இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday 3 December 2011

மதனப் பெண் 28 - நான் எதுக்கு மாமா சாகணும்..?

கண்ணனின் விபரீத செயலைக் கண்டு அவரது சிறிய மாமா பதற்றத்தின் உச்சத்திற்கே போனார்.

கண்ணனின் கையை பிடித்து இழுப்பதற்காக அவர் கண்ணனின் அருகே ஓட்டமாக ஓடிச் சென்றார்.

"மாமா.. அவ கூப்புடுறா மாமா..." என்று சொல்லிக் கொண்டிருந்த கண்ணன் இப்போது, "மாமா.. இப்போ பவித்ராவோட குழந்தைங்களும்  தெரியறாங்க... அவ என்னை வரவேனாம்ன்னு சொல்றா மாமா.. குழந்தைங்களை பாத்துக்க சொல்றா... " என்றவாறு கண்ணன் கிணற்றின் சுற்றுச் சுவர் மீதிருந்து கீழே குதித்து அப்படியே குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டார். கண்ணனின் அருகில் வந்துவிட்ட மாமாவுக்கு அப்போதுதான், போன உயிர் திரும்பி வந்தது போல் ஆனது.

அவர் அப்படியே கண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "தெய்வமே.. நான் என்ன பண்ணுவேன்..? இப்படி சோதிக்கிறாயே ..." என்றவர், பிறகு சற்றே சுதாரித்துக் கொண்டு, "கண்ணா.. கொஞ்ச நேரத்திலே என்ன காரியம் பண்ணப் போனே..? நீ இப்படி பண்ணலாமா? உனக்கு மணிமணியா ரெண்டு குழந்தைங்க இருக்குப்பா ... நீயும் பவித்ரா கூப்புடுறான்னு போய்ட்ட அப்புறம் அந்தக் குழந்தைங்க கதி...?!" என்று கண்ணனை நெஞ்சில் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

பின் கண்ணன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து சடக்கென விடுபட்டார் போன்று, ஓவென கதறி அழ ஆரம்பித்தார். "பவித்ரா.. என்னை இப்படி விட்டுட்டு போயிட்டியே ..." என்பதே திரும்பத் திரும்ப அவரது அழுகையின் ஊடே வந்த அவரது குரலாக இருந்தது.

கண்ணனின் துக்கங்கள், மன வேதனைகள், வருத்தங்கள், பவித்ராவின் நினைவுகள் எல்லாம் அழுகையின் வடிவில் வெளி வரட்டும் என்று அவரது மாமா அவரை அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டார். கண்ணனின் பெருங்குரல் அழுகையை கேட்டு அந்த நந்தவனத்தில் இருந்த அனைவரும் திரண்டு விட்டனர். நிலைமையை அறிந்து அவர்களில் வயது முதியவர்களாக இருந்த சிலர் கண்ணனை மெல்ல சமாதனப்படுத்தினர்.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்ணன் தனது அழுகை, தொடர்ந்து ஏற்பட்ட விசும்பல் எல்லாவற்றையும் மெல்ல நிறுத்தி, அருகில் இருந்த வாளியை எடுத்து கிணற்றில் விட்டு நீர் சேந்தி தலைக்கு மடமடவென ஊற்றிக் கொண்டார். பின் உடலை துண்டால் துவட்டி கொண்டு, உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டார். இப்போது அவரது முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

அருகில் வந்த மாமா, "கண்ணா.. நீ இப்போ பண்ணின மாதிரி எப்பவும் பண்ண மட்டே என்று என்கிட்டே சத்தியம் பண்ணு" என்று சற்று உறுதி கலந்த கண்டிப்புடன் தனது உள்ளங்கையை கண்ணனுக்கு எதிராக நீட்டினர். கண்ணன் அவரது கையை அப்படியே தனது கையால் பற்றிக் கொண்டார். "எனக்கு.. எங்கே பாத்தாலும் பவித்ரா தெரியறா  மாமா.. அவளோட untimely  death  என்னை ரொம்ப பாதிச்சிடிச்சு..  சாரி மாமா.. நான் சரி பண்ணிக்கிறேன்...  எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு.. பவித்ரா ஆசைப்பட்ட மாதிரி அவங்களை நல்ல வளக்கிறேன்.. அப்போதான் அவளோட ஆத்மா சாந்தியடையும்.. நான் எதுக்கு மாமா சாகணும்..? பவித்ராதான் என்கூடவே இருக்கல்லே...!  இனி குழந்தைங்களுக்காக  வாழப்போறேன்... நாம வீட்டுக்கு போலாம் மாமா.. எல்லோரும் காத்திருப்பாங்க.. " என்றவாறு மாமாவின் கைகளை பிடித்தவாறு கண்ணன் மெல்ல எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தார்.

