்து வளர்த்தனர். ஒரு நல்ல நாளில் அனைவரையும் அழைத்து குழந்தைக்கு கண்ணன் 'நாமகரணம்' செய்து 'தொட்டிலில் இட்டார்.' 'ஜில்பிலி'-க்கு ரோஹிணி என்று பெயர் சூட்டப்பட்டது. 

கண்ணன் மெல்ல மெல்ல நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார். பணிப்பளு கூடிக் கொண்டே வந்தது. நிறைய வழக்குகள் வந்த காரணத்தால் தனது சீனியர் அலுவலத்தில் இருந்து கண்ணன் நின்று விட்டார். பின் வீட்டிலேயே ஒரு அறையில் தனியாக அலுவலகம் வைத்து நடத்தினார். 

எது எப்படி இருந்தாலும் பவித்ராவிடம் கண்ணனுக்கு இருந்த காதலும்,  ஆசையும், அன்பும் சற்றும் குறையவேயில்லை. அதே மாதிரி பவித்ராவிற்கும். இந்த அன்பும், ஆசையும் பன்மடங்கு கூடிக் கொண்டே சென்றது. வாரத்தில் ஒரு நாள் சினிமா, சிம்மக்கல் கோனார் கடை டிபன் அல்லது பனமரத்து முனியாண்டி விலாஸ் பிரியாணி, ஐஸ் கிரீம் என மகிழ்ச்சியாக சென்றது. கண்ணனிடம் பணம் சேரும் போதெல்லாம் அவர் பவித்ராவிற்கு சிறு சிறு நகைகள் செய்து போட்டார். பண்டிகை நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

அதே நேரத்தில் குழந்தை ரோஹினியும் தவழ்ந்து, நின்று, மெல்ல கைபிடித்து நடந்து, பின் தானாக நடந்து வளர்ந்து கொண்டே வந்தாள். 'கதக்கா...  பிதக்கா' என்ற அவளது மழலை மொழியில் குடும்பமே மகிழ்ந்தது. ரோஹிணிக்கு ஒரு நல்ல நாளில் காது குத்தும் வைபவமும் சிறப்பாக நடந்தது. 

ரோஹிணியை ஒரு விஜய தசமியின் போது பிளே ஸ்கூலில் கண்ணன் சேர்த்தார். இப்படி இரண்டரை வருடங்கள் சென்று விட்டன. 

டிசம்பர் மாதம், நீதிமன்றம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை விட்டிருந்த போது, பவித்ரா மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு கண்ணன் கோவையில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு விருந்து, உபசாரம் என இரண்டு நாட்கள் சென்றன. 

"இப்படியே இங்கேயே இருப்பதற்கு ரெண்டு நாள் ஊட்டி போயிட்டு வாங்களேன்.. குழந்தையை நாங்க பாத்துக்கிறோம்" என்று சுந்தரமும், சர்மிளாவும் கூறினார். "இப்போ ரொம்ப குளிரா இருக்குமே.." என்று பவித்ரா கூறினாள். "அதுக்குத்தான் போயிட்டு வாங்கன்னு சொல்றோம் ... கிளைமேட் என்ஜாய் பண்ணலாம் இல்லையா?" என்று சர்மிளா உதட்டோரம் ஒரு புன்சிரிப்புடன் சொன்னார். சரியென குழந்தையை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு கண்ணனும் பவித்ராவும் ஊட்டி சென்றனர்.

ஊட்டியில் டிசம்பர் மாத குளிர் உள்ளபடி பல்லை கிட்டியது. உயர்தர விடுதி ஒன்றில் கண்ணனும், பவித்ராவும் தங்கிக் கொண்டு ஊட்டியை சுற்றிப் பார்த்தனர். நல்ல குளிர்.. ஆனால் அவர்களுக்கு அறையில் போர்வை தேவைப்படவில்லை. தனது மம்மி சர்மிளா சொன்னது பவித்ராவிற்கு நியாபகம் வந்தது.

பின் கோவை கிளம்பி, கண்ணன், பவித்ரா, ரோஹிணி அனைவரும் மதுரை வந்தடைந்தனர்.

ஒரு மாத காலம் சென்றிருக்கும். பவித்ராவிற்கு குமட்டிகுமட்டி வாந்தி வந்தது. 

"என்ன பவித்ரா.. உடம்பு சரியில்லையா?" என்று கண்ணன் கேட்டார்.

