இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday 5 November 2011

மதனப் பெண் 19 - "சார்... கட்டடம் காவு கேட்குது"

மேஸ்திரி காட்டிய ஈசான்ய திசை மூலையில் பவித்ராவும், கண்ணனும் பார்த்தார்கள். அப்போது கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த சித்தாள், கொத்தனார் அனைவரும் அங்கு நின்று வியப்பு கலந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அங்கு அப்படி என்னதான் இருந்தது?

அது ஒரு ஆந்தை. உடல் பகுதி வெள்ளையாகவும், இறக்கை பகுதி சற்று வண்ணம் கலந்தவாறும் இருந்தது. அதுதான் அந்த மூலையில் அமர்ந்து தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வை மிகவும் தீட்சன்யமாக இருந்தது. பார்ககவே சற்று பயங்கரமாக தோன்றியது. அதை பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் முகத்தில் ஒரு மிரட்சி அலை தோன்றி மறைந்தது. 

ஒரு புதிய கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும், அதுவும் சுமார் 6 ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு ஆந்தை எப்படி வந்தது என்று எல்லோர் மனதிலும் கேள்விகுறி. இப்படி கும்பலாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போதும் அந்த ஆந்தை பறந்து செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கண்ணன் மெல்லமாக சற்று அருகில் சென்று அந்த ஆந்தையை பார்த்தார். அப்போது ஒன்று புரிந்தது. அதன் இறக்கை பகுதியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஆந்தையால் பறக்க இயலவில்லை. அதற்கான முயற்சியும் செய்யவில்லை. ஏதோ ஒரு வெளிநாட்டு ஆந்தை இறக்கையில் அடிபட்டு இங்கு வந்து தஞ்சம் புகுந்து கொண்டது என்று எண்ணிய கண்ணன் உடனடியாக மதுரை வனத்துறை அலுவலருக்கு தொலைபேசி செய்து விவரம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அலுவலகத்தில்  இருந்து இரண்டு பணியாட்கள் வந்தனர். அவர்கள் அப்பறவையை பார்த்ததும் அது ஒரு வெளிநாட்டு பெண் ஆந்தை என்பதை உறுதி செய்தனர். பின் அதை லாவகமாக பிடித்து தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டனர். அடிபட்ட இடத்திற்கு வைத்தியம் பார்த்து, பழமுதிர்சோலை மலைப்  பகுதியில் விட்டுவிட்டால் பறந்து சென்று விடும் என்று கூறி, அதை கொண்டு சென்றனர். கண்ணன் அவர்கள் வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தார். 

கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் இப்படி ஆந்தை அதுவும் ரத்த காயத்துடன்  வந்து அமர்ந்திருந்ததை மேஸ்திரி 'ஏதோ கெட்டது நடக்கப் போவதற்கான   அறிகுறி' என்று மனதிற்குள் நினைத்தார். ஆனால் தான் நினைத்ததை அப்படியே கண்ணனிடம் சொல்லாமல்,  "சார், கட்டடம் காவு கேட்குது.. கான்கிரீட் முட்டு பிரிக்கறதுக்கு முன்னாடி கடா வெட்டி பூஜை போட்டுறலாம்" என்றார். ஆனால் இந்த சாங்கியத்தில் எல்லாம் கண்ணனுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. "அதெல்லாம் வேண்டாம் மேஸ்திரி", என்றார் கண்ணன். "ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு, சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் மேஸ்திரி.

இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் பவித்ரா மிகவும் அப்செட் ஆனாள். பவித்ராவிற்கு கால் நகத்தில் அடிபட்டது ரத்தம் நின்றிருந்தாலும் மிகவும் வலித்துக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த கண்ணன் 'பவி, வா, கீழே போய் மருந்து போட்டுக் கொள்ளலாம்' என்று பவித்ராவை அழைத்துக் கொண்டு கீழ் வீட்டிற்கு சென்றார்.

நடந்ததை தெரிந்து கொண்ட வரலக்ஷ்மி, "கண்ணா, கட்டிகிட்டிருக்கிற வீட்டிலே ஆந்தை வர்றது நல்லதுக்கு கிடையாது.. அதுவும் பவித்ராவிற்கு அதே நேரத்திலே காலிலும் அடிபட்டிருக்கு. பேசாம மேஸ்திரி சொன்ன மாதிரி செய்றதுதான் எனக்கு நல்லதா படுது. அப்படியே நம்ம குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கும் போய் ஒரு அபிசேகம் செய்துடலாம்.." என்று தனது அனுபவத்தில் இருந்து சில விசயங்களை சொன்னார்.

