இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Friday 11 November 2011

மதனப் பெண் 22 -அம்மன் ஏதோ குறி சொல்றா..!

மதுரையில் இருந்து கொடைரோடு செல்லும் சாலையில் கண்ணனின் குல தெய்வமான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. பரம்பரைபரம்பரையாக தங்கள் குலம் காக்கும் தெய்வமாக கண்ணனின் அப்பா வேதாசலம், அவரது தந்தை, பாட்டன் என எல்லோரும் வழிபட்டு வந்த  தெய்வம்.

சிக்கலான பிரச்சனையில் முடிவெடுக்க அம்மனின் காலடியில் பூப்போட்டு பார்க்கும் வழக்கமும் இங்கு உள்ளது. திருமணம், வீடு கிரஹப்பிரவேசம் போன்ற வீட்டு பெரிய விசேசங்களுக்கு கண்ணனின் பரம்பரை பங்காளி மக்கள் இங்கு முதலில் பத்திரிக்கை வைத்து அம்மனை அழைத்து, ஆசி பெற்ற பிறகுதான் உற்றார், உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பிப்பார். வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நேர்ந்து கொள்வது , நிறைவேறிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துவது என்று அந்த அம்மன் கோவில் பெரிதும் பிரசித்தம் வாய்ந்தது.

நெடுச்சாலை ஓரம் சிறிதாக இருந்த இக்கோவில், காலம்காலமாக வழிபட்டு வரும் பரம்பரை மக்கள் கொடுத்த நன்கொடை காரணமாக பெரிதாக கட்டப் பட்டு சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிசேகமும் செய்யப்பட்டது. அண்மையில் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கும் போது பழமையான இக்கோவிலை இடித்து அல்லது நகர்த்தி விடாமல், அதற்கேற்றவாறு சாலையை சற்றே வளைத்து இட்டார்கள்.

ஏற்கனவே வரலஷ்மி பூசாரியிடம் சொல்லி அபிசேகம் மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனவே கண்ணன், பவித்ரா உள்ளிட்ட அனைவரும் குழந்தைகளுடன் காலையிலேயே கார் ஒன்றை வாடகைக்கு  பேசி கிளம்பினர்.

கொடைரோடு சென்றைடைய சுமார் 40  நிமிடம் பிடித்தது. அங்கிருந்து சாலையோரம் இருந்த குலதெய்வம் கோவிலை அடைந்து கண்ணன் குடும்பத்தினர் வழிபாடுகளை தொடங்கினர். இந்த அம்மனை குலதெய்வமாக  கொண்ட குடும்பத்தினர் மட்டுமே அக்கோவிலுக்கு அதிகம் வருவர். அன்றைய தினம் கண்ணனின் குடும்பம் தவிர வேறு யாரும் பூஜைக்கு வந்திருக்கவில்லை. எனவே அம்மனின் அபிசேகத்தை அருகில் அமர்ந்து கண்ணன் குடும்பத்தினர் நன்கு கண்டனர். அபிசேகம் முடிய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. பின் அலங்காரம், பூஜை ஆரம்பமானது.

அங்காள பரமேஸ்வரி தாய் வரலக்ஷ்மி வேண்டி வணங்கி சாத்திய மஞ்சள் பட்டுப் புடவையில் அலங்கார ரூபிணியாக தெரிந்தாள். ஆனால் கண்களில் மட்டும் ஏதோ ஒரு சோகம் தெரிவதாக வரலட்சுமிக்கு தோன்றியது. "என்ன குற்றம், குறை இருந்தாலும் மன்னித்து, குளிர்ச்சியாகி, என் குலத்தை காக்க வேண்டும் தாயே!" என்று வரலக்ஷ்மி மனமுருக வேண்டினார்.

பூசாரி ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் கற்பூரத் தட்டும்  ஏந்தி அம்மனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. அந்தக் காற்றில் எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் படக்கென அணைந்து விட்டது. எல்லோருக்கும் கருக்கென்று ஆனது.

"தாயே இது என்ன சோதனை.? ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய்? நாங்கள் செய்யும் பூஜையில் என்ன குறை?" என்று வரலக்ஷ்மி வாய்விட்டு அம்மனிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.

