இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Tuesday 29 November 2011

மதனப் பெண் 27 - "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா.."

பவித்ராவை மண்ணுக்கு கொடுத்து விட்டு எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.


அவ்வப்போது சின்ன சின்ன விசும்பல்கள் வீட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பவித்ராவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, விளக்கேற்றி  ஊதுபத்தி பொருத்தி வைத்திருந்தனர். கண்ணன் அந்தப் புகைப்படத்தின் முன் அமர்ந்தே இருந்தார். பவித்ராவை பார்த்துக் கொண்டே இருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலசமயம் 'ஏன் டாடி.. மம்மி எப்போ வருவாங்க டாடி...? மம்மி சாமியாய்ட்டதா சொல்றாங்க டாடி.. அப்படியென்ன என்ன டாடி..?' என்று ரோஹினி கேட்டாள். எதற்கும் கண்ணனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ஆனால் அந்த அழகு தேவதை பவித்ரா, கண்ணனையோ, தனது குழந்தைகளையோ கைவிட மாட்டாள் என்று உறவினர்கள் பேசிக் கொண்டனர்.

சாதி மத வழக்கப்படி பத்தாம் நாள் காரியம் செய்வார்கள். ஆனால் பவித்ரா இப்படி துர் மரணம் அடைந்த காரணத்தால் மூன்றாம் நாளே அக்காரியங்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டன. இடுகாட்டில் பவித்ராவை அடக்கம் செய்த இடத்தில் எல்லோரும் கூடினர்.  கண்ணன் பூஜை செய்தார். பவித்ராவின் மரணம் கொடுத்து அதிர்ச்சியில் இருந்து கண்ணன் எள்ளளவும் மீளவில்லை என்பதை அவர் ஏதோ ஒரு சாவி கொடுத்த பொம்மையாக பூஜை செய்ததிலிருந்து எல்லோரும் அறிய முடிந்தது.

பிறகு அருகில் இருக்கும் நந்தவனத்தில் குளித்து விட்டு கண்ணன் வீட்டிக்குள் நுழைய வேண்டும் என்று சமூகப் பெரியோர்கள் கூறினார். இதனால் கண்ணனை அழைத்துக் கொண்டு அவரது சிறிய மாமா (சுந்தரத்தின் தம்பி) நந்தவனத்திற்கு செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இடுகாட்டில் அந்திமக் காரியம் செய்து விட்டு வரும் உறவின் முறையினர் குளிக்க, உடை மாற்ற, பிற சாங்கியங்கள் செய்ய அதற்கு அருகிலேயே ஒரு இடத்தை பெரிய கிணற்று நீர் வசதியுடன் பூங்காவனம் போல அந்தக் காலத்திலேயே ஒதுக்கி கொடுத்திருந்தனர். அது நந்தவனமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

நடை தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு வரும் வரையில் கண்ணனோ, அவரது சிறிய மாமாவோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நந்தவனம் வந்து அதன் வாயிற் படியில் கண்ணன் இறங்கும் போது, "கண்ணா.. நீ படிச்சவன்.. வக்கீல்.. யாரும் நிரந்தரம் கிடையாது என்கிறதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அவ போய்ட்ட .. நம்மோட இல்லை என்கிறதை நீ நம்பித்தான் ஆகணும்.. இப்படியே நீ மௌனமா இருந்தா எப்படி..? பாவம் .. உன்னோட பிள்ளைங்களை நினைச்சுப் பாரு... நீ பவித்ராவை மறந்துதான் ஆகணும்... பிள்ளைங்களை ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு" என்று கண்ணனின் சிறிய மாமா மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே வந்தார். கண்ணன் எவ்வித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே வந்தார்.

தொடர்ந்து, "கண்ணா நீ தலைக்கு குளிச்சிட்டு வந்திடு... பவித்ராவுக்கு இங்கேயே முழுக்கு போட்டுட்டு.. அவ திரும்பி வரப்போறதில்லே.. இந்தா பக்கெட்டு.. கிணத்து தண்ணியே சேந்தி தலைக்கு ஊத்திக்கோ" என்று சிறிய மாமா சொல்லிவிட்டு நந்தவன படிக்கட்டுக்கு அருகே சென்று அமர்ந்தார்.

