இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Sunday, 3 February 2013

மதனப் பெண் 38 - ஒரு சித்தியால் தாய்க்குரிய அன்புடன் நடந்து கொள்ள முடியுமா?

பொங்கல் விடுமுறைக்காக கண்ணன் கொடைக்கானல் சென்று தனது மகள் ரோஹிணியை அழைத்து வந்தார். பவித்ரா இறந்த காரணத்தால் வீட்டில் பொங்கல் வைக்கவில்லை. எனினும் கண்ணனின் தாயார் வரலக்ஷ்மி தனது பேரக் குழந்தைகளுக்காக சிறிது  சக்கரை பொங்கல் செய்தார்.

பவித்ராவின் வருஷ திதி 21-ஆம் தேதி வந்தது. புரோஹிதம் செய்யும் ஐயரை அழைத்து வந்து பவித்ராவிற்கு ஆத்மார்த்தமாக திதி கொடுத்தார். விபத்தில்  அகால மரணம் என்பதால் வைதீக காரியங்கள் எளிய முறையில் செய்யப்பட்டன. கண்ணனின் சித்தப்பாமார்கள், மாமன்மார்கள், நண்பர்கள் என நெருங்கியவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

பவித்ராவின் நிழற்படத்திற்கு மாலை அணிவிக்கும் போது, கண்ணன் மனதளவில் உடைந்து போனார். அதை அவர் கண்களில் பொங்கி வெளி விழத்  தயாராக நின்று கொண்டிருந்த நீர்த் துளிகள் அனைவருக்கும் காட்டியது. ரோஹினி மௌனமாக நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு விவரம் புரிந்து விட்டது. ஆனால்... பாவம்...  சத்யதேவிற்கு எதுவும் புரியவில்லை. தனது தாத்தாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

பவித்ரா கண்ணனை தனிமையில் தவிக்க விட்டுச் சென்று ஓராண்டு காலம் ஓய்ந்து போனது. ஆனால் கண்ணனின் மனதில் அன்பு மனைவி பவித்ராவின் நினைவுகள் ஏதும் சற்றும் ஓயவில்லை.

நீதிமன்றத்திற்கு செல்லும் முன் கோட், கவுனை  நன்கு துடைத்து பவித்ரா எடுத்துக் கொடுப்பாள். கார் வரை வந்து வழியனுப்பி வைப்பாள். நீதிமன்றத்தில் இருந்து திரும்பி வந்தவுடன் அன்றலர்ந்த செந்தாமரையாக பவித்ரா நன்கு முகம் கழுவி, நேர்த்தியாக உடை உடுத்தி, கொஞ்சம் பூ என்றாலும் நன்கு மணம் வீசும் மதுரை மல்லிகை வைத்துக் கொண்டு   பளிச்சென வந்து வரவேற்பாள். தொடர்ந்து ஒரு கையில் சொம்பு  நீரும், மற்றொரு கையில் சூடான டிகிரி காபியும் கொண்டு வந்து கொடுப்பாள். இவை யாவும் கண்ணனின் மனதில் திரும்ப திரும்ப வந்து, அலையாக அடித்துக் கொண்டிருந்தன. கட்டிய  மனைவிக்காக ஆசையாக கட்டிய வீடு கண்ணனைப் பொறுத்தவரை ஒரு சுழியமாக தெரிந்தது. 

கண்ணன் என்னதான் மெத்தப் படித்தவர் என்றாலும், பவித்ரா இல்லாத ஒரு வாழ்வை சட்டென ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதே நேரத்தில் பவித்ராவின் இடத்தில் பவித்ரா போல தனக்கு ஒரு அம்மா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மகள் ரோஹிணி சொன்ன வார்த்தைகள் கண்ணனை சிறிது பாதிக்கவே செய்திருந்தது. 


பவித்ராவின் இடத்தில் இன்னொரு பெண்ணை கண்ணனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் பவித்ரா போல் தனக்கு இன்னொரு அம்மா வேண்டும் என்று குழந்தை ரோஹிணி  முன் வைத்த கோரிக்கையை கண்ணனால்  அவ்வளவு எளிதாக நிராகரிக்கவும் முடியவில்லை. 

மனைவி இறந்தவர் மறுமணம்  கொள்வதில் தவறு ஒன்றுமில்லை. தனக்காக செய்து கொள்ளாவிட்டாலும், தன் குழந்தைகளுக்காக செய்து கொள்வதிலும் தவறில்லை. ஆனால் பவித்ரவே கண்ணனின் நாடி, நரம்புகளில் எல்லாம் முழுக்க வியாபித்து இருக்கும் போது, எப்படி இந்தப் பிரச்சனையை சமரசம் செய்து கொள்ள முடியும்? 


கட்டிக் கொண்ட மறு தாரத்துடன் குடும்பம் நடத்துவதா..? 
இல்லை... குழந்தைகளுக்காக கட்டிக் கொண்டவள் என்று நடத்துவதா...? அப்படியானால் அது இன்னொரு பெண்ணின் கல்யாணக் கனவை சிதைப்பது போலாகுமே..! 
வந்தவள் குழந்தைகளை கவனித்துக் கொள்வாளா? 
இல்லை... சித்தி கொடுமைகள் செய்து நோகடிப்பாளா?
பெற்ற குழந்தைகளாக நடத்துவது போன்று நாடகம் வேண்டுமானாலும் ஆடலாமே தவிர, உண்மையில் ஒரு சித்தியால் அவ்வாறு ஒரு தாய்க்குரிய அன்புடன் நடந்து கொள்ள முடியுமா? அதுவும் தனக்கென ஒரு குழந்தை பிறந்து விட்டால் இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டுமா?


