இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday, 15 October 2011

மதனப் பெண் 8 - "ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும் !"

ஏற்கனவே அறிமுகம் இல்லாத இருவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள காலம் பிடிக்கும். ஆனால் கண்ணன், பவித்ராவிற்கு அத்தை மகன். பவித்ரா, கண்ணனுக்கு மாமன் மகள். சிறு வயதிலேயே இருவரும் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடி கணவன், மனைவியாகவே வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். இப்போது நிஜத்திலும் கணவன் மனைவி ஆகி விட்டனர். நினைத்தது கிடைக்கும் போது மகிழ்ச்சிக்கு பஞ்சமா என்ன?

அப்படி எல்லையில்லா மகிழ்ச்சி கண்ணனுக்கும், பவித்ராவிற்க்கும். இனிமையாக நாட்கள் சென்றன.

கண்ணன் மதுரையில் ஒரு மூத்த வழக்குரைஞரிடம் ஜூனியர் வக்கீலாக சேர்ந்து மெல்ல சட்டத் தொழிலில் கால் உன்ற ஆரம்பித்தார். கீழ மாரட் தெருவில் மூத்த வழக்குரைஞரின் அலுவலகம். காலை 7  மணிக்கு கண்ணன் சென்று விடுவார். அவரது சீனியர் டிக்டேசன் கொடுக்க தயாராக இருப்பார். கண்ணன் டிக்டேசன் எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் விசாரணைக்கு வரும் கட்டுகளை எடுத்து அதில் என்ன பேசுவது என்பது குறித்து சீனியரிடம் குறிப்புகளை வாங்கிக் கொள்வர். தொடர்ந்து தட்டச்சு செய்பவர் வருவார். குமாஸ்தா வருவார். நீதிமன்றத்திற்கு செல்ல எல்லாவற்றையும் தாயார் செய்து கொண்டு அனைவரும் கிளம்புவர். சீனியர் அலுவலத்திலே இருப்பார். தேவைப்பட்டால் அவருக்கு தொலைபேசி செய்து அழைப்பது வழக்கம். கண்ணன், சீனியர் அலுவலத்திலிருந்து கிளம்பி கீழ வெளி வீதியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து பவித்ரா சூடாக செய்து வைத்திருக்கும் டிபன் சாப்பிட்டு விட்டு நீதிமன்றத்திற்கு கிளம்பி விடுவார். 

பவித்ரா உணவு பரிமாறும் அழகே தனி..

"மாமா... இன்னும் ரெண்டு இட்லி வைச்சுகோங்க... நல்ல சாப்பிட்டதன் நல்ல பேச முடியும்... ஒரு வக்கீலுக்கு ஸ்டெமினா முக்கியம்.. மதியம் தக்காளி சாதம் பேக் பண்ணி கொடுத்திருக்கேன்.  நேரத்துக்கு சாப்பிடுங்கோ ... உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்கோ... நான் செய்ஞ்சு தர்ரேன்.." என்று கொஞ்சும் மொழியில் கொஞ்சிக் கொண்டே சொல்வாள். அவள் கொஞ்சக் கொஞ்சிப் பேச கண்ணனுக்கு சில சமயம் நீதிமன்றத்திற்கு செல்லலாமா, வேண்டாமா என்று கூடத் தோன்றி விடும். 'கொஞ்சம் அரட்டை... கொஞ்சம் சேட்டையாக' டிபன் சாப்பிடும் படலம் முடியும். 

எனினும் கடமை முக்கியம் என்பதால், "பவித்ரா.. எல்லாம் சாயந்தரம் வந்து பேசிக்கலாம். ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு கோர்ட்லேயிருந்து வந்த பிறகு சொல்றேன்.." என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு அதே நேரத்தில் கண்களில் ஒரு குறுகுறுப்பை காட்டிவிட்டு கண்ணன் கிளம்புவார். "ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும்.. அதை நீங்க சொல்ல வேண்டியதில்லை..." என்று சிரித்துக் கொண்டே  பவித்ரா பூடகமாக சொல்வாள். "சாப்பிட என்ன பண்றது" என்பதற்கும், இப்போது இருவரும் பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இருவரும் நன்கு அறிவர்.