"அம்மா.. நீங்க புரியாம பேசுறீங்க.. ஒரு வெளிநாட்டு பறவை அடிபட்டு போக்கிடம் இல்லமே இங்கே வந்து உட்காந்துகிச்சு.. அதுக்காக அதப் பண்ணலாம்.. இதப் பண்ணலாம்ன்னு நீங்க சொல்றது எனக்கு பிடிக்கலை" என்றார் கண்ணன். இருப்பினும் கொஞ்சம் இடைவெளி விட்டு, "வேனும்ம்ன்னா.... குலதெய்வம் கோவிலுக்கு வேணா போயிட்டு வரலாம்" என்று தன் தாயை சமாதானப்படுத்தினார். பவித்ராவும் இதற்கு இசைந்தாள். அடுத்த வாரம் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

இருந்தாலும் பவித்ராவிற்கு மேஸ்திரி சொன்ன ஒரு வார்த்தை அப்படியே நெஞ்சில் பதிந்து போனது, "சார்... கட்டடம் காவு கேட்குது" என்ற மேஸ்திரியின் வார்த்தைகள் பவித்ராவின் மனதில் திரும்பதிரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. வீட்டில் திரும்பிய இடத்தில் எல்லாம் ஆந்தை அமர்ந்து இருப்பதாக தெரிந்தது. தனது குழந்தைகளின் முகம் சில சமயம் ஆந்தை முகமாக தெரிந்தது. பவித்ரா மிகவும் டிஸ்டர்ப் ஆனாள்.

"சார்.. கட்டடம் காவு கேட்குது..காவு கேட்குது..." என்ற குரல்  வீடு முழுவதும் எதிரொலிப்பதாக பவித்ராவிற்கு பிரமை ஏற்பட்டது.

ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டபடி குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு முன் தினம் கட்டடத்தின் முட்டுக்களை பிரிக்க மேஸ்திரியும், கூடுதலாக சில ஆட்களும் வந்திருந்தனர். அந்த வேலைகள் ஆரம்பமாகின.

அப்போது என்ன நடந்தது தெரியுமா ?

(தொடரும்)

Friday 4 November 2011

மதனப் பெண் 18 - அதிர்ச்சி

உரிமையியல் வழக்குகளை நடத்துவதில் நல்ல பெயரையும், புகழையும் ஈட்டினார் கண்ணன். முந்தைய தீர்ப்புகளை தேடிப்பிடித்து சுட்டிக்காட்டி வாதம் செய்வதில் கண்ணனுக்கு ஒரு தனி பெயர் மதுரை நீதிமன்றங்களில் கிடைத்தது.இதனால் தீர்ப்பு வழங்குவது  நீதிபதிகளுக்கு எளிதாக இருந்தது. இதனாலேயே கண்ணனின் வழக்கில் ஒரு நியாயம் இருக்கும், ஒரு சாரம் இருக்கும் என்றும் நீதிபதிகள் நம்பினார். அவர்களது நம்பிக்கைக்கு எந்தக் குந்தகமும் வராதபடிக்கு கண்ணனும் நடந்து கொண்டார். குறிப்பாக பொய், புரட்டு வழக்குகளை தாக்கல் செய்தல், தேவையில்லாமல் வாய்தா வாங்குதல் போன்ற வேலைகள் கண்ணனிடம் இல்லை.

அத்துடன் அவ்வப்போது நடக்கும் இலவச சட்ட உதவி முகாம்களில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நீதிபதிகள் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொள்ளும் இம்முகாம்களில் கண்ணனுக்கு நல்ல அறிமுகமும், நற்பெயரும் கிடைத்தது. வழக்கிட வசதியற்றோருக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அனுப்பும் வழக்குகளை கண்ணன் திறம்பட நடத்தி விரைவில் தீர்ப்பு வாங்கிக் கொடுத்தார். லயன்ஸ் கிளப் உறுப்பினர் ஆனார். சிறிய வயதிலேயே சட்டத் தொழிலில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றி நடை போட்டார். நீதிமன்றத்தில் எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணம் அவரை மற்ற வழக்குரைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டியது. 

