இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Wednesday 6 February 2013

மதனப் பெண் 40 - சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம் !

சீனியர் வழக்குரைஞரும் அவரது மனைவி கண்மணியும் முன் வைத்த கருத்துகள், வேண்டுகோள் ஆகியன தற்போது கண்ணனை பேச வைத்தன.

"சார்..., நீங்க ரெண்டு பேரும் என்னோட, என் குழந்தைகளோட, என் வருங்கால  நன்மைக்காக பேசுறீங்க என்பதை என்னால நல்லாவே உணர முடியுது. ஆனா, பவித்ரா இறக்கறப்போ அவ பேசுனது என்னை இந்த விசயத்திலே ஒரு முடிவுக்கு வர முடியாமே தடுக்குது. அவ ஆஸ்பத்திரியிலே சாகக் கிடக்கிறப்போ, 'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டா.... அந்த கேள்விக்கு எது சரியான விடையாக இருக்கும் என்பது எனக்கு இன்னும் விளங்கலே...." என்று கண்ணன் தனது மனதில் இருந்த ஒரு ஐயப்பாட்டை இருவருக்கும் விளக்கினார்.

பிறகு அங்கிருந்த சட்ட புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தவாறு, "எனக்கு இருக்கிற சங்கடமெல்லாம், என்னை கல்யாணம் செஞ்சுகிற பொண்ணு என்னையும் என் வருமானத்தையும் பாத்து வேண்டுமானால் கல்யாணம் பண்ணிக்கலாம்; ஆனா என் குழந்தைகளை பாத்து கல்யாணம் செஞ்சுக்குவா என்கிறதிலே எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. குழந்தைகளுக்காக கல்யாணம் பண்ணி, வர்றவ குழந்தைகளை பாத்துக்காம போன கூட பரவாயில்லை... அதுக்கு பதிலா கொடுமை செய்ய ஆரம்பிச்சா... இல்லை பாரபட்சம் காமிச்சா... இல்லை நான் குழந்தைகளை கவனிச்சுகிறதிலே இடைஞ்சல் செஞ்சா என் மனசு என்ன வேதனைப்படும் என்கிறதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளைக்கு அவளுக்கென்னு ஒரு குழந்தை பிறந்தா.., தன் குழந்தையை பாப்பாளா ? இல்லை... என் குழந்தைகளை பாப்பாளா ? அதோட வர்றவ எந்த உள்நோக்கத்தோடு வர்றா என்பது யாருக்குத் தெரியும் ?" என்று தனது தரப்பில் உள்ள நியாயமான அச்ச உணர்வுகளை விளக்கினார்  கண்ணன்.

அவரே தொடர்ந்து, "நிம்மதிக்காக, சமூக வாழ்க்கைக்காக இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, பின்னாடி அந்தக் கல்யாணத்தாலேயே அந்த நிம்மதியை தொலைச்சிரக் கூடாது, என்கிறது என் அபிப்பிராயம்" என்று கண்ணன் தனது நிலையை தெளிவாக்கினார்.

இதையெல்லாம் பொறுமையாக தனது கணவர் நாகலிங்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்த கண்மணி, "கண்ணா ... நீ இந்த விசயத்துக்கு ரொம்ப தூரம் யோசனை செய்றேன்னு நான் நினைக்கின்றேன்.. அஃப்கோர்ஸ் ... யோசனை பண்ண வேண்டியது நியாயம்தான்... ஏன்னா.. கல்யாணமென்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். அதனாலே... நீ இப்படி யோசிக்கிறதிலே நியாயம் இருக்கு... உனக்கு சொந்தத்திலும் பெண் கிடையாது... இருந்தா அந்தப் பொண்ணேக்  கேட்கலாம். ஊர் உலகத்திலே பொண்டாட்டி, புருஷன் செத்தவங்க... முதோ கல்யாணத்திலே குழந்தை இருக்கிறவங்க, ரெண்டாம்  கல்யாணம் பண்ணிக்கிறது ஒன்னும் புதிசில்லே.. (தனது கணவர் நாகலிங்கத்தைப் பார்த்து) இவரோட தம்பி மகனோட பொண்டாட்டி ஒரு குழந்தையை விட்டுட்டு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி செத்துப் போய்ட்டா.. இப்போ அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு சௌக்கியமா இல்லையா?" என்று சற்று படபடப்புடன் கண்ணனை நோக்கி பேசினார்.

இப்போது சீனியர் நாகலிங்கம், "கண்ணா... உனக்கு வயசு கம்மி... உனக்கும், உன் குழந்தைகளுக்கும் ஒரு பெண் கட்டாயம் வேணும்... இதுக்கு உன்னோட பதில் என்ன...?" என்று பிரச்சனையை நெருக்கி, சுருக்கினார்.

இதற்கு கண்ணன், "எனக்கு நல்லா புரியுது.... ஆனா என்னோட முடிவுன்னு  கேட்டால் இப்போதைக்கு நான் சொல்ற பதில், நாம யாரிடமும் போய், என்னோட நிலையை விளக்கி, அவங்களை  சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம்... என்னோட நிலையை புரிந்து கொண்டு பொண்ணு தர தானா முன் வர்ற குடும்பதிலேருந்து பெண் பாப்போம், எல்லாம் ஒத்து வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று ஓரளவு படிந்து வந்தார்.

கண்ணன் இப்படியாவது ஒரு முடிவுக்கு வந்தாரே என்று நாகலிங்கமும், கண்மணியும் சற்று சந்தோசப் பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து, "இப்படி பெண் பாக்கிறதுக்கு என்ன பண்ணப் போறே கண்ணா ?" என்று கண்மணி அவசரமாக கேட்டார்.

இதற்கு "என்னோட சூழலை விளக்கி கொஞ்ச நாள் கழித்து பேப்பர்லே விளம்பரம் செய்யப் போறேன்" என்று கண்ணன் பதிலளித்தார்.

இது அவர்கள் இருவருக்கும் சரியெனப்பட்டது. 'சுபம் சீக்கிரமே  நடக்கட்டும்' என்று வாழ்த்தி, இந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார், கண்மணி.

இருவரிடமும் விடை பெற்று கண்ணன் வீடு திரும்பினார்.

எனினும் கண்ணன் தனது இந்த முடிவிலும் இரண்டு 'ரிசர்வேசன்' வைத்திருந்தார். 

அதை பின்னர் சொல்கின்றேன்.....

