வம்சம் தழைக்க தனக்கு ஒரு பேரன் பிறக்கப் போகிறான் என்று நினைத்து வரலக்ஷ்மி மிகவும் மகிழ்ந்தார்.
பெண் குழந்தையை லக்ஷ்மி கடாட்சமாக வரவேற்ற கண்ணனின் சித்தப்பாமார்கள் உள்ளிட்ட அனைவரும் தற்போது தங்கள் மருமகள் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்ததும், இப்போது பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது ஆண்டவன் நிர்ணயம் செய்தது! நம் கையில் ஏதும் இல்லை !
"நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!"
அதுபோல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கண்ணனோ-பவித்ராவோ ஏதும் நினைக்கவில்லை. பிறக்கப் போகும் குழந்தை எதுவாக இருந்தாலும் அது நன்றாக பிறக்க வேண்டும்... நன்றாக இருக்க வேண்டும் என்றே நினைத்தார்கள்.ஆண்டவன் சித்தம் எதுவோ அது நன்றாக நடக்கட்டும் என்று அவர்கள் இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை வரவேற்க சித்தமாக இருந்தார்கள். எனினும் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக, விருப்பமாக இருந்தது. குறிப்பாக வரலக்ஷ்மியின் அவாவாக இருந்தது.
பவித்ராவை கண்ணன் தவறாமல் டாக்டர் செகப்புக்கு அழைத்து சென்றார். கரு நன்றாக உள்ளதா... இயல்பான பிரசவத்திற்கு தோதான நிலையில் உள்ளதா என்பதை அறிய டாக்டர் அவ்வப்போது ஸ்கேன் செய்து பார்த்தார்.
அந்த விவரங்களை கண்ணன் கேட்டறிந்து கொண்டார்.. ஒரு முறை, கண்ணன் டாக்டரிடம், "டாக்டர்.. நீங்க இதுவரைக்கும் பவித்ராவுக்கு மூன்று தடவை ஸ்கேன் செய்து பர்த்து இருக்கீங்க.. கரு நல்ல வளர்ந்து வருதுன்னு சொன்னீங்க.. எனக்கு ரொம்ப சந்தோசம்.... நான் கேட்கக் கூடாது.. நீங்களும் சொல்லக் கூடாது.. இருந்தாலும்... கேட்டா என்ன என்று ஒரு ஆர்வம். அதனாலே கேட்கிறேன்.. நீங்க டாக்டர்.. நான் வக்கீல்.. அதனாலே தப்பில்லைன்னு நான் கேட்கிறேன்.." என்று பீடிகை போட்டவரே கண்ணன், தொடர்ந்து, "பிறக்கப் போற குழந்தை என்ன குழந்தைன்னு ஸ்கேன்லே தெரியும். அதனாலே பவித்ராவுக்கு என்ன குழந்தை பிறக்கப் போவுது டாக்டர்?" என்று கேட்டார்.
ஆனால் இந்தக் கேள்விக்கு தனது புருவத்தை உயர்த்தி டாக்டர் வியப்பாக பார்க்கவில்லை. அதாவது இந்தக் கேள்வியை டாக்டர் சாதாரணமாக எடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று சொன்னால் அதனால் குழந்தைக்கு எந்த பாதகமும் விளையப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த டாக்டர் பளிச்சென "மிஸ்டர் கண்ணன்.... உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது" என்று சொன்னார்.
கண்ணனுக்கு சில நொடிகள் ஒரு தடுமாற்றம் முகத்தில் தோன்றினாலும், "நிஜமாவா டாக்டர்?" என்று சற்று சுருதி குறைந்த குரலுடன் கேட்டார்.
"ஆமா மிஸ்டர் கண்ணன்.. 'பிமர் போன்' வளர்ச்சியை ஸ்கேனில் பார்த்தால் இது சென் பெர்சென்ட் பெண் குழந்தைதான்" என்று திட்டவட்டமாக சொன்னார்.