அதற்கு பவித்ரா, "உம்.... இது ஊட்டியில் அடித்த லூட்டி ! அதுக்கு  பிரைஸ் கிடைச்சிருக்கு" என்றாள்.

கண்ணனுக்கு புரிந்தது.. 

பவித்ரா மீண்டும் கர்ப்பவதி ஆனாள்.

(தொடரும்..) 

Sunday 16 October 2011

மதனப் பெண் 10 - "நீ இல்லாமே எனக்கு அங்கே போரடிக்குதடி செல்லம்..."

பவித்ராவின் வீடு கோவையில் விமான நிலையம் செல்லும் சாலையில் அழகு நகரில் இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டியில் பவித்ராவையும், குழந்தையையும் சுந்தரம் அழைத்து வந்தார். பிரயாணத்தின் போது குழந்தையை பவித்ராவும், அவளது தாய் சர்மிளாவும் பத்திரமாக துணியில் சுற்றி எடுத்து வந்தனர். கோவை வந்தவுடன் ஒரு கார் பிடித்து அனைவரும் வீட்டை அடைந்தனர்.

பவித்ராவை குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவளது தாய் சர்மிளா ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துக் கொண்டார். தாங்கள் சுகமாக  வந்து சேர்ந்த விவரத்தை பவித்ரா உடனே தொலைபேசி செய்து கண்ணனுக்கு தெரிவித்தாள். 

பவித்ராவையும் குழந்தையையும் பார்க்க சுந்தரத்தின் அலுவலக நண்பர்கள் தினமும் ஒன்றிரண்டு பேர் குடும்பத்துடன் வந்து சென்றனர். சுந்தரம் அலுவலக நேரம் போக தனது குட்டிப் பேத்தியுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்.  

குழந்தையை குளிப்பாட்டுவது, அதனுடன் குழந்தை மொழியில் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பது, பவித்ராவிற்கு வேண்டிய உதவிகள் செய்வது என சர்மிளாவிற்க்கும் பொழுது போனது. குழந்தைக்கு அவ்வப்போது பால் கொடுப்பது, அழுதாள் என்னவென்று பார்ப்பது, துணி மாற்றுவது என்று பவித்ரவிற்கும் நேரம் போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து சிறிது நேரம் பவித்ராவிடம் பேசி விட்டு குழந்தையை பார்த்துச் சென்றனர். 

கண்ணனுக்கு தினமும் தொலைபேசி செய்து பேச பவித்ரா மறப்பதில்லை. "என் மாமா செல்லம்... சீக்கிரம் வந்துடுறேன் கண்ணு.. நீங்க சமத்தா வேளாவேளைக்கு  சாப்பிடனும்.. என்ன? வொர்க்லே கான்சன்டிரேட் பண்ணுங்க.. என் நினைப்பு பூராவும் அங்கேதான் இருக்கு.. உங்க குஜிலி பாப்பா உங்களை மாதிரியே ரொம்பப் படுத்துரப்பா.." என்று அவளுக்கே உரித்த ஹஸ்கி குரலில் பேசி கண்ணனை சமாதனப்படுத்துவாள். 

இப்படியே 20  தினங்கள் சென்றன. பவித்ராவையும், குழந்தையுயும் பார்க்க கண்ணன் மிக்க ஆவலாக இருந்தார். ஒரு வெள்ளிகிழமை மாலை தனது தாயிடம் சொல்லிவிட்டு கண்ணன் கோவை கிளம்பினார். 

"வாங்க மாப்பிள்ளை" என்று சுந்தரமும் அவரது மனைவி சர்மிளாவும், கண்ணனை வரவேற்றார்கள். "பவி.. மாமா வந்திருக்கார் பாரு.. உள்ளே கூட்டிட்டுப் போம்மா.." என்று சுந்தரம் பவித்ராவை அழைத்தார். 

மூன்று வாரங்களுக்கும் மேலாக கண்ணனை பார்க்காத பவித்ரா "வாங்க மாமா... நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்" என்று ஆவலுடன் கண்ணனின்   கையை அழுத்தமாக பற்றி தனது அறைக்குள் அழைத்து சென்றாள். கட்டிலில் குழந்தை ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் அதன் சிவந்த கன்னத்தில்  மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தார். அதே நேரம் 'தனக்கு ஒன்றும் இல்லையா?' என்று பவித்ரா ஒரு ஏக்கப் பார்வை பார்த்தாள். 25  நாட்கள் பிரிவு 25  யுகங்களாக சென்றுள்ளது என்று இருவரின் கண்களும் பேசிக் கொண்டன. கண்ணன் மெல்ல பவித்ராவை நெருங்கினான். எப்போயெப்போ என்று காத்துக் கொண்டிருந்தது போல் பவித்ரா ஒரு காந்தமாகி கண்ணனின் உதடுகளை நோக்கி வந்தாள். ஒரு அழுத்தமான நீண்ட முத்தம் இருவரையும் சற்று நேரத்திற்கு மெய் மறக்கச் செய்தது. தங்களிடமிருந்து  ஏதோ ஒரு நீண்ட நாள் அழுத்தம் விடை பெற்றதை அந்த இணைபிரியா இன்ப தம்பதிகள் உணர்ந்தனர். 