'நன்றாக, ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் அணைந்து விட்டதே..' என்ற விசனம் பவித்ராவுக்கும். ஏற்கனவே இருந்த குழப்பங்களில்  'கோவிலுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும்' என்று இங்கு வந்தால்.. ஏன் இப்படி நடக்கிறது? என்று கண்ணன் இப்போது உள்ளபடியாக சிந்திக்க ஆரம்பித்தார்.

அதற்குள் பூசாரி கற்பூரத்தை மீண்டும் ஏறிய வைத்து அம்மனுக்கு காட்டினர். "அம்மா.. அம்மன் ஏதோ குறி சொல்றா..! கொஞ்சம் ஜாக்கிரதையா, எச்சரிக்கையா இருங்க !" என்று பூசாரி சொல்லிவிட்டு, தீர்த்தத்தை எல்லோருடைய முகத்திலும் அடித்து, கையிலும் ஊற்றினார். குங்குமம், வீபூதி, சந்தானம் கொடுத்தார். வரலக்ஷ்மி விபூதி  இட்டுக் கொள்ள மற்றவர்கள் அனைத்தையும் இட்டுக் கொண்டனர். தன் மாங்கல்ய பலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கி பவித்ரா நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். தனது தங்கத் தாலியின் மீதும் சிறிது தடவிக் கொண்டாள்.

செல்வத்திற்கு லக்ஷ்மி, கல்விக்கு சரஸ்வதி, எதையும் தொடங்குவதற்கு முன் சுழி போட வேண்டிய இடம் பிள்ளையார், கிரகங்கள் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை அருள நவக் கிரக கோவில்கள் என அததுக்கு கோவில்களும், சாமிகளும் உள்ளன. ஆனால் குலத்தை காப்பாற்ற குல தெய்வம் மட்டுமே துணை.. 

அந்த குல தெய்வம் இப்படி கண்ணனின் பூஜை, புனஸ்காரங்களை சரிவர ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஏதோ சமிக்கை செய்கிறதே..? கற்பூரம் அணைந்து விட்டதே...?

கண்ணனின் குலத்தை குல தெய்வம் காப்பாற்றியதா..?

(தொடரும்)

Tuesday 8 November 2011

மதனப் பெண் 21 - ஏதோ நடக்கப் போகிறது !

மேல் தள கட்டடத்திற்கு சென்று பார்த்த அனைவருக்கும் மீண்டும் அதிர்ச்சி !

ஒரு சித்தாள் பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது அவளது முகம், ஆடை முழுவதையும் சிகப்பாக ஆக்கி கோரமாக தெரிந்தது. வலியால் அழுது கொண்டிருந்தாள். 

பொதுவாக கான்கிரீட் போடும்போது முதலில் கட்டடத்தின் நான்கு சுவர்கள் மீது பலகை வைத்து அதை ஒன்றுடன் ஒன்றாக ஆணி அடித்து இணைத்து, அதே நேரத்தில் அப்பலகைகளின் ஆதரவுக்கு அவற்றின் கீழே சவுக்கு மரங்களை முட்டு கொடுத்து வைப்பார்கள். இவ்வாறு பலகை வைத்த பிறகு, அதன் மீது இரும்புக் கம்பிகளை கட்டி, கான்கிரீட் போடுவார்கள். 

ஆனால் இங்கு அவ்வாறு   செய்யும் போது ஆணியால் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பலகைகள் அந்த ஆணியின் பிடியில் இருந்து எப்படியோ விலகி, கான்கிரீட் தளத்துடன் கெட்டியாக ஒட்டிக் கொள்ளாமல் கீழே இருந்த சவுக்கு மர முட்டுகளின் ஆதரவில் மட்டும் உட்கார்ந்து இருந்தது. கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சித்தாள் பெண் சம்பந்தப்பட்ட மர முட்டை நகர்த்தும் போது அந்த இரண்டு பலகைகளும் எதிர்பாராத விதமாக அவளது தலை மீதே விழுந்து விட்டது. அதில் அரைகுறையாக ஒட்டிக் கொண்டிருந்த ஆணி அவளது நடு மண்டையில் இறங்கியது. இதனால் அவளது தலையில் பொத்தல் விழுந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பலகை விழுந்த வேகத்தில் அப்பெண் அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த முட்டுகளின் மீது சரிந்தாள். இதனால் அம்முட்டுகளும் சரிந்து விழுந்தன. 