Monday 4 February 2013

மதனப் பெண் 39 - இப்படி கூட நமது வாழ்வில் சில சமயம் நடந்து விடும் !

கண்ணன் கொடைக்கானலில் இருந்து திரும்பி வந்து தனது வழக்கமான பணிகளில் மனதை செலுத்திக் கொண்டிருந்தார். தனது இரு குழந்தைகளை தவிர வேறு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாத ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்படி சுமார் 1 மாதம் சென்று விட்டது. 

இந்நிலையில் கண்ணனுக்கு அவரது  சீனியர் வழக்குரைஞர் நாகலிங்கம் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தார். 

"ஹலொவ் கண்ணன் .... நான் பேசுறேன்... டைம் இருந்த வொர்க் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டு போயேன். ஐ வான்ட் டு ஹவ் எ டிஸ்கசன் வித் யு ...!" என்று சுருக்கமாக பேசினார்.

தனது சீனியர் ஏதாவது ஒரு முக்கிய வழக்கு குறித்து கலந்துரையாட அழைக்கின்றார் என்று கருதி, "எஸ் சார் ... இட் இஸ் மை பிளசர் ... நாளைக்கு சண்டே ... நிச்சயம் வர்றேன் சார்" என்று கண்ணன் தனது வருகையை பவ்யமாக உறுதிப்படுத்தினார். 

சீனியரின் வீட்டுக்கு ஞாயிற்று கிழமை காலை சுமார் 11 மணி அளவில் கண்ணன் சென்றார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், "இப்படி கூட நமது வாழ்வில் சில சமயம் நடந்து விடும்.. எல்லாம் சரி பண்ணிக்கலாம்... " என்று தனது கட்சிக்காரகளுக்கு முதலில் பயத்தை தெளிவித்து நம்பிக்கையையும்  உற்சாகத்தையும் ஊட்டுபவர் மூத்த வழக்குரைஞர் நாகலிங்கம். அன்றும் அதே உற்சாகத்துடன் அவர் கண்ணனை வரவேற்றார்.

"வா கண்ணா... அம்மா, குழந்தைகளெல்லாம் நல்லா இருக்காங்களா...? பவித்ராவோட திதிக்கு வந்தப்போ குழந்தைகளை பாத்தேன். ரோஹிணி நல்ல படிக்கிறாளா..? நீதான் எப்பவும் டல்லா இருக்கே.. கமான் சியர் அப் யங் மேன் .." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, "வா... கண்ணா .. எப்படி இருக்கே?" என்றவாறு சீனியரின் மனைவி கண்மணி கையில் காஃபி கோப்பைகளுடன் வந்தார்.

சீனியரும் அவரது மனைவி கண்மணியும் சிறிது நேரம் கண்ணனிடம் சில பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்தனர். பிறகு கண்ணனை அழைத்த காரணம் தொட்டு சீனியர் பேச ஆரம்பித்தார். 


"கண்ணா... ஒரு முக்கியமான டிஸ்கசனுக்கு உன்னை நான்  கூப்பிட்டேன். ஆனா இப்போ உன்னோட டிஸ்கசன் பண்ணப் போறது யாரு தெரியுமா...? என்  டியர்தான்...!" என்று கண்மணியை ஓரக்கண்ணால் பார்த்தார். தொடர்ந்து, "என்ன டியர் ... நான் சொல்றது சரிதானே ?" என்று கண்மணியிடமும் கேட்டார் நாகலிங்கம். அதற்கு கண்மணி, "இதெல்லாம்  நான்தானே பேசியாகணும்.." என்று உதட்டோர புன்னைகையுடன் பதிலளித்தார். 

இருவரும் ஏதோ புதிராக பேசுகிறார்களே என்று கண்ணன் நினைத்துக் கொண்டிருந்த வெளியில், சீனியரின் மனைவி கண்மணி, "அது ஒண்ணுமில்லே கண்ணா.... நம்ம ரீலேசன் ஒருத்தர் இங்கே சிம்மக்கல் பக்கத்திலே இருக்கார். பேன்சி ஸ்டோர் வச்சிருக்கார். வியாபாரம் பரவாயில்லை. நல்ல குடும்பம். எதென்னாலும் உங்க சீனியர் பேச்சை தட்டமாட்டங்க.." என்று சற்று நிறுத்தி தனது கணவர் நாகலிங்கத்தை அதே ஓரக்கண்ணால் பார்த்தார்.


இதையடுத்து உரையாடலின் தொடர்ச்சியை நாகலிங்கம் எடுத்துக்கொண்டு சற்று தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "கண்ணா... நீ இன்னும் பவித்ராவோட வாழ்ந்துகிட்டிருகிறே என்கிறது எங்களுக்கு நல்லவே தெரியும்... பவித்ராவை உன்னாலே  மறக்க முடியாது என்கிறதிலே எங்களுக்கு மாற்றுக் கருத்து துளிக்கூட இல்லே.... மறக்கவும் கூடாது.... அதுதான் நியாயம். ஆனா உன் குழந்தைகளை நினைச்சு பாரு.. அதுகளுக்கு இப்பவே பவித்ராவோட இடத்திலே இன்னொரு பொண்ணே அறிமுகப் செஞ்சு வெச்சிட்டா அவங்க காலப்போக்கிலே அவளை தங்களோட பெத்த தாயா பாக்க ஆரம்பிச்சுடுவாங்க... கொஞ்சம் வளந்து பெருசான இதுக்கு சாத்தியம் குறைஞ்சு போய்டும்... அன்னியோன்யம் வராது... காலம் ரொம்ப சீக்கிரமா போய்டும். உனக்கும் ஒரு துணை வேணும் என்கிறது எங்களோட அபிப்பிராயம். கொஞ்சம் திங்க் பண்ணிப் பாரு..." என்று மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில் வாதிடுவது போல் கண்ணனிடம் பேசினார். 