தொழிலில் எத்தனை பிசியாக இருந்தாலும் பவித்ரா மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க கண்ணன் தவறுவதில்லை. வெள்ளிக் கிழமை மாலை அலுவலக பணி ஏதும் செய்வதில்லை. பவித்ரா, குழந்தைகளுடன் சினிமா அல்லது மீனாட்சியம்மன் கோவில் என்று எங்காவது வெளியில் சென்று விட்டு உணவருந்தி வீட்டிற்கு திரும்புவது என்பதை கண்ணன் தனது வழக்கமாக கொண்டிருந்தார். சனிக்கிழமை முழு நாள் அலுவலகம் நடக்கும். அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் வழக்குகளை கண்ணனும், அவரது ஜூனியர் வழக்குரைஞர்களும் தயார் செய்து கொள்வார்கள். ஞாயற்று கிழமை அலுவலதிற்கு விடுமுறை. அன்று பவித்ரா செய்யும் நான் விஜிடரியன் உணவு வகைகளை கண்ணன் ஒரு பிடி பிடிப்பார். மதியம் பவித்ராவுடன் ஒரு நிம்மதியான தூக்கம். மாலை குழந்தைகளுடன் விளையாட்டு. இப்படி கண்ணனின் வாழ்க்கை சீராக, மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்தது.

புதிய வீடு கட்டும் பணியும் நன்கு நடந்து கொண்டிருந்தது. வங்கியில் கடன் வாங்கலாம் என்று கண்ணன் நினைத்திருந்தார். ஆனால் அதற்கு தேவை ஏதும் ஏற்படவில்லை. எப்போதெல்லாம் சிமென்ட் லோடும், செங்கல் லோடும் வந்து இறங்குகிறதோ அதற்கு முன் தினமே, ஏதாவது ஒரு புதிய வழக்கும், அதற்கான பீஸும் கண்ணனுக்கு வந்து விடும். எனவே கட்டட வேலை செலவுகளுக்கு கண்ணனுக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை.

மகள் ரோஹினி எல்.கே.ஜி. முடித்து யு.கே.ஜி. சேர்ந்தாள். மகன் சத்தியதேவ்-வை  பாலர் பள்ளியில் சேர்க்க பவித்ரா எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மதியம் மேல்தள  கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அன்று மதியம் நீதிமன்றப் பணி ஏதும் இல்லாத காரணத்தால், கண்ணனும் வீட்டில் இருந்தார். அப்போது மேஸ்திரி மேலிருந்து தடதடவென இறங்கி வந்து "சார்.. கொஞ்சம் மேல வந்து பாக்குறீங்களா?" என்று ஒரு வித இறுக்கத்துடன் கண்ணனை அழைத்தார். கண்ணன், "என்ன மேஸ்திரி.. என்ன விஷயம்" என்று கேட்டார். "நீங்க உடனே மேல வந்து பாருங்க.." என்று மேஸ்திரி அனத்தினார். 

மேஸ்திரியுடன் கண்ணன் மேல் தளத்திற்கு சென்றார். பவித்ராவும் பின்னாடியே வந்தாள். மேல் தள கட்டத்திற்கு அப்போதுதான் ரூப் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. அது செட்டாகும் வரை  தாங்கிப் பிடிக்க மரச்  சாரங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. 

பெட் ரூம் கட்டிக் கொண்டிருந்த பகுதிக்கு மேஸ்திரி அழைத்து சென்று, அங்கு உள்ளே ஈசான்ய மூலைப்  பகுதியின் மேல்புறத்தை பார்க்கும் படி கை  காட்டினார். அப்போது பின்னாடி வந்து கொண்டிருந்த பவித்ராவிற்கு கீழிருந்த செங்கல் ஒன்று தடுக்கி கால் இடறி நகம் சிறிதாக உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அதை அப்போதைக்கு சரி செய்து கொண்டு கண்ணனின் பின்னாடியே வந்து மேஸ்திரி காட்டிய பகுதியில் கண்ணனும் பவித்ராவும் பார்த்தனர்.

அவர்களுக்கு மிக்க அதிர்ச்சி ஏற்பட்டது !

அது என்ன? 

(தொடரும்)

Wednesday 2 November 2011

மதனப் பெண் 17 - மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் !

பவித்ராவையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கண்ணனும் அவரது தாயார் வரலக்ஷ்மியும் வீடு திரும்பினர். 