பிறகு பவித்ராவின் மடியில் கண்ணன் தலை வைத்து இந்த 25 நாட்கள் எப்படி சென்றன என்று பேசிக் கொண்டிருந்தார். கண்ணன் இப்படி பவித்ராவின் மடியில் நெருக்கமாக தலை வைத்துப் படுப்பதும், அவனது தலை முடிகளை மெல்ல பவித்ரா கோதி விடுவதும் இன்றல்ல, திருமணத்திற்கு  முன்பே இருவரும் திருட்டுத்தனமாக செய்த வேலைகள். 

"நீ இல்லாமே எனக்கு அங்கே போரடிக்குதடி செல்லம்... எதப் பாத்தாலும் உன் நியாபகமா இருக்குடி.. நாளைக்கு உன்னையும் குழந்தையும் கூட்டிட்டுப் போறதா இருக்கேன்" என்றார் கண்ணன். "நான் ரெடி மாமா.." என்றாள் பவித்ரா. இதற்கிடையில் குழந்தை விழித்துக் கொண்டது. கண்ணன் குழந்தையை வாரியணைத்துக் கொண்டார். தான் கொண்டு வந்திருந்த மெல்லிய பேபி சட்டையை அணிவித்தான். அது அச்சின்னச் சிறு குழந்தைக்கு சற்று பெரிதாக இருந்தது.  குழந்தைக்கு இன்னும் கழுத்து சரிவர நிற்கவில்லை என்பதால், அதனை பவித்ரா லாவகமாக கண்ணனிடமிருந்து வாங்கிக் கொண்டு பால் கொடுக்க ஆரம்பித்தார். 

அடுத்த நாள் காலை, டிபன் முடித்த கையுடன் கண்ணன், "மாமா.. நான் பவித்ராவை இன்னிக்கு ஊருக்கு கூட்டிட்டுப் போறதா இருக்கேன்" என்று பேச்சை ஆரம்பித்தார். "ஏன்.. மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நாள் வைச்சிகிட்டு பவியை அனுப்புரோமே.. அதுக்குள்ளே என்ன அவசரம்..?" என்றார், பவித்ராவை ஓரக்கண்ணால்  பார்த்துக் கொண்டே. 

"இல்லே டாடி.. அவருக்கு நான் இல்லாமே எதுவும் ஓடாது.. குழந்தையை நானும் அத்தையும் நல்ல பாத்துக்கிறோம் ... நீங்களும் மம்மியும் டைம் கிடைக்கிறப்போ வாங்க.." என்று மாமனுடன் சென்று விட பவித்ரா தயாராக இருந்தாள்.

"குழந்தைக்கு ரெகுலரா தடுப்பூசி போடணும் மாமா.. சித்தப்பா, மத்த சின்ன மாமா, பிரெண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு குழந்தைக்கு பேர் வைக்கணும். அதுக்கு ஏற்பாடு செய்யப் போறேன் .. அதோட  பவித்ரா இல்லாமே வீடு 'விச்சோ'ன்னு இருக்கு .. அம்மாவுக்கும் குழந்தையை பாக்குனும் போல இருக்கு... பவித்ராவையும் குழந்தையையும் கூட்டிட்டுப் போறேன் மாமா"  என்றார் கண்ணன். 

"மனேஜ் பண்ணிப்பீங்கன்ன சரி.. கூட்டிட்டுப் போங்க... பட்... கைக்குழந்தையை கூட்டிட்டுப் போறதாலே நானும் மதுரை வந்து விட்டுட்டு வர்றேன்" என்று சுந்தரமும் மதுரை கிளம்பினார். அனைவருக்கும் ட்ரைன் டிக்கெட் ரீசர்வேசன் கிடைத்துவிட்டது. 