பவித்ரா வந்த பிறகு கண்ணனின் தாய் வரலஷ்மிக்கு நிறைய நிம்மதி. தங்கச்  சிலை போல் மருமகள். சொந்த அண்ணன் மகள். "அத்தே.. அத்தே.." என்று தன்னை சுற்றி வந்தவள் இப்போது தனது மகனை சுற்றி வருகிறாள். மகனை தாங்குதாங்கு-என தாங்குகிறாள்.  மகன் சந்தோசமாக உள்ளான். பிள்ளைகள் இரண்டும்  இப்படி மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு லக்ஷ்மி அடுத்த கட்டத்திற்கு சென்று பேரப் பிள்ளைகள் பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டார். 

கண்ணனின் தொழில் வாழ்கை சூடு பிடிக்கத் தொடங்கியது. அதே நேரம் கண்ணன்-பவித்ரா வாழ்கை மிகமிக அன்யோன்ய தம்பதிகளாக, மகிழ்ச்சியாக  சென்று கொண்டிருந்தது. 

பவித்ரா கர்ப்பிணி ஆனாள்.. 

(தொடரும்)


Thursday, 13 October 2011

மதனப் பெண் 7 - பவித்ரா ஒரு அழகு தேவதை !

"அம்மா.. பேப்பர்லே கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து யாரோ அப்புசாமின்னு ஒருத்தர் தன்னோட மகள் ஜாதகத்தை அனுப்பி இருக்கார்.. மெட்ராஸ்லே இருக்காங்கலாம்" என்றவாறு கண்ணன் சமையற்கட்டில் சாதம் வடித்துக் கொண்டிருந்த தன்னுடைய தாயை பார்க்கப் போனார். 

"பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கப்பா?" என்றாள் அம்மா வரலக்ஷ்மி.  

:"இருக்குன்னு எழுதியிருக்கு" என்றார் கண்ணன்.

"சரி என்கிட்டே கொடு ... நான் தவிட்டு சந்தையிலே இருக்கிற நம்ம கணபதி ஐயர் கிட்டே போய் பொருத்தம் பாத்துட்டு வர்றேன்"

"அம்மா.. எனக்கு இப்போ இந்தக் கல்யாணம் அவசியமா?" 

அம்மா சடக்கென புருவத்தை உயர்த்திப் பார்த்தாள். என்ன இருந்தாலும் பெத்த மனம் அல்லவா? அதுவும் ஒரே மகன். வேறு பிள்ளைகள் இல்லை. கையில் வேறு இரண்டு குழந்தைகள். கண்ணனுக்கு வயதோ 29. இப்படி பல கோணங்களில் கண்ணனின் அம்மா யோசித்தாள்.

"அம்மா.. கொஞ்சம் நினச்சு பாருங்க .. அவ இருந்த இடத்திலே என்னலே இன்னொருத்தியை நினைச்சு பார்க்க கூட முடியலே.. ஏதோ நீங்க சொன்னீங்களேன்னு நான் பேப்பர்லே விளம்பரம் கொடுத்தேனே தவிர.. எனக்கு இந்தக் கல்யாணத்திலே கொஞ்சம் கூட இஷ்டமில்லே.. நான் அப்படியே இருக்கேன்" என்றார் கண்ணன்.

"நீ இருந்தறலாம்.. மகராசி இந்தப் பிஞ்சு குழந்தைகளை பெத்துப் போட்டு போய் சேர்ந்துட்டா.. இதுக  என்ன பண்ணாங்க பாவம்.. ? இதுகளை நினைச்சாவது நீ கல்யாணம் பண்ணிதான் ஆகனம்.. எனக்கும் வயசாகிட்டு வருது.." என்றார் வரலக்ஷ்மி.


இப்படி இருவரும் பேசிக் கொண்டார்களே தவிர, இவர்கள் இருவரின்  நினைவுகள் அப்படியே ஒரு பிளாஷ்பேக்காக பின்னோக்கி நகர்ந்தன. 