இதையடுத்து சீனியரின் மனைவி கண்மணி பேசுகையில், "அந்த சிம்மக்கல் ரீலேசனுக்கு மூணு பொண்ணுங்க.... ரெண்டு பசங்க... மூத்த பொண்ணு பி.எ. டிஸ்கன்டினியு.  இருந்தாலும் நல்ல குடும்பபாங்கா பவித்ரா மாதிரியே இருப்பா... வசதி கம்மியின்னாலும் நல்ல குணம்.. பொறுமைசாலி...  அவளுக்கு வரன்  எதுவும் செட்டாகலே. தட்டிக் கழிச்சு போய்க்கிட்டுருக்கு. ஆனா உனக்கும் அவளுக்கும் பொருத்தம் நல்ல இருக்கு.  உனக்கு செவ்வா தோஷம், அவளுக்கும் செவ்வா தோஷம்.. ஒத்துப்போகுது. பொறுப்பு தெரிஞ்ச பெரிய குடும்பம் என்கிறதாலே உன் குழந்தைகளை நல்ல பாத்துப்பா. உங்க சீனியர் பேசினா ரெண்டாம் தாரத்துக்கு  நிச்சயம் ஒத்துப்பாங்க." என்றார் சற்று பெரு மூச்சுடன்.. சொல்ல வேண்டும் என்று நினைத்ததை சொல்லி விட்ட ஒரு திருப்தி அவரது முகத்தில் தெரிந்தது.


எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு, தான் வழக்குப் பிரச்சனைகாக பேச அழைக்கப்படவில்லை என்பதும், தனது வாழ்க்கைப் பிரச்சனைக்காக பேச அழைக்கப்பட்டிருக்கின்றேன் என்பதும் புரிந்தது. 

கண்ணன் இதற்கு என்ன பதில் சொன்னார்....? 

அவர் இந்தப் பிரச்சனைக்கு ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுதான் என்ன..?


(தொடர்கின்றேன்)


Sunday 3 February 2013

மதனப் பெண் 38 - ஒரு சித்தியால் தாய்க்குரிய அன்புடன் நடந்து கொள்ள முடியுமா?

பொங்கல் விடுமுறைக்காக கண்ணன் கொடைக்கானல் சென்று தனது மகள் ரோஹிணியை அழைத்து வந்தார். பவித்ரா இறந்த காரணத்தால் வீட்டில் பொங்கல் வைக்கவில்லை. எனினும் கண்ணனின் தாயார் வரலக்ஷ்மி தனது பேரக் குழந்தைகளுக்காக சிறிது  சக்கரை பொங்கல் செய்தார்.

பவித்ராவின் வருஷ திதி 21-ஆம் தேதி வந்தது. புரோஹிதம் செய்யும் ஐயரை அழைத்து வந்து பவித்ராவிற்கு ஆத்மார்த்தமாக திதி கொடுத்தார். விபத்தில்  அகால மரணம் என்பதால் வைதீக காரியங்கள் எளிய முறையில் செய்யப்பட்டன. கண்ணனின் சித்தப்பாமார்கள், மாமன்மார்கள், நண்பர்கள் என நெருங்கியவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

பவித்ராவின் நிழற்படத்திற்கு மாலை அணிவிக்கும் போது, கண்ணன் மனதளவில் உடைந்து போனார். அதை அவர் கண்களில் பொங்கி வெளி விழத்  தயாராக நின்று கொண்டிருந்த நீர்த் துளிகள் அனைவருக்கும் காட்டியது. ரோஹினி மௌனமாக நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு விவரம் புரிந்து விட்டது. ஆனால்... பாவம்...  சத்யதேவிற்கு எதுவும் புரியவில்லை. தனது தாத்தாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

பவித்ரா கண்ணனை தனிமையில் தவிக்க விட்டுச் சென்று ஓராண்டு காலம் ஓய்ந்து போனது. ஆனால் கண்ணனின் மனதில் அன்பு மனைவி பவித்ராவின் நினைவுகள் ஏதும் சற்றும் ஓயவில்லை.

நீதிமன்றத்திற்கு செல்லும் முன் கோட், கவுனை  நன்கு துடைத்து பவித்ரா எடுத்துக் கொடுப்பாள். கார் வரை வந்து வழியனுப்பி வைப்பாள். நீதிமன்றத்தில் இருந்து திரும்பி வந்தவுடன் அன்றலர்ந்த செந்தாமரையாக பவித்ரா நன்கு முகம் கழுவி, நேர்த்தியாக உடை உடுத்தி, கொஞ்சம் பூ என்றாலும் நன்கு மணம் வீசும் மதுரை மல்லிகை வைத்துக் கொண்டு   பளிச்சென வந்து வரவேற்பாள். தொடர்ந்து ஒரு கையில் சொம்பு  நீரும், மற்றொரு கையில் சூடான டிகிரி காபியும் கொண்டு வந்து கொடுப்பாள். இவை யாவும் கண்ணனின் மனதில் திரும்ப திரும்ப வந்து, அலையாக அடித்துக் கொண்டிருந்தன. கட்டிய  மனைவிக்காக ஆசையாக கட்டிய வீடு கண்ணனைப் பொறுத்தவரை ஒரு சுழியமாக தெரிந்தது. 

கண்ணன் என்னதான் மெத்தப் படித்தவர் என்றாலும், பவித்ரா இல்லாத ஒரு வாழ்வை சட்டென ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதே நேரத்தில் பவித்ராவின் இடத்தில் பவித்ரா போல தனக்கு ஒரு அம்மா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மகள் ரோஹிணி சொன்ன வார்த்தைகள் கண்ணனை சிறிது பாதிக்கவே செய்திருந்தது. 


பவித்ராவின் இடத்தில் இன்னொரு பெண்ணை கண்ணனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பவித்ரா போல் தனக்கு இன்னொரு அம்மா வேண்டும் என்று குழந்தை ரோஹிணி  முன் வைத்த கோரிக்கையை கண்ணனால்  அவ்வளவு எளிதாக நிராகரிக்கவும் முடியவில்லை. 

மனைவி இறந்தவர் மறுமணம்  கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. தனக்காக செய்து கொள்ளாவிட்டாலும், தன் குழந்தைகளுக்காக செய்து கொள்வதிலும் தவறில்லை. ஆனால் பவித்ரவே கண்ணனின் நாடி, நரம்புகளில் எல்லாம் முழுக்க வியாபித்து இருக்கும் போது, எப்படி இந்தப் பிரச்சனையை சமரசம் செய்து கொள்ள முடியும்? 


கட்டிக் கொண்ட மறு தாரத்துடன் குடும்பம் நடத்துவதா..? 
இல்லை... குழந்தைகளுக்காக கட்டிக் கொண்டவள் என்று நடத்துவதா...? அப்படியானால் அது இன்னொரு பெண்ணின் கல்யாணக் கனவை சிதைப்பது போலாகுமே..! 
வந்தவள் குழந்தைகளை கவனித்துக் கொள்வாளா? 
இல்லை... சித்தி கொடுமைகள் செய்து நோகடிப்பாளா?
பெற்ற குழந்தைகளாக நடத்துவது போன்று நாடகம் வேண்டுமானாலும் ஆடலாமே தவிர, உண்மையில் ஒரு சித்தியால் அவ்வாறு ஒரு தாய்க்குரிய அன்புடன் நடந்து கொள்ள முடியுமா? அதுவும் தனக்கென ஒரு குழந்தை பிறந்து விட்டால் இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டுமா?