சில மாதங்களில் பவித்ரா கருத்தடைக்காக  'காப்பர் - டி' வைத்துக் கொண்டாள். குழந்தை பெற்றால் அழகு போய் விடும் என்று ஒரு கருத்து எல்லா தாய்மார்கள் மனதிலும் இருப்பது. ஆனால் அது பவித்ராவின் விசயத்தில் பொய்த்துப் போனது. பவித்ரா முன்னைக் காட்டிலும் அழகாக ஆனாள். 

பவித்ரா தன்னை அழகு படுத்திக் கொள்ள எந்த அழகு நிலையத்திற்கும் செல்வதில்லை. இயற்கையான அழகு அவளிடம் ஒட்டி கொண்டிருந்தது. குளிக்க மைசூர் சாண்டல் சோப். பூசிக் கொள்ள பாண்ட்ஸ் பவுடர். கண்ணனுடன் வெளியில் செல்வதென்றால் முகத்திற்கு கொஞ்சம் விகோ டர்மரிக் கிரீம். ஆனால் சென்ட் போன்ற வாசனை திரவியங்களை பவித்ரா போட்டுக் கொளவதில்லை. தேவைப்படும் போது மெலிதாக கொஞ்சம் லிப்ஸ்டிக்.    பவித்ரா எப்பவும் ஜாலி. இது கொஞ்சம் அதிகமானால் பவித்ரா மற்றொரு வேலையும் செய்து கண்ணனை அசத்துவாள். உறவினர்களைப் பார்க்க வரலக்ஷ்மி நிலக்கோட்டைக்கோ, திண்டுக்கல்லுக்கோ சென்று இருக்கும் போது, பவித்ரா இரட்டை ஜடை பின்னிக் கொண்டு, பாவாடை தாவணி அணிந்து கொண்டு கண்ணனை சூடேற்றுவாள். 'என் செல்லம்.. உன்னை மறுபடியும் கல்யாணம் பண்ணி.. மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கனம் போல ஆசையா இருக்குடி" என்று கண்ணன், பவித்ராவின் மடியில் தஞ்சமவார்.

கல்யாண விசேசம் என்றால் பட்டுப் புடவை. அதுவும் அவள் பட்டுப்புடவை கட்டிக் கொள்ளும் அழகே தனி. துணிக் கடை பொம்மைக்கு பட்டுபுடவை கட்டினால் எப்படி மிக நேர்த்தியாக இருக்குமோ அவ்வாறு கச்சிதமாக கட்டிக் கொள்வாள். புடவையின் முன் மடிப்புகள் சீராக அமைந்து இருக்கும். தலை  முடியை நன்றாக இறுக்கமாக தூக்கி வாரி, இரட்டை சரம் மல்லிப்பூ வைத்துக் கொண்டு,  பட்டுப் புடவையில் அவள் நடந்து வந்தால் பார்க்க கண் கோடி வேண்டும்.  நகை அணிந்து கொள்வதில்,  கழுத்தோரத்தில் இரண்டு வரிசை அமெரிக்கன் டைமண்ட்ஸ் கல் பதித்த அட்டிகை, முகப்புடைய ஒரு லாங் செய்ன், நெத்திச் சுட்டி, பச்சைக்கல் தோடு, இரண்டு கை விரல்களில் ஒன்றில் கல்மோதிரம், மற்றொன்றில் 'பி' என எழுத்து போட்ட மோதிரம், இரண்டு பிளைன் தங்க வளையல்களுக்கு நடுவே கல் பதித்த தங்க வளையல் ஒன்று, மிகவும் கிரான்ட் பங்சன் என்றால் வரலட்சுமிக்கு வேதாசலம் அந்த காலத்தில் செய்து கொடுத்த வங்கி, ஒட்டியாணம் ஆகியவற்றை பவித்ரா அணிந்து கொள்வாள். இப்படி நகைகளால் பவித்ராவிற்கு அழகா, பவித்ராவால் அந்த நகைகளுக்கு அழகா என்று கண்டறிய முடியாது. 

அதுபோல், எங்காவது பிக்னிக்,  வெளியூர் டூர் என்றால் சல்வார், கமிஸ்.  சில சமயங்களில் ஜீன்ஸ் பான்ட் போட்டும் அசத்துவாள். உள்ளூர், வெளியூர் கோவில் என்றால் காட்டன் புடவை. கொண்டை ஜடை. எந்த உடை என்றாலும் அது பவித்ராவிற்கு மிகவும் பொருந்தி வந்தது. 