கண்ணனின் அப்பா வேதாசலம் ஒரு சிறந்த மருத்துவர். ஊருக்கெல்லாம் இலவசமாகவோ, குறைந்த பீஸ் வாங்கிக் கொண்டோ மருத்துவம் பார்த்தார். தீர்க்க முடியாத நோய்களையெல்லாம் தீர்த்தார்.  ஆனால் தனக்கு தீராத நோய் வரப்போகிறது என்பதை அவர் அறியவில்லை. நல்ல பேர், புகழ், சம்பாத்தியம் என்று இருந்த அவருக்கு மூளையில் கேன்சர் நோய் வந்தது. அவர் படுத்திருக்கும் போது அவரை பார்க்க வந்த பழைய பேசண்ட் ஒருவர், "என்ன டாக்டர் சார்.. நான் ஒரு ஆல் ரௌண்டர்.. எனக்கு எல்லா பழக்கமும் உண்டு.. அப்பப்போ உங்ககிட்டே மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு இன்னிக்கு வரைக்கும் அதே ஆல் ரௌன்ட்லேதான் இருக்கேன். இப்போ எனக்கு வயசு 63  ஆகுது. இன்னிக்கு வரைக்கும் பெருசா ஒரு நோயும் கிடையாது. ஆனா உங்களுக்கு வயசு 41 தான் ஆகுது. எந்த மேற்படி பழக்கமும் இல்லே. ரொம்ப சுத்திபத்தி. உங்களுக்கு எப்படி கேன்சர் வந்திச்சுன்னு தெரியலையே ?" என்று தாடையை தடவியவாறு கேள்வி கேட்டுப் போனார்.  வேதாசலம் பதில் ஏதும் பேசாமல் கேட்டுக் கொண்டே இருந்தார். 

வேதாச்சலத்திற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மூளையில் அறுவை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் விதி யாரை விட்டது. அறுவை தேதிக்கு 10  தினங்கள் முன்னரே ஒரு நாள் இரவு வேதாச்சலத்திற்கு திடீரென கடுமையான வலிப்பு வந்து, கூடவே வாந்தி பேதி கண்டு, மயக்கம் அடைந்தார். பின் அதே மயக்கத்திலேயே நினைவு திரும்பாமல் இறந்து போனார். அப்போது கண்ணனுக்கு வயது 17. +2 முடித்த கையுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு சட்டம் படித்துக்கொண்டிருந்தார். 

நெற்றியில் வட்டக் குங்குமம். எப்போது பார்த்தாலும் மங்களமாக தெரியும் முகம். செவ்வாக் கிழமை தங்க வளையல். வெள்ளிக் கிழமை கல் பதித்த  வளையல். மற்ற நாட்களில் கொஞ்சம் கிரண்டான கண்ணாடி வளையல்.  வண்ணம் மிகுந்த பெரிய கம்பெனி புடவைகள். வாய்க்கு ருசியான சமையல்.  எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி. இப்படி வாழ்ந்தவர் வேதாச்சலத்தின் மனைவி. வேதாசலம் இறக்கும் போது அவருக்கு வயது 38. 

வேதாச்சலத்தின் அந்திமக் காரியம் நடக்கையில் தனது தாயின் தாலியை அறுத்து, வளையல்களை உடைத்து, குங்குமப் பொட்டை அழித்து, வளமாக வாழ வேண்டிய வயதில் தனது தாயை கைம்பெண்ணாக்கிய காட்சியும், கோலமும் கண்டு கண்ணன் துடித்துப் போனார். 

குடும்பத் தலைவன் இருக்கும் வரைதான் எல்லா மரியாதையும். அதுவும் சிறிய வயதில் ஒரு குடும்பத் தலைவர் திடீரென மரணமடைந்தால், அக்குடும்பத்திற்கு ஏற்படும் சிக்கல் நிறைய. அப்படிப்பட்ட சிக்கல்கள், பிரச்சனைகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு கண்ணனும், அவரது விதவைத் தாயும் வாழத் தொடங்கினர். வேதாசலம் கீழவெளி வீதியில் கட்டிக் கொடுத்த வீடு, கொஞ்சம் கையிருப்பு, இன்சூரன்ஸ் தொகை, பிறந்த வீட்டில் போட்ட நகைகள், பிறகு வேதாசலம் செய்து கொடுத்த நகைகள் ௦- இவைதான் கண்ணன் படித்து முடித்து சம்பாதிக்கும் வரை சமாளிக்க உள்ள சொத்துக்கள். 

நிலைமையை உணர்ந்து கண்ணன் நன்றாகப் படிக்க ஆரம்பித்தார். பகுதி நேர வேலைகள் செய்து கொஞ்சம் பணம் சேர்த்தார். அதில் சேலைகள் வாங்கிக் கொடுத்து தாயை சிரிக்கச் செய்தார். இருக்கும் வீடு இருவருக்கு அதிகம் என்ற காரணத்தால் அதில் ஒரு பகுதியை தடுத்து ஒரு சிறிய குடும்பத்திற்கு வாடைகைக்கு விட்டார். அந்த வாடகைப் பணம் கண்ணனின் கல்லூரி கட்டணத்தை செலுத்த உதவி செய்தது. இன்சூரன்ஸ் தொகையை அப்படியே வங்கியில் டெபாசிட் செய்ததால் மாதாமாதம் வட்டி வந்தது. அது குடும்பம் நடத்த போதுமானதாக இருந்தது. 