இப்படி பல நெருடலான பிரச்சனைகளை மனதில் கொண்டு ரோஹிணியை பள்ளிக்கு கொண்டு சென்று விட கண்ணன் காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார்.

(இது உள்ளபடி ஒரு நெருடலான பிரச்சனைதான். இதற்கு கண்ணன் விரைவில் ஒரு முடிவு செய்தார்.... அது என்ன என்று ஊகிக்க முடிகிறதா...?)

(மீண்டும் தொடர்வோம்)

Sunday 15 January 2012

மதனப் பெண் 37 - வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்

புத்தாண்டு மகிழ்ச்சியாக பிறந்தது. கண்ணன், ரோஹினி, சத்தியதேவ் எல்லோரும் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். வரலக்ஷ்மிக்கு சந்தோசம்.

விடுமுறை முடிந்து கண்ணனுக்கு நீதிமன்றம் திறந்து விட்டது. ரோஹிணிக்கும் பள்ளி திறந்து விட்டது. எனவே அவளை பள்ளியில் கொண்டு சென்று விட கண்ணன் தயாரானார். ரோஹிணிக்கு பிரிய மனமில்லை.

"பொங்கல் லீவில் வரலாம்.. ஒரு வாரம் லீவ் கிடைக்கும்" என்று வரலக்ஷ்மி சமாதானம் சொல்லிய பிறகு ரோஹினி பள்ளிக்கு கிளம்பினாள். கண்ணன் அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்பட்டார்.

வழக்கம் போல் பயணம், பள்ளி, ரோஹிணியிடம் விடை  பெறல், மீண்டும் மதுரை நோக்கி பயணம்.

மதுரை வந்த பிறகு கண்ணன் தனது நீதிமன்றப் பணிகளில் மூழ்கினார். அதே நேரம் பொங்கல் பண்டிகை முடிந்து 21-ஆம் தேதி வரவிருக்கும் பவித்ராவின் வருஷ திதிக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனித்தார். புரோஹிதம் செய்ய தெற்கு வாசல் ஐயரைப் போய்ப் பார்த்தார். அவர், "வக்கீல் சார்.. உங்க ஆத்துக்காரி ஆக்சிடேன்ட்லே திடீரென்னு போயிட்டா...அகால மரணம்.. இயற்கையா செத்துபோனவாளுக்குதான் நிறைய சாஸ்திர சம்பிரதாயம் பண்ணனும்ன்னு கருட புராணம் சொல்லுது.. ஆனா அவா இப்படி திடீர் மரணம் அடைச்சதாலே, அவா நம்மோடுதான் இருக்கிறதாதான் அர்த்தம். அதனாலே அதுக்கு தக்க மாதிரி புரோஹிதம் செய்யனும்.. அதே நான் பாத்துகிறேன்... மகளை ஹாஸ்டலே இருந்து அழைச்சிட்டு வந்திடுங்க... சில சாமான்கள் தேவை.. அதுக்கு ஒரு லிஸ்ட் மட்டும் தாரேன்.. அதை வாங்கி பிரிபேர் பண்ணி வச்சிக்கோங்க." என்று ஐயர் விளக்கம் சொன்னார். அவர் கொடுத்த லிஸ்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

பவித்ராவின் வருஷ திதி வரும் விஷயத்தை தனது மாமன்மார்கள், சித்தப்பாமார்கள், தனது  மூத்த வழக்குரைஞர்கள் உட்பட தனது நண்பர்கள் அனைவரிடம் சொல்லி அன்றைய தினம் அனைவரையும் தனது வீடு வரும்படி அழைப்பு விடுத்தார்.

பத்து தினங்கள் பறந்து விட்டன. தொடர்ந்து பொங்கல் விடுமுறைக் காக ரோஹிணியை அழைத்து வர கண்ணன் கொடைக்கானல் கிளம்பினார். அப்பா எப்போது வந்து தன்னை அழைத்துப் போவார் என்று தனது பெட்டியு டன் காத்திருந்தாள் ரோஹினி. பள்ளி வந்தடைந்த கண்ணனை பார்த்ததும் ரோஹினியின் முகத்தில் உற்சாக வெள்ளம்; மகிழ்ச்சி. விடுதியை விட்டு ஓடோடி வந்து கண்ணனை கட்டிப் பிடித்துக் கொண்டாள். 'டாடி.. மை ஸ்வீட் டாடி... லவ்லி டாடி.. " என்று செல்லம் கொஞ்சினாள். கண்ணனும் ரோஹிணியை வாரியணைத்துக் கொண்டார். இருவரும் அப்படியே பள்ளியில் உள்ள பூங்காவைக் கடந்து வெளி வந்தனர்.

அப்போது ரோஹிணியை போல மற்ற பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்திருந்த அவர்களது தாய் தந்தையர் அந்தப் பூங்காவில், தங்கள் பிள்ளைகளுடன் குதூகலமாக இருப்பதையும், விளையாடுவதையும் ரோஹினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் திடீரென சுருங்கியது.

"டாடி... அங்கே பாருங்க.... என் கிளாஸ் மேட் பூஜாவோட மம்மி பூஜாவோட எவ்வளவு ஹேப்பியா விளையாடுறாங்க பாருங்க.." என்று அந்தப் பூங்காவில் ஓரிடத்தைக் காட்டினாள், ரோஹினி.


தொடர்ந்து, "ஏன் டாடி ...  எனக்கும் ஒரு மம்மி இருந்த எவ்வளவு நல்ல இருக்கும்..?" என்று கேட்டாள் ரோஹினி..

கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று சட்டென விளங்கவில்லை.

வாழ்க்கை சட்டென விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..! வாழ வாழத்தான் புரியும்.... !!

(பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.. )

Thursday 29 December 2011

மதனப் பெண் 36 - புத்தாண்டு வருகிறது !