விவரங்களை ஊகித்துக் கொண்ட கண்ணன், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கவும், வேண்டிய சிகிச்சைகளை செய்யவும் ஏற்பாடு செய்தார்.

பவித்ரவிற்கும், வரலக்ஷ்மிக்கும் நிறைய மன சங்கடங்கள். ஒன்று மாற்றி ஒன்று ஏதோ ஒரு அறிகுறி காட்டி கொண்டே இருக்கிறதே என்று வேதனை பட்டார்கள். "எந்த நேரத்தில் கட்டட வேலை தொடங்கினோமோ தெரியவில்லை... ஏதேதோ நடக்கிறதே ?!"  என்று புலம்ப ஆரம்பித்தனர். 

மருத்துவமனைக்கு சென்று அந்த சித்தாளை சேர்த்துவிட்டு வந்த மேஸ்திரி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். 

"மேஸ்திரி, அவளுக்கு எப்போ இப்படி இருக்கு..? டாக்டர் டிரீட்மென்ட் ஆரம்பிச்சட்டரா?" என்று கண்ணன் கேட்டார்.

மேஸ்திரி, அதற்கு எதற்கும் பதில் சொல்லவில்லை. மாறாக, "சார், நான் வேலையே நிப்பட்டுறேன்.. இது நமக்கு சரிப்பட்டு வராது.. 'கட்டடம் காவு கேட்குது சார்-ன்னு நான் அப்போவே சொன்னேன். நீங்க கேட்கலை.. கடா வெட்டி பூஜை போடாமே இனி என்னலே வேலை செய்ய முடியாது. செய்ஞ்ச வரைக்கும் கூலி குடுத்துடுங்க. சித்தாள் ஆஸ்பத்திரி செலவுக்கும் பணம் கொடுங்க" என்று மேஸ்திரி பேசிக் கொண்டே போனார். கூடவே, தனது பணி கருவிகளான சட்டி, சம்மட்டி, மம்மட்டி, கடப்பாரை ஆகியவற்றை மூட்டை கட்ட ஆரம்பித்தார். 

ஒரு கணம் கண்ணனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. "சில நம்பிக்கைகளுக்கு தான் செவி சாயக்காதது தவறாக போய் விட்டதோ..?" என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. அந்த நேரத்தில் மேஸ்திரியின் பக்கம் வரலக்ஷ்மி சேர்ந்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "நானும் அப்பவோ சொன்னான்.. நீ கேட்கலை.. சிலது சொல்றாங்கன்ன கேட்கணும்.. இப்போ என்ன ஆச்சு பாத்தியா?" என்று வரலக்ஷ்மி சொல்லி விட்டு.. "மேஸ்திரி.. நீ ஒரு நாள் பாத்து பூஜைக்கு ஆக வேண்டியது என்னவோ செய்.. வேலையை நிறுத்தாதே.. பூஜை போட்டு முடிச்ச பிறகு வேணா வேலையை தொடங்கு .. இந்தா பணம்" என்று பூஜைக்கும், சித்தாளின் சிகிச்சைக்கும் உண்டான தொகையை தனது பீரோவிலிருந்து எடுத்துக் கொடுத்தார். 

அதை ஒப்புக் கொள்ளும் வண்ணம் மேஸ்திரி தனது கருவிகளை மூட்டை  கட்டுவதை நிறுத்தி, பணத்தைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

"கண்ணா... இதெல்லாம் கட்டடம் கட்டுவதில் ஒரு சடங்கு, சாங்கியம்.. செய்யாம விட்டா அது தப்பாய்டும். நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு.. நான் இந்தப் பூஜைக்கு ஆக வேண்டியதைப் பாக்குறேன்.. மறக்காம நாளைக்கு குல தெய்வம் அபிசேகத்துக்கு நீ மதியம் 12  மணிக்கு வரணும்.. மறந்துடாதே.." என்று சொல்லிக் கொண்டே பேரன் சத்தியாவை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றார்.