இப்படி 5 ஆண்டுகள் ஓடி விட்டன. கண்ணன் இறுதியாண்டு படிக்கும் போது கண்ணனின் திருமணப் பேச்சை அவரது தாய் மாமா எடுத்தார். அப்போது கண்ணனுக்கு வயது 22.   

"லக்ஷ்மி.. கண்ணன் இந்த மே மாசத்தோட வக்கீல் படிப்பை முடிக்கப் போறான். அப்புறம் ஒரு சீனியர்கிட்டே போய் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டு நல்ல சம்பதிக்கப்போறான். கண்ணன் புத்திசாலி. நல்ல வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீயே சமைச்சு போடுவே... என்மகளுக்கு அந்த வேலையே கொடுக்கலாமுன்னு இருக்கேன்," என்று கண்ணனின் தாய் மாமா சுந்தரம் மெல்ல பேச்சை ஆரம்பித்தார். 

இவர் கோவையில் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளராக இருக்கிறார். கண்ணனை தோளில் தூக்கிப் போட்டு வளர்த்த மாமா. கண்ணனுக்கு மாமா மீது நிரம்ப மரியாதை, பாசம். அதுவும் கண்ணனின் அப்பா இறந்த பிறகு இருவரும் பழகுவது பார்த்தால் நண்பர்கள் போல் தெரியும். அப்பா மறைந்த சோகத்தை மாமாதான் மெல்லமெல்ல ஆற்றினார். அவருடன் அவரது மகள் பவித்ராவும் சேர்ந்து கொண்டு உற்சாகப்படுத்தினாள். இருவருக்கும் சிறு வயது முதல் ஒரு ஈர்ப்பு. 

"அண்ணே... நீங்க சொல்றது சரிதான்... எங்களுக்கு ஒன்னும் பெருசா வருமானம் இல்லே.. கண்ணன் கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிக்கட்டும் அண்ணே.. கிணத்து வெள்ளத்தை ஆத்து வெள்ளமா  அடிச்சிக்கிட்டு போகபோவுது" என்று லஷ்மி இழுத்தாள்.

"நீ சொல்றதும் சரிதான். சின்ன வயசிலேயே அவளுக்கு இவன், இவனுக்கு அவள்-ன்னு நாம பேசிட்டோம். இப்போ கண்ணன் லீவு விட்ட கோயமுத்தூர் வர்றதும், இவளுக்கு லீவு விட்ட நான் அத்தையை போய் பாத்துட்டு வர்றேன் என்று பவித்ரா இங்கே மதுரை வர்றதும் ...  நான் பொண்ணை பெத்தவன் லஷ்மி.. சின்னச் சிறுசுகளை சேர்த்து வச்சுடலாம்..." என்று ஒரு தகப்பனின் அங்கலாய்ப்புடன் சுந்தரம் கூறினார். 

"சரி... எதுக்கும் உன் மாப்பிள்ளை கிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ..." என்று சிரித்தவாறு கண்ணனின் திருமணத்திற்கு சொல்லாமல் சொல்லும் விதத்தில் பச்சைக் கொடி காட்டினார் லஷ்மி. இது வரை கண்ணனை தனது 'மகனாக' பேசிக் கொண்டிருந்த லஷ்மி இப்போது சுந்தரத்தின்  'மாப்பிள்ளையாக்கி' பேசினார்.

சுந்தரத்திற்கும் ஒரு நிம்மதி.. திருப்தி....

ஒரு நல்ல நாளில் கண்ணனுக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நடந்தேறியது.

18  வயது பவித்ரா ஒரு அழகு தேவதை ! 

(தொடரும்..) 

Wednesday, 12 October 2011

மதனப் பெண் 6 - கடிதம் கிடைத்துவிட்டது

அப்புசாமி ஒரு 100% பொண்டாட்டிதாசன். 

