இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Thursday 17 November 2011

மதனப் பெண் 23 - வாழ்க்கை ஒரு 'U' TURN !

குலதெய்வப் பிரார்த்தனைகள் முடிந்தன. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் ஒன்றை எடுத்து கண்ணனின் கழுத்தில் போட்டு பூசாரி ஆசிர்வதித்தார்.

தொடர்ந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட சக்கரைப் பொங்கலை ஒரு சிறிய எவர்சில்வர் வாளியில் பாதியளவு வைத்து பிரசாதமாக பூசாரி வழங்கினார். அத்துடன் அபிசேகம் செய்த போது பிடித்த  பஞ்சாமிர்தத்தை மற்றொரு சிறிய டப்பாவில் வைத்து  கொடுத்தார்.  அவ்வாறே வாழைப்பழம், தேங்காய் மூடி தட்டை கொடுத்தார். விபூதி, குங்குமம் ஆகியவற்றை சிறு பொட்டலங்களாக கட்டிக் கொடுத்தார்.

அவரிடமிருந்து விடை பெற்று, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஓரிடத்தில் அனைவரும் சற்றே ஓய்வாக அமர்ந்தனர். கோவிலில் அந்த நேரத்தில் இருந்த அனைவருக்கும் சக்கரைப் பொங்கல் பிரசாதத்தை, வரலக்ஷ்மி கொஞ்சம் கொடுத்தார். பின் அனைவரும் சக்கரை பொங்கலை ஒரு கவளம் எடுத்து கண்களில் மேலாக ஒற்றி வாயில் பயபக்தியுடன் இட்டு உண்டனர். குழந்தைகள் ரோஹினி, சத்தியதேவ்-க்கு பவித்ரா ஊட்டிவிட்டாள். அப்போது மதியம் சுமார் 1  மணி இருக்கும். கொஞ்சம் சக்கரை பொங்கலை சாப்பிட்டது, அனைவருக்கும் பசியை மேலும் தூண்டியது.

"மாமா.. காலையிலேயே சாப்பாடு ஆக்கி வைச்சுட்டேன்.. எல்லோரும் வீட்டுக்கு போய் சாப்பாடு சாப்பிட்டுரலாம்... இங்கிருந்து ஒன் அவர்தானே..   2  மணிக்குள்ளே வீட்டுக்கு போயிறலாம்.. வேணுமின்னா வழியிலே இளநி சாப்பிடலாம்...ரொம்ப வெயிலா வேற இருக்கு" என்றாள் பவித்ரா.

இது கண்ணனுக்கும், வரலஷ்மிக்கும் ஏற்புடையதாக இருந்தது. அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்து காரில் பூஜை பொருட்களை எடுத்து வைத்தனர். ஓட்டுனருக்கு சிறிது பொங்கலை பவித்ரா கொடுத்தார். காரில் ஏறப் போன கண்ணன் அந்த சாலைக்கு எதிர் வரிசையில் ஒரு மரத்தடியில் நிறைய இளநீர் காய்களுடன் ஒருவர் அமர்ந்து விற்பனை செய்து கொண்டிருப்பதை பார்த்தார்.

உடனே கண்ணன் கார் டிரைவரிடம், "ரகு... நாங்க அந்தப் பக்கம் போய் இளநி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க அப்படியே வண்டிய எடுத்துப் போய் 'U' turn  பண்ணிக்கிட்டு வந்துடுங்க... நேரா மதுரை போய்டலாம்.." என்று சொன்னார்.

"சார் எல்லாரும் வண்டியிலேயே உக்காருங்க ... 'U' turn   எடுத்து அந்தப் பக்கம் போய் இளநி கடைக்காரர் கிட்டே போய் நிறுத்துறேன்.. இது ஹை வே ரோடு.. ரொம்ப ஸ்பீடா வருவாங்க..எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க சார்.." என்றார் டிரைவர் ரகு.

