இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Sunday 16 October 2011

மதனப் பெண் 10 - "நீ இல்லாமே எனக்கு அங்கே போரடிக்குதடி செல்லம்..."

பவித்ராவின் வீடு கோவையில் விமான நிலையம் செல்லும் சாலையில் அழகு நகரில் இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டியில் பவித்ராவையும், குழந்தையையும் சுந்தரம் அழைத்து வந்தார். பிரயாணத்தின் போது குழந்தையை பவித்ராவும், அவளது தாய் சர்மிளாவும் பத்திரமாக துணியில் சுற்றி எடுத்து வந்தனர். கோவை வந்தவுடன் ஒரு கார் பிடித்து அனைவரும் வீட்டை அடைந்தனர்.

பவித்ராவை குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து அவளது தாய் சர்மிளா ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துக் கொண்டார். தாங்கள் சுகமாக  வந்து சேர்ந்த விவரத்தை பவித்ரா உடனே தொலைபேசி செய்து கண்ணனுக்கு தெரிவித்தாள். 

பவித்ராவையும் குழந்தையையும் பார்க்க சுந்தரத்தின் அலுவலக நண்பர்கள் தினமும் ஒன்றிரண்டு பேர் குடும்பத்துடன் வந்து சென்றனர். சுந்தரம் அலுவலக நேரம் போக தனது குட்டிப் பேத்தியுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்.  

குழந்தையை குளிப்பாட்டுவது, அதனுடன் குழந்தை மொழியில் கொஞ்சிப் பேசிக் கொண்டிருப்பது, பவித்ராவிற்கு வேண்டிய உதவிகள் செய்வது என சர்மிளாவிற்க்கும் பொழுது போனது. குழந்தைக்கு அவ்வப்போது பால் கொடுப்பது, அழுதாள் என்னவென்று பார்ப்பது, துணி மாற்றுவது என்று பவித்ரவிற்கும் நேரம் போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து சிறிது நேரம் பவித்ராவிடம் பேசி விட்டு குழந்தையை பார்த்துச் சென்றனர். 

கண்ணனுக்கு தினமும் தொலைபேசி செய்து பேச பவித்ரா மறப்பதில்லை. "என் மாமா செல்லம்... சீக்கிரம் வந்துடுறேன் கண்ணு.. நீங்க சமத்தா வேளாவேளைக்கு  சாப்பிடனும்.. என்ன? வொர்க்லே கான்சன்டிரேட் பண்ணுங்க.. என் நினைப்பு பூராவும் அங்கேதான் இருக்கு.. உங்க குஜிலி பாப்பா உங்களை மாதிரியே ரொம்பப் படுத்துரப்பா.." என்று அவளுக்கே உரித்த ஹஸ்கி குரலில் பேசி கண்ணனை சமாதனப்படுத்துவாள். 

இப்படியே 20  தினங்கள் சென்றன. பவித்ராவையும், குழந்தையுயும் பார்க்க கண்ணன் மிக்க ஆவலாக இருந்தார். ஒரு வெள்ளிகிழமை மாலை தனது தாயிடம் சொல்லிவிட்டு கண்ணன் கோவை கிளம்பினார். 

"வாங்க மாப்பிள்ளை" என்று சுந்தரமும் அவரது மனைவி சர்மிளாவும், கண்ணனை வரவேற்றார்கள். "பவி.. மாமா வந்திருக்கார் பாரு.. உள்ளே கூட்டிட்டுப் போம்மா.." என்று சுந்தரம் பவித்ராவை அழைத்தார். 

மூன்று வாரங்களுக்கும் மேலாக கண்ணனை பார்க்காத பவித்ரா "வாங்க மாமா... நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும்" என்று ஆவலுடன் கண்ணனின்   கையை அழுத்தமாக பற்றி தனது அறைக்குள் அழைத்து சென்றாள். கட்டிலில் குழந்தை ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்தது. கண்ணன் அதன் சிவந்த கன்னத்தில்  மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தார். அதே நேரம் 'தனக்கு ஒன்றும் இல்லையா?' என்று பவித்ரா ஒரு ஏக்கப் பார்வை பார்த்தாள். 25  நாட்கள் பிரிவு 25  யுகங்களாக சென்றுள்ளது என்று இருவரின் கண்களும் பேசிக் கொண்டன. கண்ணன் மெல்ல பவித்ராவை நெருங்கினான். எப்போயெப்போ என்று காத்துக் கொண்டிருந்தது போல் பவித்ரா ஒரு காந்தமாகி கண்ணனின் உதடுகளை நோக்கி வந்தாள். ஒரு அழுத்தமான நீண்ட முத்தம் இருவரையும் சற்று நேரத்திற்கு மெய் மறக்கச் செய்தது. தங்களிடமிருந்து  ஏதோ ஒரு நீண்ட நாள் அழுத்தம் விடை பெற்றதை அந்த இணைபிரியா இன்ப தம்பதிகள் உணர்ந்தனர். 