மனைவி சுந்தரியின் தீர்மானமே அப்புசாமியின் தீர்மானம். "என்னங்க... இதுதான் என்னோட முடிவு..." என்று சுந்தரி சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் இல்லை. அது அப்புசாமியின் இறுதி முடிவாக சபையில் பகிரங்கமாகும். அவரைச் சொல்லி குற்றமில்லை. அப்படி அவர் வாழ்ந்து பழகி விட்டார். இல்லையென்றால் அப்படி அவரை வாழப் பழக்கி விட்டுவிட்டார் சுந்தரி, என்றும் சொல்லலாம். 

அப்படி சுந்தரி எடுத்த தீர்மானத்தை தனது தீர்மானமாக கொண்டு அப்புசாமி வக்கீல் மாப்பிள்ளைக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதமும் மகள் லலிதாவின் 'டிக்டேசன்'தான் .

ஜாதகத்துடன் கூடிய தனது கடிதத்தின் முடிவில் 'பிற விவரங்களை தங்கள் பதில் பார்த்து நேரில் தெரிவிக்கிறோம்" என்று முத்தாய்ப்பாக அப்புசாமி எழுதியிருந்தார். 

அதே நேரத்தில் இந்த சம்பந்தம் செட்டனால் பரவாயில்லை என்றும், செட்டாகாமல் போனாலும் பரவாயில்லை என ஒன்றுக்கொன்று முரண்பாடான இரு வேறு கருத்துகளை லலிதா மனதில் கொண்டிருந்தாள்.

இரண்டு தினங்கள் கழித்து அதாவது ஒரு சனிக்கிழமையன்று நண்பகல் வேளையில் மதுரை, கீழவெளி வீதியில் உள்ள ஒரு வக்கீலின் வீட்டுகதவை தபால்காரர் தட்டினார். நெற்றியில் வீபூதியும், குங்குமம் இட்டு வீடுடன் இணைந்த அலுவலக அறையில் அமர்ந்திருந்த கண்ணன் கதவைத் திறந்து தபால்காரரிடமிருந்து தபால்களை பெற்றுக் கொண்டார். 

அதில் ஒன்று அப்புசாமி சென்னையிலிருந்து எழுதிய கடிதம். 

"அப்புசாமியா? யாருன்னு தெரியலையே ! நமக்கு அப்படி ஒரு கிளைன்ட் சென்னையில் இல்லையே?" என்ற யோசனையுடன் கண்ணன் அக்கடிதத்தைப் பிரித்தார். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிய ஜாதகம் கண்டவுடன் கண்ணன் விவரம் புரிந்து கொண்டு அப்புசாமியின் கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார். 

அப்போது, "டாடி.. பாருங்க டாடி ... தம்பி என் பொம்மையை உடைச்சிட்டான்.." என்று வக்கீல் கண்ணனின்  செல்ல மகள் ரோஹினி கண்ணை கசக்கியவாறு அவரது அருகில் வந்து நின்றாள். 

"அப்புசாமியின் கடிதத்தை சரியாகத் தொடக் கூடவில்லை... அதற்குள் பொம்மை உடைந்து விட்டதாக தனது 7 வயது மகள் சொல்கிறாளே.." என்று கண்ணனின் மனதில் ஒரு சிறு மின்னல் கீற்று கருக்கென எட்டிப்பார்த்தது. எனினும் பிள்ளைகள் என்றால் இதெல்லாம் சகஜம்.. இதையெல்லாம் சகுனத்துடன் ஒப்பிடக்கூடாது என்று கண்ணன் தனக்குதானே சமாதானம் செய்து கொண்டு, மகள் ரோஹிணியை வாரியணைத்தவாறு அப்புசாமியின் கடிதத்தை மேலே படிக்க ஆரம்பித்தார். விவரங்களை அறிந்து கொண்டார்.

கண்ணன் என்ன முடிவு செய்தார்? 

(பின் சொல்கிறேன்...)

Tuesday, 11 October 2011

மதனப் பெண் 5 - மாப்பிள்ளைக்கு கடிதம்

வக்கீல் மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பற்றி கடிதம் எழுதுவது என்று லலிதாவின் அப்பா அப்புசாமி தீர்மானம் செய்தார்.

இவரை இங்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும்.

ரொம்ப எளிமையானவர். நேர்மையானவர். வம்பு தும்புக்கு போகாதவர். நல்ல மனிதர். யாரையாவது ஒட்டி பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் கொண்டவர். அலுவலகம் செல்லும் நேரம் தவிர அவர் ஒரு வீட்டுப் பறவை. அதே நேரத்தில் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. மனைவிக்கு கூஜா தூக்கி. சில சமயங்களில் சொல்வர் பேச்சைக் கேட்டு நல்லவர்களையும் பகைத்துக் கொள்வார். துன்பங்களையும் வரவழைத்துக் கொள்வார். சுய சிந்தனை குறைவு.