தனக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறக்கப் போகிறது என்பதை அறிந்த கண்ணன், குழந்தை எதுவானாலும் தாயும்-சேயும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று டாக்டர் சொன்ன விவரத்தை கண்ணன், பவித்ராவிடம் சொன்ன போது, அவள், "ரோஹிணிக்கு தம்பிப் பாப்பா பிறக்கப் போவுதுன்னு நினைத்தோம்.. இப்போ தங்கச்சிப் பாப்பா பிறக்கப் போவுது.. அவ்வளவுதானே... நீங்க எனக்கு ஆண் குழந்தை.. உங்களுக்கு நான் பெண் குழந்தை.. வேணுமுன்னா ஒரு வருஷம் கழிச்சி ஒரு டிசம்பர் மாசத்திலே கொடைக்கானல் போலம்ப்பா!" என்று சொல்லி உதட்டை சுழித்து சிரித்தாள்.
பெண் குழந்தை பிறக்கப் போவதாக கண்ணன் பவித்ராவிடம் சொன்ன விவரம், அவளது தாய், தந்தைக்கு சென்றது. அங்கிருந்து வரலக்ஷ்மியின் காதுகளை அடைந்தது. அவர் கொஞ்சம் டிஸ்அப்பாய்ட்மென்ட் ஆனார். இது தொடர்ந்து கண்ணனின் சித்தப்பா, சித்தி, இதர மாமா, மாமி என அனைவரின் காதுக்கும் பரவியது.
என்ன குழந்தை பிறக்கும் என்ற ஆவல் எல்லோருக்கும் மறைந்துவிட்டது. மாறாக பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் பெயர் தேட ஆரம்பித்து விட்டனர்.
இப்படியே காலம் நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் முற்பகல் பவித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இம்முறையும் பவித்ரா தனது தாய் வீடான கோவை செல்ல வில்லை. மதுரையில், தனது அன்பு மாமாவும், ஆசைக் கணவனுமான கண்ணனின் அருகிலேயே இருந்து பிள்ளை பெற்றெடுக்க விரும்பி தாம் முதலில் சேர்ந்த அதே மருத்துவமனையிலேயே இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்காக சேர்ந்து கொண்டாள்.
அன்று மதியமே பவித்ராவிற்கு பிரசவ வலி அதிகமாகி, பனிக் குடம் உடைந்து விட்டது. உடனே பவித்ரா பிரசவ அறைக்கு மாற்றப்பட்டாள். இம்முறையும் பவித்ராவிற்கு இயல்பான பிரசவம் நடப்பதற்கு தோதான நிலையில் அவளது உடல் இருந்த காரணத்தால் மருத்துவருக்கு அறுவை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏதும் ஏற்படவில்லை.
கண்ணன் பிரசவ அறைக்கு வெளியே ஒரு வித பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார். பிரசவம் நன்றாக நடக்க வேண்டும் என்று வரலக்ஷ்மி கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவ்வாறே சுந்தரமும், சர்மிளாவும் இருந்தனர்.
பவித்ராவை பிரசவ அறைக்குள் அழைத்து சென்று சுமார் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். அப்போது மதியம் சுமார் மூன்று மணி.
திடீரென உள்ளே இருந்து "மாமா......." என்று பவித்ரா உரக்க கத்தும் குரல் வெளியே கேட்டது. அனைவரும் 'என்னமோ.. ஏதோ' என அந்த பிரசவ அறையின் மூடியிருந்த கதவின் அருகே ஓடிச் சென்று நின்று கொண்டனர்..
சிறிது நேரத்தில் அந்த அறையின் கதவை ஒரு வித பரபரப்புடன் டாக்டர் திறக்கும் அறிகுறி தென்பட்டது..
அவர் என்ன சொன்னார்...?
(தொடரும்..)
2 comments:
"நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை!"
டாக்டர் என்ன சொன்னார்.?????
Nanri..
Post a Comment