இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Sunday 27 November 2011

மதனப் பெண் 26 - வாய் விட்டு அழுதிடு

நன்கு வாழ வேண்டிய இளம் வயதில் ஒருவரை மரணம் தழுவிக் கொண்டால் சம்பந்தப்பட்டவர் வீட்டில் எப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சோகம் நிலவுமோ அச்சோகம் வரலஷ்மி மற்றும் சுந்தரத்தின் வீட்டில் நிலவியது. மேலும் மாமாமார்கள் , சித்தப்பாமார்கள் என சொந்தபந்தம் வட்டத்தில் பவித்ராவும் கண்ணனும் செல்லப் பிள்ளைகள். எனவே மொத்த உறவே அழுது கொண்டிருந்தது.

பவித்ராவின் அகால மரணம் அக்குடும்பத்தினரை பெரிதும் பாதித்து விட்டது. ஒரு புறம் பவித்ராவின் இழப்பு. மற்றொரு புறம் அவள் விட்டுச் சென்ற இரண்டு பிஞ்சுக் குழந்தைகள். மகள் ரோஹிணிக்கு வயது 5. மகன் சத்யதேவுக்கு வயது 3. இறந்து போன பவித்ராவை நினைத்து அழுவதா? இல்லை இந்த தாயில்லாக் குழந்தைகளை நினைத்து அழுவதா? எல்லா வகையிலும் சோகம், வேதனை.

அந்திம சாங்கியங்கள் முடிந்து பவித்ராவை இடுகாட்டில் புதைக்கும் போது மழை தூறிக் கொண்டிருந்தது. அவளது உடலை அலங்கரிப்பட்ட ஊர்தியில் இருந்து கீழே இறக்கி வைத்திருந்தனர். உடலின் அருகே ரோஹினியும், சத்தியதேவும் அமர வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மண்ணுக்குள் செல்லவிருக்கும் தாயின் முகத்தை கடைசியாக பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து கண்ணனின் சித்தப்பா குழந்தைகளை அப்படி அமர வைத்திருந்தார். துருதுருவென இருக்கும் இரண்டு குழந்தைகள் மீதும் கண்ணனின் சித்தப்பாவுக்கு மிகவும் பிரியம். அடிக்கடி பார்க்க வருவர். பொம்மைகள் வாங்கி தருவார். அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லி விளையாடுவார். இதனால் குழந்தைகளும் அவரிடம் 'தாத்தா.. சின்ன தாத்தா" என்று நன்றாக ஒட்டிக்கொண்டன. "தனது தாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் ஏன் எழுந்திரிக்கவில்லை.."  என்று ரோஹினி புரியாமல் அழுது கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் மீது மழைத்துளி விழாமல் இருக்க அவர் குடை விரித்து பிடித்திருந்தார். விபத்து மரணம் என்பதால் பிரேத பரிசோதனை செய்த பின்னரே பவித்ராவின் உடலை கொடுத்தனர். உடல் முழுவதும் துணிக் கட்டுகள். முகம் மட்டும் தெரிகிறது. அந்த முகத்தில் தூறிக் கொண்டிருந்த மழை துளிகளைக் கண்டு, அந்தக் குழந்தைகள் இருவரும் செய்தது, அனைவரையும் மீண்டும் அழ வைத்தது.

அமர்ந்திருந்த சத்தியதேவ் மெல்ல நகர்ந்து தனது பிஞ்சுக் கைகளால் பவித்ராவின் முகத்தில் விழுந்த மழைத்துளிகளை லேசாக துடைத்து விட்டான். தொடர்ந்து ரோஹினி, "தாத்தா..., மம்மி முகத்திலே மழை விழுது பாருங்க.. மம்மிக்கும் கொஞ்சம் குடை காட்டுங்க..." என்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டு எல்லோருக்கும் நெஞ்சு அடைத்தது.

