இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Sunday 16 October 2011

மதனப் பெண் 9 - எல்லாம் இன்ப மயம் !

கண்ணன்-பவித்ரா இல்வாழ்க்கை சந்தோசத்தின் விளைபலனாக,  பவித்ரா திருமணம் முடிந்த 4  மாதங்களுக்குள் கர்ப்பம் தரித்தாள்.

பவித்ராவிற்கு கை நிறைய வளையல் போட்டு, பூ சடை பின்னி, சித்ரான்னங்களை செய்து, உற்றார் உறவினர் கூட்டி சீரும் சிறப்புமாக வளைகாப்பு செய்யப்பட்டது. பவித்ராவிற்கு எல்லோரும் சந்தானம் பூசி, வளையல் அணிவித்து ஆசிர்வாதம் செய்தனர். 

பவித்ரா ஏற்கனவே கொள்ளை அழகு. அதிலும் சிறு வயது முதலே மனதில் நினைத்துக் கொண்டிருந்த அத்தை மகனே அவளுக்கு கணவனாக அமைந்தது அவளை மேலும் அழகாக்கி இருந்தது. இப்போது கர்ப்பமும் தரித்துள்ளாள் . இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியால் அவளது முகம் இன்னும் தேஜஸாக இருந்தது.  உடலும் பூரித்து போய் இருந்தது. 

கண்ணனும் அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் திளைத்து போய் இருந்தார். பிறக்கப் போகும் குழந்தை இரு குடும்பங்களின் அடுத்த பரம்பரைக்கு மூத்த குழந்தை வேறு. அதாவது இந்தக் குடும்பத்தில் கண்ணன் மூத்தவர். அந்த குடும்பத்தில் பவித்ரா மூத்தவள். இருவரும் தலைச்சன் வாரிசுகள். எனவே கண்ணனின் தந்தை குடும்பத்தினரும்,  பவித்ராவின் தந்தை குடும்பத்தினரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து இருந்தனர். கண்ணன் பவித்ராவை தவறாமல் டாக்டர் செக் அப்பிற்கு அழைத்து சென்றார். வரலஷ்மி குழந்தை நன்றாக பிறக்க வேண்டும், தாயும் சேயும் நன்றாக இருக்க வேண்டும், என்று வேண்டி கோவில்களுக்கு சென்று வழிபட்டார். 

வளைக்காப்புக்குப் பிறகு பவித்ராவை பிரசவத்திற்காக சுந்தரம் கோவை அழைத்து செல்வதாக கூறினார். 

ஆனால் பவித்ரா அதற்கு இசையவில்லை. "டாடி.. நான் மாமா கூட இங்கேயே இருந்து குழந்தை பெத்துகிறேன் .. உங்களை விட அத்தே என்னை நல்ல பாத்துகிறாங்க... மாமா பக்கத்திலேயே இருக்காரு....  நான் வரலே ..." என்று சொல்லி  விட்டாள்.  தனது மகள் இப்படி பேசுவதைக் கண்டு சுந்தரத்திற்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி, ஆனால் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டாமல், "என்ன இருத்தலும் பிறந்த வீட்டிலே பிரசவம் பக்குரதுதானே முறை" என்று ஒப்புக்கு ஒரு வார்த்தை சொல்லி விட்டு கோவை கிளம்பி சென்று விட்டார். சொந்தத்தில் திருமணம் என்பதால் பெரிய பார்மாலிட்டிஸ்களுக்கு இங்கு வேலை இல்லாமல் போய் விட்டது. 

கண்ணனின் சித்தப்பா, சித்தி எல்லோரும் அவ்வப்போது வந்து பவித்ராவை பார்த்து, நலம் விசாரித்து சென்றனர். கண்ணின் மற்ற மூன்று தாய் மாமன்களும், மாமிகளும் (அதாவது பவித்ராவிற்கு சித்தப்பா, சித்திகள்) அடிக்கடி வந்து பவித்ராவிற்கு பிரசவ அறிவுரைகள் கூறி சென்றனர். 

ஒரு நாள் இரவு பவித்ராவிற்கு பிரசவ வலி வந்தது. முன்னதாக கண்ணன் தனது தாய்வழி பாட்டியை (இருவருக்கும் பாட்டி) கோவையில் இருந்து அழைத்து வந்து வைத்துக் கொண்டிருந்தார். வரலக்ஷ்மியும், பாட்டியும் பிரசவ அறிகுறிகள் தென்படுவதை தெரிந்து கொண்டு, பவித்ராவை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். 

