காலை நேரம். மணி சுமார் 9.30௦ இருக்கும். கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல வழக்கு கட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அதே சமயம் மேல் தளத்தில் கான்கிரீட் முட்டுகளையும் பலகைகளையும் பிரிக்கும் பணி பற்றியும், அதை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டியது என்பது பற்றியும், மேஸ்திரி தனது வேலையாட்களுக்கு ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தார்.
தொடர்ந்து ஈசான்ய மூலையில் ஒரு விளக்கு பொருத்தி, வாழைப்பழம், ஊதுபத்தி வைத்து, கர்ப்பூரம் காட்டி மேஸ்திரியும், பணியாட்களும் வணங்கினர். அப்படியே சூரியனைப் பார்த்தும் நமஸ்கரித்தனர். முடிவில் மேஸ்திரி ஒரு எலுமிச்சை பழத்தை எட்டாக அறுத்து குங்குமம் தடவி அதன் சாறை புதுக் கட்டடத்தின் எட்டு திசைகளிலும் பிழிந்து போட்டார்.
பிறகு முட்டு மற்றும் பலகை பிரிக்கும் பணியில் வேலையாட்கள் ஈடுபட்டனர். முதலில் கண்ணனின் அலுவலக அறையின் முட்டுகளை நகர்த்தி வைத்து, கான்கிரீடுடன் ஒட்டி இருக்கும் சென்ட்ரிங் பலகைகளை பிரித்து எடுத்து தனியாக அடுக்கி வைத்தனர். கண்ணனின் அலுவலக அறை பெரியது என்பதால், முட்டு பிரிக்கும் வேலை முடிய சாப்பாட்டு நேரம் ஆகி விட்டது.
எல்லோரும் தாங்கள் காலை கொண்டு வந்திருந்த சாப்பாட்டு கூடையை எடுத்து சாப்பிட அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கண்ணன் தனது காலை நேர நீதிமன்ற பணி முடிந்து சாப்பிட வீட்டிற்கு வந்திருந்தார். பவித்ரா அவரை வரவேற்று சாப்பாடு பரிமாறும் பணியில் ஈடுபட்டாள்.
கண்ணன் சாப்பிட அமரும் நேரத்தில் மேல் தளத்தில் பணியாட்கள் தங்கள் மதிய உணவை முடித்து படுக்கை அறையின் முட்டுகள் மற்றும் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தட்டில் பவித்ரா சாதம் வைத்து முதலில் பருப்பும், இரண்டு கரண்டி ஆவின் நெய்யும் (காய்ச்சி வைத்திருந்தாள்) ஊற்றினாள். "பவித்ரா.. எனக்கு நெய் எல்லாம் கொஞ்சம் கம்மி பண்ணு.. வெயிட் ஏறிக்கிட்டே போரேன் பாரு .. என்னை கவனிக்கறதே குறைச்சிக்கிட்டு குழந்தைகளை நல்ல கவனி" என்று செல்லமாக கோபித்துக் கொண்டார். "குழந்தைகளையும் நல்ல பாத்துகிறேன்.. நீங்களும் எனக்கு ஒரு குழந்தை இல்லையா..?!" என்று பவித்ராவும் தன் பங்குக்கு உதட்டை உள்ளுக்கு கடித்தார் போல் செய்து ஒரு கண்ணை மட்டும் சற்றே சிறியதாக்கி செல்லமாக கோவித்துக் கொண்டு பேசினாள்.
"சரி.. சரி.. நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு அம்மா சொல்லிருக்காங்க.. நியாபகப் படுத்துறேன்.. மறந்துடாதீங்க.. அம்மா.. அபிசேகத்துக்கு பணம் கட்டிட்டான்களாம். நீங்க அவசியம் வரணும். வேலை இருக்கு.. அது.. இது.. ஏதாவது சாக்கு சொல்லிடக்கூடாது" என்று பவித்ரா பிரார்த்தனை பற்றி கண்ணனுக்கு நினைவுபடுத்தினாள்.
கண்ணனும் அதை ஏற்றுக் கொள்ளும் வண்ணம், "As Your Honour pleases" என்றார். அவருக்கு வீட்டில் பவித்ராதான் நீதிபதி. வீட்டு நீதிபதி பவித்ரா சொல்வதற்கு அவர் அப்பீல் செய்வதில்லை. பவித்ராவின் தீர்ப்பும் சரியாகவே இருக்கும்.
இப்படி பேசிக்கொண்டே, பருப்புபுடன் பிசைந்து கொண்ட சாதத்தை எடுத்து அவர் ஒரு வாய் சாப்பிட போனார்.
அப்போது மேல் தளத்தில் இருந்து "ஐயோ.. அம்மா.." என்ற அலறல் சத்தம், ஓலமாக கேட்டது. தொடர்ந்து முட்டுகளும், பலகைகளும் சரிந்து தடதடவென விழும் ஓசையும் கேட்டது.
கண்ணன் பதறிப் போய் கைசாதம் கையிலேயே இருக்க உடனடியாக மேல்தளத்திற்கு விரைந்தார். பவித்ராவும், வரலக்ஷ்மியும் கண்ணனின் பின்னால் ஓடினர்.
அங்கே.....?
(பிறகு சொல்கிறேன்)
2 comments:
சரியாய் சாப்பிடும் நேரத்தில் ..கஷ்ட்டம் ஆரம்பமோ!!
@ இராஜராஜேஸ்வரி
சரியாய் சாப்பிடும் நேரத்தில் ..கஷ்ட்டம் ஆரம்பமோ!
யாரைத்தான் கஷ்டம் விட்டுவைத்தது...?
Post a Comment