"தெய்வமே.. உனக்கு ஈவு இரக்கமே இல்லையா ? இந்த அறியாப் பிஞ்சு குழந்தைகளை இப்படி தவிக்க விட்டு விட்டாயே..." என்று நெஞ்சு குமுறி அழ ஆரம்பித்தார், கண்ணனின் சித்தப்பா.

கண்ணன் சித்தப் பிரமை பிடித்தார் போல் இருந்தார். பவித்ராவின் முகத்தை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யாரிடமும் பேசவில்லை. "கண்ணா.. மனசுக்குள்ளேயே கஷ்டத்தை வைச்சுகிட்டு இருக்காதே.. வாய் விட்டு அழுதிடுப்பா..." என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். கண்ணன் எல்லோரையும் எப்போதோ, எங்கேயோ பார்த்தது போல் பார்த்தார்.

அடக்கம் செய்பவர் சொன்னவற்றை கண்ணன் ஒரு இயந்திரமாக செய்து கொண்டு வந்தார். இதோ.. அழகு தேவதை பவித்ராவின் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்டது. பெண் உறவினர்கள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு 'ஓ..'வென அழ ஆரம்பித்தனர். கடைசி பிடி மண் எடுத்து கண்ணன் பவித்ராவின் உடல் மீது இட்டார்.

எல்லாம் முடிந்து விட்டன. பவித்ரா தனக்கான ஒரு இறுதி இடத்தில் அமைதி ஆனாள். அவளுடன் அவளது கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே  புதைந்து போயின.. 

(தொடரும்)

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

இறந்து போன பவித்ராவை நினைத்து அழுவதா? இல்லை இந்த தாயில்லாக் குழந்தைகளை நினைத்து அழுவதா? எல்லா வகையிலும் சோகம், வேதனை.

அகால மரணமல்லவா?? எல்லையற்ற சோகம் மனதை கனக்கவைக்கிறது...

இராஜராஜேஸ்வரி said...

"தாத்தா..., மம்மி முகத்திலே மழை விழுது பாருங்க.. மம்மிக்கும் கொஞ்சம் குடை காட்டுங்க..." என்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டு எல்லோருக்கும் நெஞ்சு அடைத்தது.

அவலக்காட்சி வேதனை தருகிறது..
பிஞ்சுக் குழந்தைகளை இப்படி விதி சோதித்துவிட்டதே..பாவம்!!

இராஜராஜேஸ்வரி said...

"கண்ணா.. மனசுக்குள்ளேயே கஷ்டத்தை வைச்சுகிட்டு இருக்காதே.. வாய் விட்டு அழுதிடுப்பா..." என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். கண்ணன் எல்லோரையும் எப்போதோ, எங்கேயோ பார்த்தது போல் பார்த்தார்.

தாளமுடியாத இழப்பு மனம் மரத்திருக்கும்...
பொக்கிஷம்போல் கிடைத்த மனைவி மரணித்துவிட்டாளே!
சாவே உனக்கு ஒரு சாவு வந்தால் தேவலையே!

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//அகால மரணமல்லவா?? எல்லையற்ற சோகம் மனதை கனக்கவைக்கிறது...//

அகால மரணம் மனதை விட்டு அகலாது..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//சாவே உனக்கு ஒரு சாவு வந்தால் தேவலையே!//

சத்தியமான வரிகள்..
பொக்கிஷம் போய் விட்டது..
கண்ணனின் வாழ்க்கை பொய்த்துப் போனது..

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//அவலக்காட்சி வேதனை தருகிறது..
பிஞ்சுக் குழந்தைகளை இப்படி விதி சோதித்துவிட்டதே..பாவம்!!//

பிஞ்சுக் குழந்தைகளின் விதி...?
தெய்வமே...

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

முத்தான மூன்று மறுமொழிக்கு நன்றி...

Unknown said...

சார்! சோகரசம் நெஞ்சை மிகவும் பிழிகிறது! போதும்!

Advocate P.R.Jayarajan said...

கண்ணனின் வாழ்வை விதி கசக்கி பிழிகிறது... என்ன செய்ய?

மறுமொழிக்கு நன்றி..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...