கண்ணனின் சீனியர் அலுவலகம் மதுரை கீழ மாரட் வீதியில் அமைந்துள்ளது. அலுவலகத்துடன் கூடிய வீடு. பெரிய கட்டடம். வெளியில் எஸ்.கே.நாக லிங்கம், வழக்கறிஞர்., என்று தடித்த எழுத்துகளில் எழுதப்பட்ட பெயர் பலகை. முன்னால் கட்சிகாரர்கள் அமர்வதற்கான அறை. அருகிலேயே ஜூனியர் வழக்குரைஞர்கள், குமாஸ்தா அமரும் அறை. உள்ளே சீனியர் நாகலிங்கத்தின் தனியறை. நீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கண்ணின் சீனியர் ஓய்வாக அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் ஆபிஸ் பாய் தவிர வேறு யாரும் இல்லை.  கண்ணனையும் குழந்தைகளையும் பார்த்தவுடன் அவர் உற்சாகமானார்.

"வா. கண்ணா.." என்று அன்பாக வரவேற்றார். குழந்தைகளை பார்த்தவுடன் "ஹாய்... குட்டீஸ்.." என்று அரவணைத்துக் கொண்டார். இரண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டனர். அவர் சத்தியாவை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு, ரோஹிணியிடம், "நான் உங்களுக்கு தாத்தா மாதிரி.. உங்க தாத்தா வேதாச்சலதோட குட் ஓல்ட் பிரண்ட்.." என்று அவர் தன்னை ஒரு மிகப் பெரிய வக்கீல் என்பதை மறந்து சிறு குழந்தையாக பிரியமாக அவர்களிடம் பேசினார்.

வாழ்வில் வள்ளல், வறியவர்களுக்கு  இலவசமாக சட்ட உதவி, தொழிலில் சிங்கம்,  மனைவிக்கு தங்கம், நீதிமன்ற வட்டாரத்தில் அவரை எல்லோரும் அவரது பெயரின் முதல் மூன்று எழுத்துகள் S.K.N .என்பதைக் கூட்டி பிரபலமாக 'ஸ்கேன்' என்று அழைப்பார்கள். வழக்கு ஆவணங்களை பரிசீலிப்பதில், அவரது பார்வையும் ஒரு 'ஸ்கேன்' தான். குறைவில்லா வருமானத்துடன் ஆண்டவன் அவருக்கு நிறைய கொடுத்திருக்கிறார். 


ஆனால் என்ன சொல்லி, என்ன செய்ய? ஆண்டு அனுபவிக்க, பெயர் சொல்ல  அவருக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லை. அவரும், அவரது மனைவி கண்மணியும்  வேண்டாத தெய்வங்கள் இல்லை. போகாத கோவில்கள் இல்லை. செய்யாத தான தருமங்கள் இல்லை. ஆண்டுகள் போனதே தவிர, ஆண்டவன் கண் திறந்து பார்க்கவில்லை. முதலில் மிக்க மன வருத்தமடைந்த அவர், பின் அதை பற்றி நினைக்கவில்லை. அவர் 'டேக் இட் இசி' பாலிசியை பின்பற்றுபவர். கேட்டால், "இப்படி சில சமயங்களில் நடந்து விடுவதுண்டு.... நான் வேற ஒரு காரியத்துக்காக, என்னோட தொழிலுக்காக படைக்கப்பட்டிருக்கேன் என்று எனக்கு கடவுள் உணர்த்தியிருக்கார். அதுக்காக எனக்கு குழந்தைகள் பொறுப்பை ஆண்டவன் தரவில்லை" என்று சிரித்துக் கொண்டே சொல்வார்.  வயது 60  ஆகிறது. அவரது மனைவி கண்மணியை இன்றும் 'செல்லம்.. கண்ணு..' என்று தான் எல்லோர் முன்பும் அழைப்பர். இருவரும் ஒருவருக்கொருவர் குழந்தையாகி விட்டனர். வாரம் தவறாமல் கோவில் அல்லது உணவகம் என்று வெளியே கிளம்பி விடுவர். ஆண்டு தவறாமல் கோடை விடுமுறையில் வெளிநாட்டு சுற்றுலா. கிட்டத்தட்ட உலக நாடுகளில் பாதிக்கும் அதிகமானதை பார்த்து விட்டனர், இத்தம்பதிகள்.  எல்லா உறவினர்களிடமும் பாசமாக பழகுவதால், இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் வருகை அதிகம் இருக்கும்.

இப்படிப்பட்ட அவர் கண்ணனின் குழந்தைகளை பார்த்தவுடன் குதூகலமானதில் வியப்பில்லை. உடனே அருகில் உள்ள அரசன் ஸ்வீட் கடையில் இருந்து ஸ்வீட், பப்ஸ் வாங்கி வரச் சொல்லி ஆபிஸ் பையனை அனுப்பினார்.

ஸ்வீட், பப்ஸ் வந்தது. எல்லோரும் சாப்பிட்டனர். அப்போது... "சொல்லு கண்ணா.. எப்படி இருக்கே..? அம்மா எப்படி இருக்காங்க.? மக கொடைக்கானல் ஸ்கூல்லே எப்படி படிக்கிறா? ஹொவ் இஸ் கோயிங் லைப் ?" என்று சில கேள்விகளை கேட்டார். "எல்லாம் ஓரளவு சரி பண்ணிக்கிட்டு இருக்கேன்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. ஆனா என்னதான் நான் எனக்குநானே சமாதானம் பண்ணிக்கிட்டாலும் அவளை என்னலே மறக்க முடியலை.." என்று கண்ணன் சற்று சுருதி குறைந்த குரலில் சொன்னார்.

"கண்ணா.. போனதை நினைச்சு வருத்தப்பட்டா உன் மனசு, உடம்பு ரெண்டும் கெட்டுப் போகும்.. ஆக வேண்டிய வேலையைப் பாரு.. நிறைய கேஸ் வருது.. எல்லாம் எடுத்து நடத்து..கட்டி முடிச்ச வீட்டை கிரஹப் பிரவேசம் பண்ணு.. அதுக்கு முன்னாடி பவித்ராவோட வருஷ திதி வருதுன்னு நினைக்கிறன்.. அதை முடி.. உனக்கு நிறைய வேலை இருக்கு கண்ணா.. அப்புறம் .... ...  " என்று சீனியர் நாகலிங்கம் பேசிக் கொண்டே இருக்கும் போது அவரது மனைவி கண்மணி, கண்ணனும் குழந்தைகளும் வந்திருப்பதை அறிந்து பில்டர் காபி போட்டு எடுத்து வந்திருந்தார்.