எத்தனை வெய்யிலில் வெளியில் சென்று வந்தாலும் கொஞ்சம் கூட வியர்வை வாசம் என்பதே பவித்ராவிடம் கிடையாது. தனது பிறந்த வீடான கோவையில் இருந்து மதுரைக்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ கசகசவென வந்து சேர்ந்த பிறகு, கண்ணன் அவளிடம் நெருங்கினால் அவளிடமிருந்து ஒப்புக்கு  கூட வியர்வை வாடை வராது. மாறாக மஞ்சள் வாசனை வீசும். இது கண்ணனுக்கு வியப்பை தரும் !

மனைவி அழகானவளாக, அன்பனவளாக, பொறுமையானவளாக, குணசாலியாக, புத்திசாலியாக அமைந்து விட்டால் கணவனின் மண வாழ்க்கை வரம் பெற்றதாகும். அதாவது 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற பேச்சுவழக்கு கண்ணனின் வாழ்வில் உண்மையாகிப் போன ஒன்று. கண்ணனுக்கு மிக நல்ல மனைவியாக பவித்ராவை இறைவன் வழங்கி வரம் கொடுத்திருந்தார். 

பவித்ராவிற்கு பிறந்த ஆண் குழந்தை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஒரு நல்ல நாளில் அதற்கு 'சத்திய தேவ்' என்று பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கண்ணனும் பவித்ராவும் 'சத்யா' என்று அழைத்து மகிழ்ந்தனர். வரலக்ஷ்மி 'தேவா' என்று அழைத்து மகிழ்ந்தார். 

இதற்கிடையில் முதல் குழந்தை ரோஹிணி பாலர் பள்ளிப் படிப்பை முடித்து விட்டாள். வயது 3-க்கு மேல் ஆகி விட்டது. எனவே மதுரையில் புகழ் பெற்ற ஆங்கில பள்ளி ஒன்றில் அவளை எல்.கி.ஜி.-யில் கண்ணன் சேர்த்தார். ரோஹிணியை பள்ளிக்கு அனுப்ப, வீடு திரும்பியவுடன் அதற்கு படங்களைக் கட்டி பாடங்களை சொல்லித் தர, பகல் பொழுதில் சத்தியதேவை கவனித்துக் கொள்ள என  பவித்ராவிற்கு பொழுது சென்று கொண்டிருந்தது.  வரலக்ஷ்மி கூடமாட ஒத்தாசை செய்து கொண்டிருந்தார். 

கண்ணன் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி இருக்கும் வீட்டை சற்று ஆல்டர் செய்து மாடியில் ஒரு பெரிய அலுவலகத்துடன் கொண்ட நவீன வீடு ஒன்றை கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அதற்கான வேலைகள் ஒரு நல்ல நாளில் தொடங்கின. 

மேல் வீடு கட்டும் போது படுக்கையறை எப்படி இருக்க வேண்டும், அதில் வாஸ்துபடி தென் மேற்கு மூலையில் தலை வைத்து படுப்பதற்கு வசதியாக கட்டில் எப்படி போட வேண்டும், அந்த அறையில் ஏ.சி. எங்கு பொருத்தவேண்டும், டி.வி. எங்கு வைக்க வேண்டும், டிரஸ்ஸிங் டேபிள் எங்கு இருக்க வேண்டும், அட்டசெட் பாத்ரூமில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பவித்ரா டிசைன் செய்தாள். 

அலுவலக கட்டுமானத்தை பொறுத்தவரை கண்ணன் பிளான் செய்தார். அதாவது கட்சிகாரர்கள் தெருவிலிருந்து நேராக மாடிப்படி ஏறி  அலுவலத்திற்கு வந்து, முன் பகுதியில் உள்ள காத்திருக்கும் அறையில் அமர்ந்து, பின் அழைப்பின் பேரில் பிரதான கதவை திறந்து கொண்டு அலுவலத்தில் நுழைவது போன்று பிளான். பெரிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கண்ணனின் பிரத்யோக அறை (சேம்பர்). மற்ற பகுதிகளில் ஜூனியர், டைப்பிஸ்ட் அமர சேர், டேபிள்கள். சுவர் முழுக்க சட்ட புத்தகங்கள் வைக்க செல்ப்கள். இரண்டு ஸ்ப்ளிட் ஏ.சி.

அலுவலக பகுதி முடிந்தவுடன், படுக்கையறை, பின் மற்றொரு அறை (இது சமையலறையாக பயன்படும் வண்ணம் பிளான் செய்யப்பட்டது), அதற்குப் பிறகு மற்றொரு படுக்கை அறை. இது முடிந்தவுடன் கீழ் வீட்டிக்கு பின்புறமாக இறங்கும் வண்ணம் ஒரு படிக்கட்டு. இது நேராக கீழ் வீட்டின் சமையல் அறை வாசலுக்கு சென்று முடியும்.