பிறகு பவித்ராவின் மடியில் கண்ணன் தலை வைத்து இந்த 25 நாட்கள் எப்படி சென்றன என்று பேசிக் கொண்டிருந்தார். கண்ணன் இப்படி பவித்ராவின் மடியில் நெருக்கமாக தலை வைத்துப் படுப்பதும், அவனது தலை முடிகளை மெல்ல பவித்ரா கோதி விடுவதும் இன்றல்ல, திருமணத்திற்கு  முன்பே இருவரும் திருட்டுத்தனமாக செய்த வேலைகள். 

"நீ இல்லாமே எனக்கு அங்கே போரடிக்குதடி செல்லம்... எதப் பாத்தாலும் உன் நியாபகமா இருக்குடி.. நாளைக்கு உன்னையும் குழந்தையும் கூட்டிட்டுப் போறதா இருக்கேன்" என்றார் கண்ணன். "நான் ரெடி மாமா.." என்றாள் பவித்ரா. இதற்கிடையில் குழந்தை விழித்துக் கொண்டது. கண்ணன் குழந்தையை வாரியணைத்துக் கொண்டார். தான் கொண்டு வந்திருந்த மெல்லிய பேபி சட்டையை அணிவித்தான். அது அச்சின்னச் சிறு குழந்தைக்கு சற்று பெரிதாக இருந்தது.  குழந்தைக்கு இன்னும் கழுத்து சரிவர நிற்கவில்லை என்பதால், அதனை பவித்ரா லாவகமாக கண்ணனிடமிருந்து வாங்கிக் கொண்டு பால் கொடுக்க ஆரம்பித்தார். 

அடுத்த நாள் காலை, டிபன் முடித்த கையுடன் கண்ணன், "மாமா.. நான் பவித்ராவை இன்னிக்கு ஊருக்கு கூட்டிட்டுப் போறதா இருக்கேன்" என்று பேச்சை ஆரம்பித்தார். "ஏன்.. மாப்பிள்ளை இன்னும் கொஞ்ச நாள் வைச்சிகிட்டு பவியை அனுப்புரோமே.. அதுக்குள்ளே என்ன அவசரம்..?" என்றார், பவித்ராவை ஓரக்கண்ணால்  பார்த்துக் கொண்டே. 

"இல்லே டாடி.. அவருக்கு நான் இல்லாமே எதுவும் ஓடாது.. குழந்தையை நானும் அத்தையும் நல்ல பாத்துக்கிறோம் ... நீங்களும் மம்மியும் டைம் கிடைக்கிறப்போ வாங்க.." என்று மாமனுடன் சென்று விட பவித்ரா தயாராக இருந்தாள்.

"குழந்தைக்கு ரெகுலரா தடுப்பூசி போடணும் மாமா.. சித்தப்பா, மத்த சின்ன மாமா, பிரெண்ட்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு குழந்தைக்கு பேர் வைக்கணும். அதுக்கு ஏற்பாடு செய்யப் போறேன் .. அதோட  பவித்ரா இல்லாமே வீடு 'விச்சோ'ன்னு இருக்கு .. அம்மாவுக்கும் குழந்தையை பாக்குனும் போல இருக்கு... பவித்ராவையும் குழந்தையையும் கூட்டிட்டுப் போறேன் மாமா"  என்றார் கண்ணன். 

"மனேஜ் பண்ணிப்பீங்கன்ன சரி.. கூட்டிட்டுப் போங்க... பட்... கைக்குழந்தையை கூட்டிட்டுப் போறதாலே நானும் மதுரை வந்து விட்டுட்டு வர்றேன்" என்று சுந்தரமும் மதுரை கிளம்பினார். அனைவருக்கும் ட்ரைன் டிக்கெட் ரீசர்வேசன் கிடைத்துவிட்டது. 

குழந்தைக்கு சுந்தரம் தற்காலிகமாக 'ஜில்பிலி' என்று பெயர் வைத்து அப்படியே கொஞ்சிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த 'ஜில்பிலி'யுடன் மூவரும் மதுரை கிளம்பினர். 

(பயணம் தொடர்கிறது...)

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் பயணம். பாராட்டுக்கள்.

ஜில்பிலி' அழகு!

Advocate P.R.Jayarajan said...

Nanri..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...