குழந்தைக்கு சுந்தரம் தற்காலிகமாக 'ஜில்பிலி' என்று பெயர் வைத்து அப்படியே கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த 'ஜில்பிலி'யுடன் மூவரும் மதுரை கிளம்பினர். 

(பயணம் தொடர்கிறது...)

மதனப் பெண் 9 - எல்லாம் இன்ப மயம் !

கண்ணன்-பவித்ரா இல்வாழ்க்கை சந்தோசத்தின் விளைபலனாக,  பவித்ரா திருமணம் முடிந்த 4  மாதங்களுக்குள் கர்ப்பம் தரித்தாள்.

பவித்ராவிற்கு கை நிறைய வளையல் போட்டு, பூ சடை பின்னி, சித்ரான்னங்களை செய்து, உற்றார் உறவினர் கூட்டி சீரும் சிறப்புமாக வளைகாப்பு செய்யப்பட்டது. பவித்ராவிற்கு எல்லோரும் சந்தானம் பூசி, வளையல் அணிவித்து ஆசிர்வாதம் செய்தனர். 

பவித்ரா ஏற்கனவே கொள்ளை அழகு. அதிலும் சிறு வயது முதலே மனதில் நினைத்துக் கொண்டிருந்த அத்தை மகனே அவளுக்கு கணவனாக அமைந்தது அவளை மேலும் அழகாக்கி இருந்தது. இப்போது கர்ப்பமும் தரித்துள்ளாள் . இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியால் அவளது முகம் இன்னும் தேஜஸாக இருந்தது.  உடலும் பூரித்து போய் இருந்தது. 

கண்ணனும் அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் திளைத்து போய் இருந்தார். பிறக்கப் போகும் குழந்தை இரு குடும்பங்களின் அடுத்த பரம்பரைக்கு மூத்த குழந்தை வேறு. அதாவது இந்தக் குடும்பத்தில் கண்ணன் மூத்தவர். அந்த குடும்பத்தில் பவித்ரா மூத்தவள். இருவரும் தலைச்சன் வாரிசுகள். எனவே கண்ணனின் தந்தை குடும்பத்தினரும்,  பவித்ராவின் தந்தை குடும்பத்தினரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து இருந்தனர். கண்ணன் பவித்ராவை தவறாமல் டாக்டர் செக் அப்பிற்கு அழைத்து சென்றார். வரலஷ்மி குழந்தை நன்றாக பிறக்க வேண்டும், தாயும் சேயும் நன்றாக இருக்க வேண்டும், என்று வேண்டி கோவில்களுக்கு சென்று வழிபட்டார். 

வளைக்காப்புக்குப் பிறகு பவித்ராவை பிரசவத்திற்காக சுந்தரம் கோவை அழைத்து செல்வதாக கூறினார். 

ஆனால் பவித்ரா அதற்கு இசையவில்லை. "டாடி.. நான் மாமா கூட இங்கேயே இருந்து குழந்தை பெத்துகிறேன் .. உங்களை விட அத்தே என்னை நல்ல பாத்துகிறாங்க... மாமா பக்கத்திலேயே இருக்காரு....  நான் வரலே ..." என்று சொல்லி  விட்டாள்.  தனது மகள் இப்படி பேசுவதைக் கண்டு சுந்தரத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி, ஆனால் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டாமல், "என்ன இருத்தலும் பிறந்த வீட்டிலே பிரசவம் பக்குரதுதானே முறை" என்று ஒப்புக்கு ஒரு வார்த்தை சொல்லி விட்டு கோவை கிளம்பி சென்று விட்டார். சொந்தத்தில் திருமணம் என்பதால் பெரிய பார்மாலிட்டிஸ்களுக்கு இங்கு வேலை இல்லாமல் போய் விட்டது. 

கண்ணனின் சித்தப்பா, சித்தி எல்லோரும் அவ்வப்போது வந்து பவித்ராவை பார்த்து, நலம் விசாரித்து சென்றனர். கண்ணின் மற்ற மூன்று தாய் மாமன்களும், மாமிகளும் (அதாவது பவித்ராவிற்கு சித்தப்பா, சித்திகள்) அடிக்கடி வந்து பவித்ராவிற்கு பிரசவ அறிவுரைகள் கூறி சென்றனர். 

ஒரு நாள் இரவு பவித்ராவிற்கு பிரசவ வலி வந்தது. முன்னதாக கண்ணன் தனது தாய்வழி பாட்டியை (இருவருக்கும் பாட்டி) கோவையில் இருந்து அழைத்து வந்து வைத்துக் கொண்டிருந்தார். வரலக்ஷ்மியும், பாட்டியும் பிரசவ அறிகுறிகள் தென்படுவதை தெரிந்து கொண்டு, பவித்ராவை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். 