இப்போது கூட அவராக கடிதம் எழுதவில்லை. வீட்டின் தலைவர் என்ற முறையில் தனது பொம்மனாட்டியின் பேச்சைக் கேட்டு, தனது மகள் லலிதாவின் எடுப்பார் கைப்பிள்ளையாகி வக்கீல் மாப்பிள்ளைக்கு கடிதம் எழுதுகிறார். 

அப்புசாமியின் மனைவி அதாகப்பட்டது லலிதாவின் தாயார் சுந்தரி பணம் என்றால் வாயை பிளப்பார். அப்புசாமியின் சொற்ப சம்பளம் சென்னை வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. ஆனால் சுந்தரிக்கு சொகுசாக, ஆடம்பரமாக வாழ வேண்டும். வருமானத்தை எப்படியாவது கூட்ட வேண்டும் என்ற எண்ணம். அப்புசாமிக்கு வயது 57. சுந்தரிக்கு வயது 48. வீட்டில் ஒரு அடிப்படை சாமான் கூட இல்லை. ஒரு பிரிட்ஜ், வாசிங் மெசின், நல்ல டிவி, மியூசிக் பிளேயர் என எதுவும் கிடையாது. எல்லாம் வேண்டும், தானும் மற்ற உறவுக்காரப் பெண்கள் போல் மார்பு நிறைய நகை போட்டு மிடுக்குடன் வாழ வேண்டும் என்ற அவா அவரது மனதை எப்போதும் அரித்துக் கொண்டே இருக்கும். பணம்.. பணம்.. என கழுத்து வரை அதே ஓயாத குரல் அடி வயிற்றிலிருந்து சுந்தரிக்கு ஒலித்துக் கொண்டே இருக்கும். 

நூலை போலதானே  சேலை வரும். மகள் லலிதாவிற்கும் இதே எண்ணம்தான். இவர்கள் இருவருக்கு மத்தியில் ஒரு சேவகனாக அப்புசாமி வாழ்ந்து பழகி விட்டார்.  அதுபோல் இவர்களுக்கு யாராவது உதவிக்கொண்டே இருந்தால் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். உதவி செய்தவர் தனது சூழல் காரணமாக உதவ மறுத்தால் அவரை அடுத்த நிமிடம் நன்றி மறந்து  குறை கூறவும் தயங்க மாட்டார்கள்.

தாய் மற்றும் மகளுக்கு பணத்தாசை. தந்தையின் கையாலாகத்தனம். இதனால்  மகளுக்கு தாரமிழந்த, இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பற்றி கடிதம் எழுத வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.

ஒரு நல்ல நாள் பார்த்து அப்புசாமி மதுரை, கீழவெளி வீதியில் உள்ள மாப்பிள்ளைக்கு லலிதாவின் ஜாதகத்தை இணைத்து கடிதம் எழுதினார். மாப்பிள்ளையின் ஜாதகத்தை அனுப்பும்படியும் அப்புசாமி கேட்டிருந்தார். ஆனால் தனது மகளின் கதை என்ன என்பது பற்றி அவர் ஏதும் எழுதவில்லை. 

ஏற்கனவே தனக்கு செய்வாய் தோஷம் உள்ளது என்று விளம்பரத்தில் மாப்பிள்ளை குறிப்பிட்டு இருந்த காரணத்தால், இந்த இடம் குதிர்ந்து வரும் என்று லலிதா உட்பட அனைவரும் நம்பினார். 

ஆனால் லலிதாவின் கதை கேட்டால், மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்வார்களோ என்று அப்புசாமி மட்டும் தனக்கு எட்டியவரை சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அப்புறம் என்ன நடந்தது?

(தொடரும்...) 

Monday, 10 October 2011

மதனப் பெண் 4 - திட்டம்

பல மனக் குழப்பங்களுக்கு நடுவே லலிதாவும் அவரது பெற்றோரும் இருந்தனர். 

அவரது உறவினர்கள் சிலர் லலிதாவிற்கு வரன் பரிந்துரை செய்தனர். லலிதாவின் பெரியம்மா ஒருவர் ஒரு வியாபாரி வரன் பற்றி கூறினார். அவர் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்பவர்களுக்கு சுண்டல், முறுக்கு சப்பளை செய்பவராம். ஆனால் அந்த வரன் லலிதாவிற்கு பிடிக்கவில்லை. லலிதாவின் கதை கேட்டிருந்தால் அந்த சுண்டல் விற்பவருக்கு பிடிக்காது போயிருக்கும்.