கண்ணன் அதிகாலை வேளை ஒரு காரை அழைத்து அதில் பவித்ராவை அமர வைத்து ஏற்கனவே செக்கப் செய்துகொண்டிருந்த டாக்டரிடம் அழைத்து சென்றார். பவித்ரா படித்தவள்; விஷயம் தெரிந்தவள். எனவே சுகப் பிரசவத்திற்கு தோதாக தனது உடலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியன செய்து கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள். எனவே மருத்துவருக்கு குழந்தையை வெளிக் கொண்டு வருவதில் பெரிய சிரமம் ஏதும் ஏற்படவில்லை. அறுவை இல்லாமல் சுகப் பிரசவத்தில் பவித்ரா குழந்தையை  ஈன்றெடுத்தாள்.  

பவித்ராவிற்கு பிறந்தது பெண் குழந்தை. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததால் இறந்து போன தனது தந்தை வழிப் பாட்டி மீனாட்சியே பிறந்ததாக  கண்ணன் நினைத்தார். எல்லோருக்கும் சந்தோசம். 

பவித்ரா மருத்துவமனையில் இருந்து மூன்று நாட்களிலே விடுவிப்பு பெற்று வீடு திரும்பினாள்.

சுமார் மூன்று வாரம் கழித்து, பவித்ராவை தங்கள் இப்போதாவது சில தினங்கள் வைத்து தாய்-சேய் இருவரையும்  பாங்கு பார்த்து அனுப்புவதாகக் கூறி சுந்தரம் அவளை கோவை அழைத்து செல்வதாகக் கூறினார்.  பவித்ராவிற்கு  கண்ணனை பிரிய மனமில்லை. எனினும் தனது தாய், தந்தையை டிஸ்சப்பாய்ன்ட் செய்ய பவித்ரா விரும்பவில்லை. எனவே பவித்ரா கிளம்பத் தயாரானாள் .

திருமணத்திற்கு முன்பு கண்ணனை கண்டாலே, பவித்ரா அருகில் சென்று ஒட்டி உரசிக் கொண்டே நிற்பாள். இப்போது திருமணத்திற்குப்    பிறகு முதன்முறையாக ஒரு மாதத்திற்கு கண்ணனை விட்டு பவித்ரா பிரிகிறாள்.


"அத்தே.. மாமாவை பாத்துக்கோங்கோ... நேரத்துக்கு சமைச்சு போடுங்கோ... நேரத்துக்கு சாப்பிடாம போன அவருக்கு அசிடிட்டி பாம் ஆகி வயத்துவலி வந்துடும்..  அன்பா பரிமாறுங்க.. வாரத்திலே ஒரு நாள் எண்ணை தேச்சு குளிக்க ஞாபகப் படுத்துங்கோ.. புதன், ஞாற்றுக் கிழமையிலே சிக்கன் குழம்பு வச்சு, சிக்கனை எண்ணையிலே பொரிச்சு தந்தூரி சிக்கன் மாதிரி பண்ணி கொடுங்கோ.. 10  நாளைக்கு ஒரு தடவை மட்டன் கொத்து கறி வாங்கி  கோலா உருண்டை பண்ணி கொடுங்கோ. நான் மம்மி, டாடியோட கொஞ்ச நாள் இருந்து விட்டு வந்துடுறேன்" என்று பவித்ரா கண்ணனுக்கு தாயாக மாறி சில அன்பு கட்டளைகளை தனது மாமியாருக்கு இட்டாள். "தனது மகனை இப்படித்தான் கைக்குள் போட்டுக் கொண்டாளா, இந்தக் கள்ளி?"  என்று வரலட்சுமிக்கு கொஞ்சம் பொறாமையுடன் மகிழ்ச்சி. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம், "தங்களை வளைய வந்த மகள், இப்போது இங்கு எப்படி வளைகிறாள்" என்று நினைத்து சந்தோசப்பட்டார்.

கண்ணன் உள்ளபடி பாக்கியசாலி; கொடுத்து வைத்தவர். 'லக்கி பிலோ' என்பார்களே அதன் மொத்த உருவம் கண்ணன்.       

எல்லாம் இன்ப மயமாக சென்று கொண்டிருந்தது.... 

(தொடரும்) 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

எல்லாம் இன்பமயம். அருமை!

Advocate P.R.Jayarajan said...

nanri...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...