கண்ணன் உறுதியாக பேசுவதை கண்டு மாமாவிற்கு சற்றே நிம்மதி கிடைத்தது.. கண்ணன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மனதளவில் தயாரானார்.



அதிகமாக பிரியம் வைத்திருந்து, தானும் சந்தோசமாக இருந்து, மற்றவரையும் சந்தோசமாக வைத்திருக்கும் ஒருவர்,- அதுவும் அவர் அன்பான, அழகான, அருமையான, பொறுப்பான, பொறுமையான, புத்திசாலியான, வாழ்வை வண்ணமயமாகும் மனைவியாக இருந்து, சிறிய வயதிலேயே திடீரென இறந்து விட்டால் இப்படிப்பட்ட உடனடித் தடுமாற்றங்கள் எல்லா கணவன்மார்களுக்கும்  ஏற்படும். அத்துணை இல்லாத வெறுமை, ஆற்றாமை நிறைய சங்கடங்களை தோற்றுவிக்கும்.


இதற்கு கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?

(தொடரும்..)

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

உனக்கு மணிமணியா ரெண்டு குழந்தைங்க இருக்குப்பா ... நீயும் பவித்ரா கூப்புடுறான்னு போய்ட்ட அப்புறம் அந்தக் குழந்தைங்க கதி...?!" என்று கண்ணனை நெஞ்சில் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்./

குழந்தைகளுக்காக வாழ்ந்தே தீரவேண்டிய அவசியத்தை கண்ணன் உண்ர்ந்துகொண்டாரே!

ஆறுதலளிக்க்கிறது...

இராஜராஜேஸ்வரி said...

துணை இல்லாத வெறுமை, ஆற்றாமை நிறைய சங்கடங்களை தோற்றுவிக்கும்.


இதற்கு கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?

இக்கட்டான சங்கடமான சூழ்நிலை..

தொழில் குடும்பம், குழந்தைகள், தாயார், ஏன் தன்னனைத் தயார்படுத்திக்கொள்வது என்று எல்லாமே இனி சிரம சாத்தியமான செயல்களே!

இராஜராஜேஸ்வரி said...

கதை என்ற உணர்வே தோன்றாமல் கண்ணனின் அருகே இருந்து அவரது சோகத்தில் பங்கெடுப்பது போன்ற எழுத்துநடை..

அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்...

Advocate P.R.Jayarajan said...

குழந்தைகளுக்காக வாழ்ந்தே தீரவேண்டிய அவசியத்தை கண்ணன் உண்ர்ந்துகொண்டாரே!
ஆறுதலளிக்க்கிறது...

உண்மை..
குழந்தைகளுக்காக வாழ ஆரம்பித்தார்.
ஆனால் காலச் சக்கரம் ...?

Advocate P.R.Jayarajan said...

//இக்கட்டான சங்கடமான சூழ்நிலை..
தொழில் குடும்பம், குழந்தைகள், தாயார், ஏன் தன்னனைத் தயார்படுத்திக்கொள்வது என்று எல்லாமே இனி சிரம சாத்தியமான செயல்களே!//

சத்தியமான வரிகள்...

Advocate P.R.Jayarajan said...

//கதை என்ற உணர்வே தோன்றாமல் கண்ணனின் அருகே இருந்து அவரது சோகத்தில் பங்கெடுப்பது போன்ற எழுத்துநடை..//

நிகழ்ந்தவை...!

Advocate P.R.Jayarajan said...

//அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்...//

தங்கள் மின்னல் வேக மறுமொழிகளுக்கு என்
நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...