மாமா கொடுத்த வாளியை அந்த பெரிய கிணற்றில் விட்டு தண்ணீர் சேந்தி கண்ணன் தலைக்கு விட்டுக் கொண்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமா, கண்ணனை பவித்ராவின் நினைவுகளில் இருந்து மீட்டு கொண்டுவர தான் பேசிய பேச்சுகள் ஒரு சிறிய தாக்கத்தை முதற்கட்டமாக ஏற்படுத்தி இருக்கின்றன என்று நம்பினார். அப்போது திடீரென கண்ணன் ஒரு செயலைச்   செய்தார். அவர் அந்தப் பெரிய கிணற்றின் சுற்றுச் சுவர் மீது ஏறி நின்று கொண்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமாவுக்கு அதிர்ச்சி. உடனே கண்ணனின் அருகில் ஓடி வந்தார். "கண்ணா. என்ன ஆச்சி...? கீழே இறங்கப்பா..!" என்று கூவிக் கொண்டே வந்தார்.

இது வரையில் பேசாத கண்ணன், இப்போது, "மாமா.. பவித்ராவோட முகம் தெரியுது மாமா..!" என்று கிணற்றில் உள்ள நீரைச் சுட்டிக் காட்டி கூச்சலிட்டார்.

தொடர்ந்து... "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா..!!" என்றவாறு இரண்டு கைகளையும் விரித்து கிணற்றில் விழத் தயாரானார் கண்ணன்.

மாமா பதறிப் போனார்..!?


(தொடரும்.)

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

இது வரையில் பேசாத கண்ணன், இப்போது, "மாமா.. பவித்ராவோட முகம் தெரியுது மாமா..!" என்று கிணற்றில் உள்ள நீரைச் சுட்டிக் காட்டி கூச்சலிட்டார்./

பதற வைக்கிறார் கண்ணன்.. இரு சிறு குழந்தைகள் தாயும் தந்தையும் இல்லாவிட்டால் எப்படி???

கண்ணனைக்காப்பாற்றிவிட்டீர்கள்தானே..

இராஜராஜேஸ்வரி said...

'ஏன் டாடி.. மம்மி எப்போ வருவாங்க டாடி...? மம்மி சாமியாய்ட்டதா சொல்றாங்க டாடி.. அப்படியென்ன என்ன டாடி..?' என்று ரோஹினி கேட்டாள். எதற்கும் கண்ணனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ஆனால் அந்த அழகு தேவதை பவித்ரா, கண்ணனையோ, தனது குழந்தைகளையோ கைவிட மாட்டாள் என்று உறவினர்கள் பேசிக் கொண்டனர்./

பவித்ராவின் பரிசுத்தமான
ஆத்மா தெய்வமாய் நின்று
குழந்தைகளை காக்கட்டும்..

இராஜராஜேஸ்வரி said...

பாவம் .. உன்னோட பிள்ளைங்களை நினைச்சுப் பாரு... நீ பவித்ராவை மறந்துதான் ஆகணும்... பிள்ளைங்களை ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு"

பொறுப்புணர்ந்து அருமைக் குழந்தைகளை எண்ணி நிதர்சனம் திரும்பட்டும்..

பவித்ராவின் ஆத்மா சாந்தி அடையட்டும்!!

Advocate P.R.Jayarajan said...

//பொறுப்புணர்ந்து அருமைக் குழந்தைகளை எண்ணி நிதர்சனம் திரும்பட்டும்..
பவித்ராவின் ஆத்மா சாந்தி அடையட்டும்!!//

அருமைக் குழந்தைகள் வளம் பெற்றால் அதுவே பவித்ராவின் ஆன்மா சாந்தி பெற்றதற்கு ஒப்பாகும்

Advocate P.R.Jayarajan said...

//பவித்ராவின் பரிசுத்தமான
ஆத்மா தெய்வமாய் நின்று
குழந்தைகளை காக்கட்டும்..//

நிச்சயம் காக்கட்டும்.

Advocate P.R.Jayarajan said...

//பதற வைக்கிறார் கண்ணன்..
இரு சிறு குழந்தைகள் தாயும் தந்தையும் இல்லாவிட்டால் எப்படி???
கண்ணனைக்காப்பாற்றிவிட்டீர்கள்தானே..//

வாழ்வின் இன்னல்களை அனுபவித்துதான் ஆக வேண்டும்..!

Advocate P.R.Jayarajan said...

மீண்டும் முத்தான மூன்று மறுமொழிகளுக்கு நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...