"வா கண்ணா.. எப்படி இருக்கேப்ப...? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே.. நீ தனியா ஆபிஸ் போட்டப்புறம் இவருக்கு பர்டன் ஜாஸ்தியாயாய்டிச்சு.. இப்போ ரொம்ப செலக்ட் பண்ணி கேஸ் எடுக்கிறாரு. இப்போ இருக்கிற ஜுனியருங்க உன்னளவு வேகம் இல்லே..! எப்படியோ சமாளிக்கிறோம்.. சரி அதே விடுப்பா.." என்றவாறு ரோஹிணியை வாரியணைத்து செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தார். அப்படியே சத்தியதேவுக்கும்.

"பவித்ரா போனதுக்கப்புறம் நீ ரொம்ப இளைச்சு போயிட்டே.. உன் முகத்திலே பழைய சந்தோசம் இல்லே.. குழந்தைகளை பாத்தா பாவமா இருக்கு.. உங்கம்மா வேற பாவம்.." என்று கண்ணனை பார்த்து பேசிக் கொண்டே வந்த கண்மணி, அப்படியே தனது பார்வையை தனது கணவர் நாகலிங்கம் பக்கம் திருப்பி, "இவர் கூட பவித்ராவோட வருஷ திதி முடிஞ்ச பிறகு உன்கிட்டே ஒரு மேட்டர் பேசனும்ன்னு சொன்னாரு.. இல்லே செல்லம்..!" என்று அவரது ஆமோதிப்பை எதிர்பார்க்கும் வண்ணம் சொன்னார். அதற்கு அவர் காபி குடித்துக் கொண்டே தலையை  ஆட்டினார்.

"அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டார்.  சீனியரின் மனைவி கண்மணியை கண்ணன் 'அக்கா' என்று அழைப்பது வழக்கம்.

"முதெல்ல, எல்லாம் ஒன் பை ஒன்னா முடிப்போம்.. அதுக்கப்புறம் பேசிக்கலாம்..." என்று கண்மணி கூறினார். பிறகு அவர்களிடம் சொல்லிவிட்டு கண்ணன் தனது குழந்தைகளுடன் விடை பெற்றார். சத்யாவை சீனியர் நாகலிங்கம் தனது தோளில் போட்டுக் கொண்டு வந்து வாசல் வரை வந்தார். அவனும் நன்கு அவரிடம் ஒட்டிக் கொண்டான்.  பின் அவனை கண்ணனிடம் கொடுத்து விட்டு வழியனுப்பி வைத்தார். அதே நேரத்தில் "அதென்னக்கா மேட்டர்.. ?" என்று கண்ணன் கேட்டாரே தவிர பிறகு அதைப் பற்றி அவர் அந்த வாசல் படியிலேயே மறந்து போனார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிவுக்கு வரவுள்ளது. புத்தாண்டும் பிறக்க உள்ளது.  பவித்ரா இறந்து போனதால் கண்ணன் குடும்பத்தினர் எந்தப் பண்டிகையையும்  கொண்டாட வில்லை. எனினும், குழந்தைகள் என்ன செய்தது பாவம்? அவர்களை மகிழ்விக்க புத்தாண்டுக்கு முன்தினம் கண்ணன் அழகாக செய்யப் பட்ட ஒரு புத்தாண்டு கேக் வாங்கி வந்தார். அதை புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வெட்டலாம் என்று ரோஹிணியிடம் சொன்னார்.

அழகான அந்த கேக்கை பார்த்தமாத்திரத்தில் ரோஹினிக்கும், சத்தியதேவுக்கும் பிடித்து போயிற்று. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி. 'இப்போதே வெட்டிவிடலாம்' என்று சத்தியா குறும்பாக சைகை காட்டினான். அதற்கு, 'உன் மூக்கை அறுத்து விடுவேன்' என்று கேக் வெட்டும் பிளாஸ்டிக் கத்தியை ரோஹினி காட்டினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்கத தொடங்கி பின் கண்ணனை சுற்றி வந்தனர். கண்ணனும் விளையாட்டு காட்டினார். இப்படி கண்ணன், தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு வரலக்ஷ்மியும் மகிழ்ந்தார்.


அப்போது தொலைபேசி மணி ஒலித்தது.. கண்ணன் எடுத்தார்... "அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.. வக்கீல் சார்.." என்று ஒரு இளம் பெண்ணின் குரல் ஒலித்தது. கண்ணனும் சற்று குழம்பியவாறு, "Same to you.." என்று கூறி விட்டு தொடர்ந்து, "May I know with whom I am talking now?" என்று கேட்டார். ஆனால் இதை நன்கு கேட்டு விட்டு, மறுமுனை பொறுமையாக துண்டிக்கப்பட்டு விட்டது. கண்ணன் இந்தக் குரலை இதற்கு முன் எங்கோ கேட்டதை போல் உணர்ந்தார். ஆனால் ஞாபகம் வரவில்லை. நீதிமன்றத்தில் யாராவது தெரிந்த பெண் வழக்குரைஞராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அப்படி இருந்தாலும், யார் பேசுகிறீர்கள் என்று கேட்ட பிறகும், பதில் சொல்லாமல் ஏன் அப்பெண் தொலைபேசியை வைத்தார் என்ற கேள்வி கண்ணனுக்கு எழுந்தது. பிறகு, 'யாரோ நமக்கு வாழ்த்து சொன்னார்கள்.. நாமும் பதில் வாழ்த்து சொல்லி விட்டோம்.. அவர் யாராக இருந்தால் நமெக்கென்ன?" என்று அதை பற்றி மறந்து விட்டு, புத்தாண்டை குழந்தைகளுடன் வரவேற்கத் தயாரானார் கண்ணன்.

நாமும்தானே !


(தொடரும்..)

Tuesday 27 December 2011

மதனப் பெண் 35 - மகிழ்ச்சி மெல்ல எட்டிப் பார்த்தது

வித்ரா மறைந்த பிறகு கண்ணனின் வீடு ஏற்கனவே களையிழந்து இருந்தது.   இப்போது ரோஹிணியை கொடைக்கானல் ஹாஸ்டல் பள்ளியில் சேர்த்த பிறகு, வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?