கட்டடம் வளர்ந்து கொண்டு வந்தது... கண்ணனின் வாழ்வும் வளர்ந்து கொண்டு வந்தது.. குழந்தைகள் வளர்ந்து வந்தனர்.... கண்ணன் பவித்ரா அன்பும், புரிதலும்  வளர்ந்தன.

இவர்களது சந்தோஷமான வாழ்கை உற்றார், உறவினர், அண்டை வீட்டினர், சக வழக்குரைஞ நண்பர்கள் என எல்லோரும் பொறாமைப்படும்படி இருந்தது. 

(தொடரும்) 

Sunday 30 October 2011

மதனப் பெண் 16 - இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன?

"லக்ஷ்மியம்மா ! உங்க மகனுக்கு ரெண்டு குழந்தை ஆயிடிச்சு.. அதுவும் ஆண் ஒன்னு, பெண் ஒன்னுன்னு ரெண்டு.. இப்போ கருத்தடை ஆபரேசன் செய்துகிறது நல்லது. அதுவும் உங்கள் மகன், மருமகள் ரெண்டு பேரும் விரும்பறாங்க.. ஆபரேசன் பண்ணிக்கட்டுமே ! கருத்தடை இல்லையென்னா இன்னொரு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கு. தேவையான்னு பாருங்க" என்றார் மருத்துவர். 

"டாக்டர் நீங்க சொல்றது சரிதான். ஆனா கருத்தடை ஆபரேசன் செய்துகிட்ட பிறகு மறுபடியும் ஒரு குழந்தை வேணுன்னு நினைக்கிறோம். அது சாத்தியம் இல்லமே போய்டுமே டாக்டர்" என்றார் வரலக்ஷ்மி.

"ஏன் சாத்தியம் இல்லே.. கட் பண்ணின பிலோபியன் டியுபை மறுபடியும் ஒரு ஆபரேசன் செய்து ஜாயின் பண்ணினா போச்சு.. மீண்டும் கருத்தரிக்கலாம்," என்றார் மருத்துவர் சற்று கூலாக..

"இதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டர். அதுவுமில்லமே கருத்தடை ஆபரேசன் செய்துகிட்ட என்னோட சில  உறவுக்காரப் பெண்களுக்கு இடுப்பு வலி, மென்சஸ் ப்ராபளம் அது இதுன்னு ஏதாவது ஒரு கோளாறு தொடர்ந்து வந்து கிட்டே இருந்தது. அதுவுமில்லமே எங்க ஹஸ்பெண்ட் ஒரு டாக்டரா        இருந்தவர். அவர்கிட்டே இந்த மாதிரி நிறைய கேஸ் வந்திருக்கு.. எனக்குத் தெரியும். அதெல்லாம் என் பொண்ணு பவித்ராவுக்கு வரக்கூடாது. அவ எப்பவும்  சௌக்கியமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்க டாக்டர்"

இதை கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா, தனது அத்தை தன் உடல் நலம் முன்னிட்டே இந்த அறுவைக்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்பதை அறிந்து, "சே, இவரை போய் திடீரென 'மாமியராகிவிட்டரோ' என்று நினைத்து விட்டோமோ" என்று ஒரு நிமிடம் குறுகிப் போனாள். அதுவும், பேச்சின் நடுவே தன்னை "என் பொண்ணு பவித்ரா" என்று குறிப்பிட்டு வரலக்ஷ்மி பேசியதை நினைத்து பவித்ராவுக்கு தனது அத்தை தனக்கு எப்போதும் இன்னொரு தாய்தான் என்று மகிழ்ந்தாள்.

இதற்கிடையில் மருத்துவர், "ஒ.கே. கருத்தடை ஆபரேசன் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு உங்க மனசிலே ஆழமா பதிஞ்சு இருக்கு லக்ஷிமியம்மா. அதுக்கு பதிலா வேறு ஒரு சிம்பிள் மெத்தட் இருக்கு." என்றார்.

"டாக்டர்.. கொஞ்ச காலத்துக்கு கர்ப்பமும் தரிக்கக் கூடாது.. மறுபடியும் குழந்தை பெக்கறா மாதிரியும் இருக்கணும். உடம்புக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது.. ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும். இதுதான் எனக்கு வேணும்" என்று இம்முறை வரலக்ஷ்மி தெளிவாக தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.