இப்படி பல நெருடலான பிரச்சனைகளை மனதில் கொண்டு ரோஹிணியை பள்ளிக்கு கொண்டு சென்று விட கண்ணன் காரில் கொடைக்கானல் சென்று கொண்டிருந்தார்.

(இது உள்ளபடி ஒரு நெருடலான பிரச்சனைதான். இதற்கு கண்ணன் விரைவில் ஒரு முடிவு செய்தார்.... அது என்ன என்று ஊகிக்க முடிகிறதா...?)

(மீண்டும் தொடர்வோம்)

12 comments:

சேக்கனா M. நிஜாம் said...

சிந்தனையை தூண்டி மனதை வருடுகின்றன...

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

ரமேஷ் வெங்கடபதி said...

முக்கியமான திருப்பத்தில் சென்றுகொண்டிருக்கும் கதை..ஆவலைத் தூண்டியுள்ளது..தொடரட்டும்..வாழ்த்துக்கள்!

Advocate P.R.Jayarajan said...

@ ரமேஷ் வெங்கடபதி said...
//முக்கியமான திருப்பத்தில் சென்றுகொண்டிருக்கும் கதை..ஆவலைத் தூண்டியுள்ளது.. தொடரட்டும்..வாழ்த்துக்கள்!//

நன்றி சார்...

Advocate P.R.Jayarajan said...

@ சேக்கனா M. நிஜாம் said...
//சிந்தனையை தூண்டி மனதை வருடுகின்றன...
அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...//

நிச்சயம் தருகின்றேன்.. தங்கள் வருகைக்கு நன்றி..

இராஜராஜேஸ்வரி said...

பவித்ரா கண்ணனை தனிமையில் தவிக்க விட்டுச் சென்று ஓராண்டு காலம் ஓய்ந்து போனது. ஆனால் கண்ணனின் மனதில் அன்பு மனைவி பவித்ராவின் நினைவுகள் ஏதும் சற்றும் ஓயவில்லை.


கதையும் ஓராண்டு கழித்து தொடர்ந்திருப்பது விசித்திரமான பொருத்தம் ....

பதிவும் ம்னதைவிட்டு ஓயாமல் அடிக்கடி வந்து பார்க்கவைத்தது ...

இராஜராஜேஸ்வரி said...

கண்ணன் என்னதான் மெத்தப் படித்தவர் என்றாலும், பவித்ரா இல்லாத ஒரு வாழ்வை சட்டென ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.

உயிரோடு அந்நியோன்யமாக கலந்த உறவாயிற்றே..!

கண்முன்னால் நடத்த விபத்தில் பிரிந்த துயரம் ஆறாத புண்ணாக வாழ்நாள் முழுவதும் வருத்திக்
கொண்டுதானே இருக்கும் ..!

இராஜராஜேஸ்வரி said...

இது உள்ளபடி ஒரு நெருடலான பிரச்சனைதான். இதற்கு கண்ணன் விரைவில் ஒரு முடிவு செய்தார்.... /

பெண் குழந்தை ஏக்கத்தை தீர்க்கும் முடிவாக வரவேற்போம் ..!

இராஜராஜேஸ்வரி said...

பவித்ராவின் இடத்தில் பவித்ரா போல தனக்கு ஒரு அம்மா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மகள் ரோஹிணி சொன்ன வார்த்தைகள் கண்ணனை சிறிது பாதிக்கவே செய்திருந்தது..//

விரைவில் நல்லது நடந்து வாழ்வில் மீண்டும்
வசந்தம் மலரட்டும் ...

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...
//பவித்ரா கண்ணனை தனிமையில் தவிக்க விட்டுச் சென்று ஓராண்டு காலம் ஓய்ந்து போனது. ஆனால் கண்ணனின் மனதில் அன்பு மனைவி பவித்ராவின் நினைவுகள் ஏதும் சற்றும் ஓயவில்லை.//

//கதையும் ஓராண்டு கழித்து தொடர்ந்திருப்பது விசித்திரமான பொருத்தம் ....//

இது ஒரு உண்மைக் கதையம்மா... உணர்வுபூர்வமான உண்மைகதை... !

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...
//பெண் குழந்தை ஏக்கத்தை தீர்க்கும் முடிவாக வரவேற்போம் ..!//

நிச்சயம் !

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி said...

//விரைவில் நல்லது நடந்து வாழ்வில் மீண்டும்
வசந்தம் மலரட்டும் ...//

அதற்குதானே இத்தனை போராட்டங்களும் !

Advocate P.R.Jayarajan said...

@இராஜராஜேஸ்வரி said...

//கண்முன்னால் நடத்த விபத்தில் பிரிந்த துயரம் ஆறாத புண்ணாக வாழ்நாள் முழுவதும் வருத்திக்
கொண்டுதானே இருக்கும் ..! //

ஆறவே ஆறாது...
கதை படித்து கருத்துரைத்த உங்களுக்கு நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...