பவித்ராவிற்கு நிறைய குழப்பம். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தங்கள் வாழ்வில் ஏன் இப்படி சங்கடங்கள்..? இறக்கையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் ஒரு பெண் ஆந்தை வந்து அமர்ந்து இருந்தது, அப்போதே தன் காலில் அடிபட்டு நகம் உடைந்து ரத்தம் வந்தது.. பின் இன்று சித்தாள் பெண்ணின் தலை மீது பலகை விழுந்து ரத்தம் வந்தது.. இப்படி எல்லா நேர்வுகளிலும் ரத்தம் கண்டது, அந்த எல்லா நேர்வுகளிலும் ஒரு பெண் இனம் சம்பந்தப் பட்டிருந்தது.. இவை யாவும் பவித்ராவின் மனதை நெருடிக் கொண்டிருந்தன. 

"மாமா.. ஏதோ நடக்கப் போவுதுன்னு என் உள்மனசு சொல்லுது.. கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பெண்ணா இருக்கிறவங்களுக்கு ஏதோ பிரச்னை வந்த மாதிரி இருக்கு " என்று கண்ணனின் அருகில் நெருக்கமாக வந்து நின்று கொண்டு, அவரது வலது கையை பிடித்துக் கொண்டு அச்சத்துடன் சொன்னாள். ஏதோ ஒரு இனம் புரியாத கவலை அவளை ஆட்கொண்டிருந்தது.

"போடி.. பயித்தியக்காரி... அதெல்லாம் ஒன்னும் இல்லே.. அதுதான் மேஸ்திரி சொன்ன மாதிரி எல்லா பூஜையும் பண்ணப்போறோமே.. அதோட  நாளைக்கு கோவிலுக்கும் போகப் போறோம்.. நீ சும்மா மனசை போட்டு அலட்டிக்காதே .." என்று ஆறுதலுக்கு கண்ணன் சொன்னார். 

ஆனால் கண்ணனின் மனதிலும் பவித்ராவின் உள்மனது சொன்னதைப் போல "ஏதோ நடக்கப் போகிறது..!" என்ற ஒரு நெருடல் இருந்தது. "ஒருவேளை அம்மாவோட உடம்புக்கு ஏதாவது .. அம்மா பிரசருக்கு மாத்திரை சாப்பிடுறாங்க.. ஹெல்தியா இருக்காங்க.." இப்படி கண்ணனின் சிந்தனை கண்டபடி சென்று கொண்டிருந்தது.

ஆனால் 'ஏதோ நடக்கப் போகிறது' என்பது கண்ணனின் குடும்பத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

(தொடரும்) 


Sunday 6 November 2011

மதனப் பெண் 20 - "ஐயோ.. அம்மா.." என்ற அலறல் சத்தம்

காலை நேரம். மணி சுமார் 9.30௦ இருக்கும். கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல வழக்கு கட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். 

அதே சமயம் மேல் தளத்தில் கான்கிரீட் முட்டுகளையும் பலகைகளையும்   பிரிக்கும் பணி பற்றியும், அதை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டியது என்பது பற்றியும், மேஸ்திரி தனது வேலையாட்களுக்கு ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தார். 

தொடர்ந்து ஈசான்ய மூலையில் ஒரு விளக்கு பொருத்தி, வாழைப்பழம், ஊதுபத்தி வைத்து, கர்ப்பூரம் காட்டி மேஸ்திரியும், பணியாட்களும் வணங்கினர். அப்படியே சூரியனைப்  பார்த்தும் நமஸ்கரித்தனர். முடிவில் மேஸ்திரி ஒரு எலுமிச்சை பழத்தை எட்டாக அறுத்து குங்குமம் தடவி அதன் சாறை புதுக் கட்டடத்தின் எட்டு திசைகளிலும் பிழிந்து போட்டார்.

பிறகு முட்டு மற்றும் பலகை பிரிக்கும் பணியில் வேலையாட்கள் ஈடுபட்டனர். முதலில் கண்ணனின் அலுவலக அறையின் முட்டுகளை நகர்த்தி வைத்து, கான்கிரீடுடன்  ஒட்டி இருக்கும் சென்ட்ரிங் பலகைகளை பிரித்து எடுத்து  தனியாக அடுக்கி வைத்தனர். கண்ணனின் அலுவலக அறை பெரியது என்பதால், முட்டு பிரிக்கும் வேலை முடிய சாப்பாட்டு நேரம் ஆகி விட்டது. 