ஒரு குடும்பம், அதன் வளர்ச்சி, தொடர்ச்சி என்பது தினமும் முனைந்து பாடுபட்டு மிகுந்த முயற்சியால் கட்டிய கூடு. அது திடீரென கலைந்து விட்டால், மீண்டும் அதை உருவாக்கி வைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அப்போது எங்கிருந்து ஆரம்பிப்பது, எப்படி கொண்டு செல்வது, என்ன விளைவுகள் ஏற்படும், இன்னும் இது போன்ற பல்வேறு காரணிகளை சிந்திக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு கலைந்து போன வாழ்வை கண்ணன் தனக்கு தெரிந்தவரை சீர் செய்து கொள்ள எடுத்த முதல் முடிவு, ரோஹினியின் கல்வி வாழ்வு சிறக்க வேண்டும்; அதற்கு அவளை தற்போதுள்ள சூழலில் ஹாஸ்டல் பள்ளியில் சேர்ப்பது. பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு  கல்வி வாழ்க்கை கிடைத்தது.  அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.

மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை பெற்றோர்கள் வருகை தினம். கண்ணன் வெள்ளிக்கிழமை மதியமே மதுரையிலிருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்று விடுவார். இவ்வாறு மாதத்தில் இருமுறை சென்று வருவதால் கொடைக்கானலில் நாயுடுபுரத்தில் உள்ள விடுதி ஒன்றை, தான் வழக்கமாக தங்கும் இடமாக்கிக் கொண்டார், கண்ணன். அவரது வருகை அறிந்து அவருக்காக அறை காத்திருக்கும். அவ்வப்போது வரலஷ்மி, சத்தியதேவ் ஆகியோரை அழைத்து வரவும் கண்ணன் தவறுவதில்லை.

வெள்ளிக்கிழமை இரவு கொடைக்கானல் வந்தடையும் கண்ணன்,  விடுதியில் தங்கி மறுநாள் சனிக்கிழமை காலை பள்ளிக்கு சென்று ரோஹிணியை பார்ப்பார். அச்சமயத்தில் மற்றெல்லா பெற்றோர்களும் வந்திருப்பர். பள்ளி வளாகத்தில் எங்கு நோக்கிலும் பிள்ளைகளின்  ஆரவாரத்துடன் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அவர்களுடன் பெற்றோர்களும் சிறுபிள்ளைகள் ஆகி விடுவர்.

தனது தந்தையின் வருகைக்காக ரோஹினி நன்றாக உடுத்திக் கொண்டு, ஒரு குட்டி தேவதையாக கையில் ஒரு ரோஜாப் பூவுடன் காத்திருப்பாள். கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். பிறகு அவளை அனுமதியுடன் வெளியில் அழைத்துச் சென்று, பல இடங்களை சுற்றிக் கட்டுவார்.  போட்டிங், ரெஸ்டாரென்ட், பூங்கா, விளையாட்டு என ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாக போகும். குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது. படிப்பில் சுட்டியான ரோஹிணி தனது பாடங்கள், சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரைப் பற்றி கண்ணனிடம் நிறைய சளைக்காமல் பேசுவாள். புல்வெளியில் அமர்ந்துகொண்டு அவற்றையெல்லாம் ரசித்து கண்ணன் கேட்டுக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டு தினங்கள் போவதே தெரியாது. ஞாயிற்றுக் கிழமை பிரியும் போது மட்டும் ரோஹினியின் முகம் வாட்டமடையும். கொஞ்சம் ஹோம் மேட் சாக்லேட்ஸ். சில முத்தங்கள்.  மீண்டும் வருவதாக சமாதானம். பிறகு விடை பெறல். இது வழக்கமான நிகழ்வானது.

மதுரையில் மகன் சத்தியதேவ் யு.கே.ஜி. படித்து வந்தான். பள்ளிக்கு 'ஸ்கூல் வேனில்' சென்று திரும்பி வந்தான். அவனுடன் வொர்க்ஷீட், டிராயிங், கிளே வொர்க், ஹோம் வொர்க் என வரலக்ஷ்மியும் பொழுது போக்கினார்.  பவித்ராவின் இறப்பிற்கு பிறகு, தற்போது  எல்லாம் ஓரளவு 'செட் ரைட்' ஆனதாக கண்ணன் நம்பினார்; தனது தொழில், மதுரை-கொடைக்கானல் டிரிப், குழந்தைகள் என பிசியானார்.

ரோஹிணிக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் விடுமறை விடப்பட்டது. பள்ளியில் அதன் தாளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துகளை கூறிவிட்டு, அவளை கண்ணன் மதுரைக்கு அழைத்து வந்தார். கண்ணனுக்கும் நீதிமன்றம் விடுமுறை. எனவே கண்ணன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்தார்.

மாலை நேரங்களில் குழந்தைகளை தனது பைக்கில் வைத்துக் கொண்டு ஊர் சுற்றினார். சித்தப்பா, சிறிய மாமா என உறவினர்கள் வீட்டுக்கு சென்றார்; அளவளாவினார். பேச்சின் ஊடே பவித்ராவை நினைவு கூர்ந்து அவளது பேச்சை எடுக்காமல், குழந்தைகள், அவர்களது எதிர்காலம் பற்றி கண்ணன் தொடர்ந்து உரையாடியதைக் கேட்டு எல்லோரும் சற்று நிம்மதி; அமைதி !


கண்ணனின் குடும்பத்தில் மெல்ல மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. 

தான் தனியாக சட்டத் தொழிலில் நன்கு காலூன்றி விட்டாலும், தனது தொழில் வளர்ச்சிக்கு காரணமாக, அடித்தளமாக இருந்த மூத்த வழக்குரைஞரை கண்ணன் அவ்வப்போது சென்று சந்திக்கத் தவறுவதில்லை. கண்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது சீனியருக்கு மிகவும் கட்டுப்பட்டவர். அவரது எந்த பேச்சையும் தட்டமாட்டார்.  அவர் கண்ணனுக்கு ஏற்பட்ட சோதனைகளின் போது நிறைய ஆறுதல் வார்த்தைகள் கூறி, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை நன்கு உணர்த்தியவர். பிள்ளைகளுக்காக வாழ வேண்டிய சூழலை சுட்டிக் காட்டியவர். மனதிற்கு வலு சேர்த்தவர்.

கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு  ஓர்  சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர்.  மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'.

இந்த முறை தனது இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சீனியரை சென்று பார்த்தார் கண்ணன்.

இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! 

(தொடரும்...)

Sunday 25 December 2011

மதனப் பெண் 34 - மாப்பிள்ளையின் முடிவு

மாமா சுந்தரத்தின் ஆலோசனையை கண்ணன் கூர்ந்து கேட்டார். அதற்கு பதில் தர ஆரம்பிக்கு முன் கண்ணன் ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.