பின் மற்றொரு உறவினர் துபாய் வரன் பற்றி பரிந்துரை செய்தார். ஆனால் அது தட்டிப் போனது. லலிதாவின் கதையை ஏற்கனவே அவர் கேளிவிப்பட்டதலோ என்னோவோ !

இங்கு இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். லலிதாவிற்கு ஜாதகத்தில் செய்வாய் தோஷம் வேறு. எனவே தோசமுள்ள மாப்பிள்ளை வேண்டி லலிதாவின் பெற்றோர்கள் கோவில்கோவிலாக கோரிக்கை வைத்து வழிபட்டனர். 

லலிதாவும் பெற்றோர் படும் அவஸ்தை கண்டு தனக்கு சீக்கிரம் ஒரு  திருமணம் நடந்து விட வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினாள்.

அவள் மங்கையர் மலர் புத்தகத்தில் வரும் மணமகள்/மணமகள் தேவை பகுதியில் தேட ஆரம்பித்தாள். சட்டென ஏதும் பிடிபடவில்லை. அச்சமயத்தில்  ஒரு தமிழ்  நாளிதழில் மணமகள் தேவை என்ற பகுதியில் விளம்பரம் ஒன்று வந்திருந்தது. அதில் மதுரையில் வழக்குரைஞராக உள்ள மணமகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை என்று கண்டிருந்தது. நல்ல வருமானம். மணமகனுக்கும் செய்வாய் தோஷம்.

எனவே ஏன் இந்த விளம்பரத்திற்கு பதில் அனுப்பக்கூடாது என்று லலிதா நினைத்துக் கொண்டே தொடர்ந்து வாசிக்க தொடங்கினார். அந்த மணமகன் தாரமிழந்தவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு என்றும் கண்டிருந்தது. 

இதை வாசித்த லலிதாவின் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

மாறாக தனக்கு தோதான மாப்பிள்ளை என்று அவள் நினைத்தாள். எனவே இந்த மாப்பிள்ளையை பேசி முடிக்க முயற்சி செய்யும்படி தனது பெற்றோரிடம் சொன்னாள். அவர்களும் எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லாமல் லலிதாவின் விருப்பத்தின்படி செய்ய ஆரம்பித்தனர். 

லலிதா தனக்கு வரும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு தாரமிழந்தவர் என்பதையோ, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன என்பதையோ பொருட்படுத்தவில்லை. அவர் தனக்கு ஏற்ற ஜோடி என்று நினைத்தாள். குறிப்பாக மாப்பிள்ளை ஒரு வக்கீல் என்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஏன் அப்படி பிடிக்க வேண்டும் ? 

அவளது உள்மனதில் இருந்த நீண்ட திட்டத்தை அப்போது யாரும் அறிந்திருக்கக் வாய்ப்பில்லை. 

(மேலும் சொல்கிறேன்...) 

Sunday, 9 October 2011

மதனப் பெண் 3 - மனம்

ஒரு திரைப்படத்திற்கு பார்முலா என்பது ஒரு கதை, மூன்று அல்லது நான்கு காதல் பாடல்கள், ஒரு கவர்ச்சி நடனம், இரண்டு சண்டைக்காட்சிகள், நகைச்சுவைக்கென இரண்டு நடிகர்கள் கொண்ட ஒரு தனி டிராக் அல்லது கதாநாயகனுடன் சேர்ந்து சிரிப்பு நடிகர் செய்யும் சேஷ்டைகள், அயல்நாட்டு படப்பிடிப்பு, கொஞ்சம் சோகம், சில வசனங்கள், திடீரென ஒரு கிளைமாக்ஸ். இது ஒரு பொதுவான பார்முலா. 