கண்ணன் அதிகாலை வேளை ஒரு காரை அழைத்து அதில் பவித்ராவை அமர வைத்து ஏற்கனவே செக்கப் செய்துகொண்டிருந்த டாக்டரிடம் அழைத்து சென்றார். பவித்ரா படித்தவள்; விஷயம் தெரிந்தவள். எனவே சுகப் பிரசவத்திற்கு தோதாக தனது உடலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியன செய்து கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள். எனவே மருத்துவருக்கு குழந்தையை வெளிக் கொண்டு வருவதில் பெரிய சிரமம் ஏதும் ஏற்படவில்லை. அறுவை இல்லாமல் சுகப் பிரசவத்தில் பவித்ரா குழந்தையை  ஈன்றெடுத்தாள்.  

பவித்ராவிற்கு பிறந்தது பெண் குழந்தை. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததால் இறந்து போன தனது தந்தை வழிப் பாட்டி மீனாட்சியே பிறந்ததாக  கண்ணன் நினைத்தார். எல்லோருக்கும் சந்தோசம். 

பவித்ரா மருத்துவமனையில் இருந்து மூன்று நாட்களிலே விடுவிப்பு பெற்று வீடு திரும்பினாள்.

சுமார் மூன்று வாரம் கழித்து, பவித்ராவை தங்கள் இப்போதாவது சில தினங்கள் வைத்து தாய்-சேய் இருவரையும்  பாங்கு பார்த்து அனுப்புவதாகக் கூறி சுந்தரம் அவளை கோவை அழைத்து செல்வதாகக் கூறினார்.  பவித்ராவிற்கு  கண்ணனை பிரிய மனமில்லை. எனினும் தனது தாய், தந்தையை டிஸ்சப்பாய்ன்ட் செய்ய பவித்ரா விரும்பவில்லை. எனவே பவித்ரா கிளம்பத் தயாரானாள் .

திருமணத்திற்கு முன்பு கண்ணனை கண்டாலே, பவித்ரா அருகில் சென்று ஒட்டி உரசிக் கொண்டே நிற்பாள். இப்போது திருமணத்திற்குப்    பிறகு முதன்முறையாக ஒரு மாதத்திற்கு கண்ணனை விட்டு பவித்ரா பிரிகிறாள்.


"அத்தே.. மாமாவை பாத்துக்கோங்கோ... நேரத்துக்கு சமைச்சு போடுங்கோ... நேரத்துக்கு சாப்பிடாம போன அவருக்கு அசிடிட்டி பாம் ஆகி வயத்துவலி வந்துடும்..  அன்பா பரிமாறுங்க.. வாரத்திலே ஒரு நாள் எண்ணை தேச்சு குளிக்க ஞாபகப் படுத்துங்கோ.. புதன், ஞாற்றுக் கிழமையிலே சிக்கன் குழம்பு வச்சு, சிக்கனை எண்ணையிலே பொரிச்சு தந்தூரி சிக்கன் மாதிரி பண்ணி கொடுங்கோ.. 10  நாளைக்கு ஒரு தடவை மட்டன் கொத்து கறி வாங்கி  கோலா உருண்டை பண்ணி கொடுங்கோ. நான் மம்மி, டாடியோட கொஞ்ச நாள் இருந்து விட்டு வந்துடுறேன்" என்று பவித்ரா கண்ணனுக்கு தாயாக மாறி சில அன்பு கட்டளைகளை தனது மாமியாருக்கு இட்டாள். "தனது மகனை இப்படித்தான் கைக்குள் போட்டுக் கொண்டாளா, இந்தக் கள்ளி?"  என்று வரலட்சுமிக்கு கொஞ்சம் பொறாமையுடன் மகிழ்ச்சி. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம், "தங்களை வளைய வந்த மகள், இப்போது இங்கு எப்படி வளைகிறாள்" என்று நினைத்து சந்தோசப்பட்டார்.

கண்ணன் உள்ளபடி பாக்கியசாலி; கொடுத்து வைத்தவர். 'லக்கி பிலோ' என்பார்களே அதன் மொத்த உருவம் கண்ணன்.       

எல்லாம் இன்ப மயமாக சென்று கொண்டிருந்தது.... 

(தொடரும்) 

Related Posts Plugin for WordPress, Blogger...