"மாமா... நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. நீங்க ஒரு பிரக்டிகல் மேன். ஆனா ... இன்னும் கொஞ்சம் பிரக்டிகலா தின்க் பண்ணி பாக்கணும். முதல்லே இங்கே விட்டுட்டு அம்மா அங்கே வந்து இருக்கணும்... இங்கே எப்படி அம்மாவுக்கு வயசாகுதோ, அப்படியே உங்களுக்கும், மாமிக்கும். சொல்லப்போன நீங்க என்  அம்மாவோட அண்ணன்.. வயசு அதிகம்.. நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும். தவிர அம்மாவும் குழந்தைகளும் அங்கே வந்திட்டா நான் இங்கே தனியாள இருக்கணும். ஓட்டல் சாப்பாடு..! வீடு வேற பெருசா கட்டிட்டேன்.. மதுரை டூ கோவை தூரம் அதிகம்" என்று தனது தரப்பை மெல்ல நியாயப்படுத்தி கண்ணன் பேசி வந்தார்.

"மாமா.. இன்னொரு விசயத்தையும் நீங்க கவனிக்கணும்.. குழந்தைகளை நீங்க கொண்டு போய் வளத்தினா, பின்னிட்டு அவங்க என்னை ஒரு நல்ல கார்னர்லே வச்சிருக்கிறது சந்தேகம்.. குழந்தைங்க உங்க பராமரிப்புலே வளருது என்கிற நினைப்புலே நான் என் வோர்கிலே பிசிய இருந்துடுவேன்.. ஏதோ ஒரு டிடாச்மென்ட் ஏற்பட சான்ஸ் இருக்கு.. ரோஹினி ஹாஸ்டல்லே படிச்சா நான் கண்டிப்பா போய் பாத்துட்டு வருவேன்.. என் குழந்தைங்க மேலே எனக்கு பெர்சனல் ரெஸ்பான்சிபிளிட்டி அதிகம் இருக்கணும்..  நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. குழந்தைகளுக்கும் எனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கணும்.. அவங்க மம்மி இறந்த பிறகு அவங்களை டாடிதான் வளக்கிறார் என்ற உணர்வு அவங்களுக்கு இந்த வயசிலிருந்தே ஏற்படணும்.." என்று தனது மன உணர்வுகளை கோவையாக சொன்னார் கண்ணன்.

"அதனாலே மாமா.. நான் எடுத்திருக்கிற டிசிசன் வொர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எனக்கு இப்போ வேண்டியதெல்லாம் உங்க ஆசீர்வாதம் ஒன்னு மட்டும்தான்.." என்று கண்ணன் முடித்தார்.

சுந்தரத்திற்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அத்துடன் முன்னதாக தான் சொல்ல வந்த விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம், அதற்கு இது தருணமல்ல  என்று முடிவு செய்து விட்டார். "சரி மாப்பிள்ளே.. நீங்க நினைச்ச மாதிரி செய்யுங்க.. நீங்களே குழந்தைகளே கவனிச்சாத்தான் அதுக பின்னிட்டு உங்க மேலே பாசமா இருக்கும்ன்னு சொல்லறீங்க.. அதுக்கு நாங்க தடையா நிக்க விரும்பலை.. குழந்தைகளையும் , அம்மாவையும் பாத்துகோங்க... நாங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்." என்று சொல்லிவிட்டு அடுத்தநாள் சர்மிளாவுடன் கோவை புறப்பட்டு சென்று விட்டார், சுந்தரம்.

வரலக்ஷ்மி மெல்ல உடல் நலம் தேறி வந்தார். பேரன், பேத்தி இருவரும் வரலக்ஷ்மியிடம் சமத்தாக இருந்தனர். வீட்டு வேலைகளை செய்ய வேலைக்காரி ஒருவரை அதிக சம்பளத்தில் வரலக்ஷ்மி நியமனம் செய்தார். அவர் தன்னை இயல்பான நிலைக்கு தாயார்படுத்தி கொண்டார். தினமும் சாப்பிட வேண்டிய இதய நோய் மாத்திரைகளை தொடர்ச்சியாக சாப்பிட பழகிக் கொண்டார். சில சிறிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு கற்றுக் கொண்டார். டென்சனை தவிர்த்தார். சமைக்கும் நேரம் போக குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தார். எனினும் இப்படி நிறைய நேரம் அவரால் உற்சாகமாக இருக்க இயலவில்லை. சோர்வு ஏற்பட்டது. இப்படியாக சுமார் 10 நாட்கள் சென்று விட்டன.


கோடை விடுமுறை முடிவடையும் நேரம். கண்ணன் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுபடி ரோஹிணியை கொடைக்கானல் பள்ளியில் சேர்க்க தயாரானார். வரலக்ஷ்மி, சுந்தரம், சர்மிளா உட்பட அனைவரும் கொடைக்கானல் சென்று ரோஹிணியை பள்ளியில் விட்டனர். ஹாஸ்டல் வார்டன், பள்ளியின் சிஸ்டர் ஆகியோரிடம் ரோஹினி 'தாயில்லாக் குழந்தை' என்ற விவரத்தைக் கூறி கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தனர். 

ரோஹிணிக்கு தனது தந்தை கண்ணனை விட்டு பிரிய மனமில்லை. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.  கண்ணனுக்கும், மற்றவர்களுக்கும்  அழுகை வந்து விட்டது. பிறகு ஒரு வழியாக ரோஹினியின் புது தோழிகள் வந்து சமாதனம் செய்தனர்.  "ரோஹினி அழதேம்மா... டாடி இங்கேதான் இருக்கப் போறேன்... உன்னை அடிக்கடி வந்து பாத்திட்டு போவேன்.. உன்னை சண்டேஸ்லே நிறைய இடத்துக்கு கூட்டிட்டு போவேன்.. நிறைய சாக்லேட்ஸ் வாங்கித் தருவேன்.. உங்களுக்கு இங்கே நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க.. தம்பியும் அடுத்த வருஷம் இங்கேயே படிக்க வந்திடுவான்.  நீங்க நல்ல படிக்கணும்...  சரியா..? அழக்கூடாது... நீங்க அழுதா டாடி அழுவேன்.. கண்ணை துடைச்சிகோங்க..." என்று பலவாறு சமாதானம் கூறி கண்ணன் மெல்ல ரோஹிணியிடமிருந்து விடை பெற்றார்.

கண்ணனின் மனதில் பவித்ரா ஒரு புன்சிரிப்புடன் மின்னலாக தோன்றி மறைந்தாள். 

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...