"லக்ஷ்மியம்மா.. அதுக்கு ஒரே வழி.. 'காப்பர் டி' வச்சுகிரதுதான். ஆபரேசன் கிடையாது. ரொம்ப சிம்பிள். சைடு எபக்ட் ஒன்னும் வராது. தேவைப்பட்ட எடுத்திடலாம். மீண்டும் கர்ப்பம் தரிக்கலாம்," என்று மருத்துவர் கூறினார். 

இது பவித்ரா, கண்ணன், வரலக்ஷ்மி என எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. எல்லோரும் ஒருமனதாக இதற்கு இசைந்தனர். தனது தாய் இவ்வளவு விவரங்களை மருத்துவரிடம் கேட்டறிந்து ஒரு முடிவுக்கு வந்தது கண்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. குறிப்பாக,  பவித்ராவிற்கு உடல் பிரச்னையும் வரக்கூடாது, அதே நேரத்தில் அவளது விருப்பத்திற்கும் தடை போடக் கூடாது என்று தனது தாய் நினைத்தது கண்ணனுக்கு பெருமையாக இருந்தது.

மருத்துவர், "இப்போ பவித்ராவை டிஸ்ஜார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்க.. ரெண்டு மாசம் கழிச்சு மறுபடியும் வாங்க.. அப்போ செக் பண்ணி 'காப்பர் டி' வச்சுக்கலாம்" என்றார். 

கண்ணன் - பவித்ரா ஏற்கனவே ஒருவருக்கொருவர் மிகவும் அன்பானவர்கள். நன்கு புரிந்து கொண்டவர்கள். இவர்களது புரிதலில் வரலக்ஷ்மியும் இணைந்தது இன்னும் சிறப்பு. பவித்ராவை ஒரு தாயாக வரலக்ஷ்மி தாங்குகிறார். பவித்ராவும் அப்படியே. சம்பந்தி சுந்தரம், வரலக்ஷ்மிக்கு சொந்த அண்ணன். அவரோ, அவரது மனைவி சர்மிளாவோ எதையும் கண்டு கொள்வதில்லை. இங்கு பிறந்த வீட்டில் இருந்த தங்கள் பெண், மற்றொரு பிறந்த வீட்டிற்கு சென்று சுகமுடன் வாழ்கிறாள் என்ற மகிழ்ச்சியில் அவர்கள்.      இப்படி முழுமையாக புரிந்து கொண்ட  குடும்பத்தில் குதூகலம் சேர்க்க இரண்டு குழந்தைகள். கண்ணனுக்கு கண்ணியமான தொழில், கை நிறைய வருமானம். வீடு முழுக்க மழலை சொல்! பவித்ராவின் கலகல சிரிப்பு !! 

இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் வாய்த்து விடுமா என்ன?
நினைத்தாலே இனிக்கின்றது ! 


(தொடரும்) 

மதனப் பெண் 15 - சமாதானம்

பவித்ரா கருத்தடை அறுவை செய்து கொள்ள விரும்புவதை கண்ணன் தனது தாயார் வரலக்ஷ்மியிடம் சொன்னார்.

இந்த முடிவைக் கேட்டு வரலஷ்மியின் சுருக்கம் விழத் தொடங்கிய முகத்தில் மேலும் சற்று சுருக்கங்கள் தோன்றின.

"கண்ணா. நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு அப்புறம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்காதான்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனா எந்தக் குழந்தையும் என் வயத்திலே தங்கலே. எல்லாம் போய்டிச்சு. நீ இப்போ நல்ல சம்பாதிக்கிறே.. இன்னும் நிறைய சம்பாதிப்பேன்னு, நல்ல வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒத்தப் பனைமரமா இருந்த உனக்கு இப்போ துணைக்கு ரெண்டு மரம் சேர்ந்திருக்கு. வீடும் கலகலப்பா இருக்கு. அதோட ரெண்டு பேருக்கும் வயசு இருக்கு. அதுக்குள்ளே ஏம்ப்பா கருத்தடை ஆபரேசனேல்லாம் ? சிலருக்கு உடம்புக்கு ஒத்துக்கும்.. சிலருக்கு ஒத்துக்காது.." என்றார் வரலக்ஷ்மி.

"கருத்தடை ஆபரேசன் இந்தக் காலத்திலே சகஜம்மா.. ஒரு ரிஸ்கும் இல்லே.." என்றார் கண்ணன்.