எல்லோரும் தாங்கள் காலை கொண்டு வந்திருந்த சாப்பாட்டு கூடையை  எடுத்து சாப்பிட அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கண்ணன் தனது காலை நேர நீதிமன்ற பணி முடிந்து சாப்பிட வீட்டிற்கு வந்திருந்தார். பவித்ரா அவரை வரவேற்று சாப்பாடு பரிமாறும் பணியில் ஈடுபட்டாள்.

கண்ணன் சாப்பிட அமரும் நேரத்தில் மேல் தளத்தில் பணியாட்கள் தங்கள் மதிய உணவை முடித்து படுக்கை அறையின் முட்டுகள் மற்றும் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

அன்றைய தினம் பவித்ரா கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் போட்டு குழம்பு வைத்திருந்தாள். அத்துடன் பைனாப்பிள் ரசம், கட்டித் தயிர், வெண்டைக்காய் கூட்டு, கேரட், பீன்ஸ் பொரியல், அப்பளம், மலை வாழைப்பழம் என சாப்பாடு மேஜை நிரம்பி இருந்தது. கூடவே சிறிய அளவில் சுடச் சுடச் போண்டா போட்டிருந்தாள். அகோரப் பசியில் இருந்த கண்ணன் அவற்றை பார்த்த உடனே ஒரு திருப்தியுடன் சாப்பிட அமர்ந்தார்.

தட்டில் பவித்ரா சாதம் வைத்து முதலில் பருப்பும், இரண்டு கரண்டி ஆவின் நெய்யும் (காய்ச்சி வைத்திருந்தாள்) ஊற்றினாள். "பவித்ரா.. எனக்கு நெய் எல்லாம் கொஞ்சம் கம்மி பண்ணு.. வெயிட் ஏறிக்கிட்டே போரேன் பாரு .. என்னை கவனிக்கறதே குறைச்சிக்கிட்டு குழந்தைகளை நல்ல கவனி" என்று செல்லமாக கோபித்துக் கொண்டார். "குழந்தைகளையும் நல்ல பாத்துகிறேன்.. நீங்களும் எனக்கு ஒரு குழந்தை இல்லையா..?!" என்று பவித்ராவும் தன் பங்குக்கு உதட்டை உள்ளுக்கு கடித்தார் போல் செய்து ஒரு கண்ணை மட்டும் சற்றே சிறியதாக்கி செல்லமாக கோவித்துக் கொண்டு பேசினாள். 

"சரி.. சரி.. நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு  அம்மா சொல்லிருக்காங்க.. நியாபகப் படுத்துறேன்.. மறந்துடாதீங்க.. அம்மா.. அபிசேகத்துக்கு பணம் கட்டிட்டான்களாம். நீங்க அவசியம் வரணும். வேலை இருக்கு.. அது.. இது.. ஏதாவது சாக்கு சொல்லிடக்கூடாது" என்று பவித்ரா பிரார்த்தனை பற்றி கண்ணனுக்கு நினைவுபடுத்தினாள். 

கண்ணனும் அதை ஏற்றுக் கொள்ளும் வண்ணம்,  "As Your Honour pleases" என்றார். அவருக்கு வீட்டில் பவித்ராதான் நீதிபதி. வீட்டு நீதிபதி பவித்ரா சொல்வதற்கு அவர்  அப்பீல் செய்வதில்லை. பவித்ராவின் தீர்ப்பும் சரியாகவே இருக்கும். 

இப்படி பேசிக்கொண்டே, பருப்புபுடன் பிசைந்து கொண்ட  சாதத்தை எடுத்து அவர் ஒரு வாய் சாப்பிட போனார். 

அப்போது மேல் தளத்தில் இருந்து "ஐயோ.. அம்மா.." என்ற அலறல் சத்தம்,  ஓலமாக கேட்டது. தொடர்ந்து முட்டுகளும், பலகைகளும் சரிந்து தடதடவென விழும் ஓசையும் கேட்டது. 

கண்ணன் பதறிப் போய் கைசாதம் கையிலேயே இருக்க உடனடியாக மேல்தளத்திற்கு விரைந்தார்.  பவித்ராவும், வரலக்ஷ்மியும் கண்ணனின் பின்னால் ஓடினர். 

அங்கே.....? 

(பிறகு சொல்கிறேன்) 
Related Posts Plugin for WordPress, Blogger...