பொதுவாக ஒரு எதிரி, தனது சுய லாபத்திற்காக நன்றாக பழகிக் கொண்டிருக்கும் இரண்டு தரப்பினரை அவர்களுக்குள் வெறுப்பு கொள்ளச் செய்து அவர்களை மோத விட்டு, இடைவேளைக்கு பின் தாங்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்வது அந்த எதிரியின் சதியால்தான் என்பதை இரு தரப்பினரும் உணர்ந்து, அவர்கள் இருவரும் சேர்ந்து எதிரியை முடித்துக் கட்டுவது. இதுவே எல்லாப் படங்களிலும் இழையோடும் ஒரு பொத்தம்பொதுவான அம்சம். சில புதினக் கதைகள் இதற்க்கு விதிவிலக்கு. இப்படிப்பட்ட படங்கள் கதைக்காகவோ, பாடல்களுக்கவோ, நடிப்பிற்காகவோ சில சமயங்களில் வெற்றி பெற்று விடுவதுண்டு. ஆனால் பல சமயங்களில் தோல்வியே கண்டுள்ளது. 

ஆனால் வெற்றிகரமான திரைப்படத்திற்கு வேண்டியது என்ன தெரியுமா? ஒரு கதை மட்டுமல்ல ! கதைக்குள் கதை இருக்க வேண்டும். அதாவது கிளைக் கதைகள். இரண்டு பிளாஷ்பேக். படத்தின் இறுதியில் மட்டும் என்றில்லாமல் நிறைய இடங்களில் அதிரடியான திருப்பங்கள் இருக்க வேண்டும். காட்சிகள் தொய்வில்லாமல் ஓட வேண்டும். சூழல் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு நடிப்பு இயல்பானதாக இருக்க வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்பது ஊகிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். வெள்ளி விழா கண்ட எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் இந்த அம்சங்கள் இருக்கும். 

ஒரு திரைக்கதை அம்சங்களைப் பற்றி ஏன் இவ்வளவு விரிவாக கூறுகிறேன் என்றால், நமது மதனப் பெண் கதையும் அத்துணை விறுவிறுப்பை உள்ளடக்கியது. 

அந்த வகையில் நமது நாயகி லலிதாவிற்கு நிறைய பிளாஷ்பேக் உண்டு. கண்ணனுக்கும் அவ்வாறே !

தங்கள் மகளுக்கு 'எப்படியோ' ஒரு வரன் அமைந்து விட்டால், மேற்கொண்டு தங்கள் குடும்ப வாழ்க்கையை நகர்த்த ஏதுவாக இருக்கும் என்று லலிதாவின் பெற்றோர்கள் தினமும் சிந்தித்துக் கொண்டிருதனர். 

பொதுவாக தங்கள் மகளுக்கு ஒரு நல்ல வரன் அமைய வேண்டும் என்றே பெற்றோர் விரும்புவர். ஆனால் லலிதாவின் பெற்றோர்கள் மட்டும் தங்கள் மகளுக்கு 'எப்படியோ' ஒரு வரன் அமைந்து விட வேண்டும் என்று நினைக்க காரணம் என்ன?

பெற்றோர்கள் லலிதாவின் திருமணத்தை பற்றி இப்படி சிந்தித்துக் கொண்டிருக்க லலிதாவின் மனமோ வேறு மாதிரி சிந்திந்துக் கொண்டிருந்தது. தான் திருமணம் செய்து கொண்டால்தான் தனது குடும்பம் முன் நோக்கி செல்லும் என்பதை லலிதா நன்கு உணர்ந்திருந்தாள். ஆனால் அவளுக்குள் திருமணத்தைப் பற்றி ஒரு பயம், படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்தித்தது. 

திருமணம் என்றால் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. ஆனால் அதைப் பற்றி லலிதா வேறு விதமாக ஏன் நினைக்க வேண்டும்? லலிதாவின் இந்த சிந்தனைகள் எதையும் அறியாதவர்களாக அவளது பெற்றோர் இருந்தனர். தான் திருமணத்திற்கு சம்மதமான நிலையில், மகிழ்ச்சியான மன உணர்வில் உள்ளதாக லலிதா தனது பெற்றோரிடம் காட்டி வந்தாள். அதாவது பாசாங்கு செய்து வந்தாள் என்றுதான் கூற வேண்டும். லலிதாவின் இந்தப் பாசாங்குத்தனம், பின் தொடர்ந்து வந்த 12  ஆண்டுகளில் எல்லா நிகழ்வுகளிலும்  நீடித்தது. 

பெற்றோர் ஒரு புறம் அப்படி நினைக்க, லலிதா இப்படி ஒரு புறம் நினைக்க என்ன காரணம்? என்ன ஏதாவது பிரச்சனையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

(ஒவ்வொன்றாக விடை தருகிறேன்..)  
Related Posts Plugin for WordPress, Blogger...