ஆனால் தனது கருத்தை வலியுறுத்தி சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வரலக்ஷ்மி, "அதெல்லாம் சரிதான்ப்ப..." என்று சொன்னவர், "கருத்தடை ஆபரேசனெல்லாம் வேணாம் கண்ணா" என்றார். மேலும், "ஏன்  இன்னொரு வாரிசு வந்தா என்ன இப்போ?" என்று சடக்கென ஒரு கேள்வியையும் எழுப்பினார்.

ஒரு மகனை பெற்ற ஆதங்கத்தில் வாழ்ந்து வந்த வரலக்ஷ்மி தனது மகனுக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று கருதியதில் வியப்பு ஏதுமில்லை.

கண்ணனும் விடாமல், "என்னம்மா நீங்க இப்படி சொல்றீங்க?
எனக்கு பிறந்திருக்கிற இந்த ரெண்டு குழந்தைகளை நல்ல வளக்கணும். அதுக்கே இந்த காலகட்டத்துலே நேரம் போதாது.. குழந்தைகளோட நேரத்தை செலவு பண்ணவே சரியாப் போய்டும். இதிலே இன்னொரு குழந்தை பிறந்த நான் பவித்ராவை கவனிக்கிறதோ, இல்லை பவித்ரா  என்னை கவனிக்கிறதோ சிரமமாய்டும்.. பவித்ராவும் சின்ன பொண்ணுதானே.. எனக்கென்னமோ கருத்தடை ஆபரேசன் பண்ணிக்கிறதுதான் பெட்டர்ன்னு தோணுது", என்று தொடர்ந்து வாதிட்டார்.

ஆனால் வரலட்சுமிக்கு இதில் உடன்பாடு இல்லை. பவித்ரா கருத்தடை அறுவை  செய்து கொள்வதருக்கு அவர் இசையவில்லை.

இந்த வாக்கு வாதங்கள் நடந்து கொண்டிருத்த போது பவித்ராவின்  அறைக்கு மருத்துவர் வந்தார். பவித்ராவை மீண்டும் பரிசோதனை செய்து, "மிஸ்டர் கண்ணன், நீங்க பவித்ராவையும் குழந்தையையும் வீட்டுக்கு கூட்டி போகலாம். தே ஆர் ஆல்ரைட்" என்றார்.

அப்போது கருத்தடை அறுவை செய்து கொள்ள பவித்ரா விரும்புவது குறித்தும், அதற்கு தனது தாயார் ஆட்சேபனை செய்வது குறித்தும் மருத்துவரிடம் கண்ணன் ஆங்கிலத்தில் கூறினார். விவரத்தை புரிந்து கொண்ட மருத்துவர் தனது பங்குக்கு வரலக்ஷ்மியிடம் தெளிவாக சில வார்த்தைகள் பேசினார்.

இதற்கிடையில் பவித்ரா இந்த பேச்சு வார்த்தைகளையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தார். "தனது சொந்த அத்தை எதற்கு இப்படி பேசுகிறார்? தன்னை பிள்ளை பெற்றுப் போடும்  மிசின் என்று நினைத்து விட்டாரோ? தனது விருப்பத்திற்கு தனது கணவன் கண்ணன் செவி சாய்த்திருக்கும் போது இவர் மட்டும் ஏன் அனுமதி தர மறுக்கிறார்? ஒருவேளை அத்தையிடம் சொல்லியிருக்கக் கூடாதோ?" என்று பல கேள்விகளை தனக்குள்ளே எழுப்பி மன உளைச்சல் அடைந்தாள் பவித்ரா. அத்துடன் இத்தனை நாள் தங்கள் விருப்பங்களுக்கு குறுக்கே வராதவர், இப்போது இப்படி தர்க்கம் பேசுவது கேட்டு உள்ளுக்குள் அத்தையின் மீது கோபமும் வந்தது, பவித்ராவிற்கு. "தனது அத்தை ஒருவேளை உள்ளபடி  மாமியாராகி விட்டாரோ?" என்றும் ஐயம் கொண்டாள்.

எனினும் மருத்துவர் தொடர்ந்து பேசிய சில தகவல்களின் அடிப்படையில்  வரலட்சுமிக்கு சமாதானம் ஏற்பட்டது.

அது என்ன சமாதானம்?   

(பின் சொல்கிறேன்)  
Related Posts Plugin for WordPress, Blogger...