"இல்லே ரகு ...  'U' turn   எடுக்கிறதுக்கு ரொம்ப தூரம் போகணும்.. நாங்க அதுக்குள்ளே இளநி சாப்பிட்டு முடிச்சு ரெடியா இருப்போம்.. மதிய நேரம்.. வண்டி போக்குவரத்து ஒன்னும் காணோம்.. தோ... ஒரு நடைதானே..இளநி சாப்பிட்டு சீக்கிரமா மதுரை போய்டலாம்.. நல்ல பசி.." என்றார் கண்ணன்.

இதை ஆமோதிக்கும் வண்ணம் பவித்ரா, "ஆமா ரகு... நீங்க 'U' turn   எடுத்து வரதுக்குள்ளே நாங்க இளநி சாப்பிட்டு முடிச்சிடுவோம்.. பாப்பாங்க ரெண்டு பேரும் வேணா காருக்குள்ளே இருக்கட்டும்.. காலையிலே எழுந்தனாலே ரெண்டு பேருக்கும் தூக்கம் சொக்குது.." என்றவாறு இரண்டு குழந்தைகளையும் காருக்குள் படுக்க வைத்தாள்.

"சரி.. நான் அப்போ  'U' turn   எடுத்து அந்தப்பக்கம் வற்றேன்" என்றவாறு காரை கிளப்பினார் ரகு.

கண்ணன், பவித்ரா, வரலக்ஷ்மி அனைவரும் மெதுவாக அந்த இருவழி  சாலையில் ஒரு வழியை  கடந்து நடுவில் சுமார் இரண்டு அடி அகலம் உள்ள சாலை பிரிப்பு (Road Separator) திட்டில் வந்து நின்று கொண்டனர். சொன்னது போல வாகனப் போக்குவரத்து ஏதும் இல்லை. எனவே சாலையை கடப்பது ஒன்றும் சிரமமாக தெரியவில்லை.

பின் அங்கிருந்து மற்றொரு வழி சாலையை கடந்து எதிர்புறம் மரத்தடியில் உள்ள இளநீர் கடையை அடைய வேண்டும். கண்ணன் விடுவிடுவென அந்தப்பக்கம் போய், கடை அருகே நின்று கொண்டார். வரலக்ஷ்மியும், பவித்ராவும் அந்தப் பக்கம் வரவேண்டும். பவித்ராவின் கையை பிடித்தவாறு வரலக்ஷ்மி அந்த சாலை பிரிப்பு திட்டில் இருந்து இறங்கி இரண்டு எட்டுகள் வைத்து சாலையில் நடக்க ஆரம்பித்தார். பவித்ரா அவருக்கு பின்னாடி அவரது கையை பிடித்துக் கொண்டு அந்த திட்டில் இருந்து இறங்க ஆரம்பித்தாள்.

அப்போது அந்த சாலையின் வளைவுப் பகுதியில் இருந்து ஒரு லாரி வேகமாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது அசுர வேகம்....

திட்டிலிருந்து  சாலையில் முதலில் காலடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்த வரலக்ஷ்மியின் மீது நேராக மோதியே தீர வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த லாரி வந்தது போல் இருந்தது.

லாரி வேகமாக வருவதும், அது வரலக்ஷ்மியின் மீது மோதி விடும் போல் திட்டு ஓரமாக வருவதும் எதிர் பக்கம் இருந்த கண்ணனுக்கு நன்கு தெரிந்தது. ஏதோ ஒரு பதற்றம் கண்ணனை உடனடியாக தொற்றிக் கொண்டது. அதே நேரம் திட்டிலிருந்து இறங்க முயன்று கொண்டிருந்த பவித்ராவுக்கும் இந்த அபாயம் புரிந்தது. 

"அம்மா பாத்து.. லாரி வருது" என்று கண்ணன் கத்தினார்.  வரலக்ஷ்மி இதை உணரும் முன் லாரி அவரது அருகில் வந்து விட்டது. அதன் ஓட்டுனர் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் அழுத்தி அதனால் எழும்பிய ஒலி வெளியில் கேட்டது. லாரியின் டயர் சாலையை அழுத்தித் தேய்க்கிறது.  இருந்தாலும் வேகம் சீக்கிரமாக மட்டுப்படவில்லை.

அடுத்து என்ன நடந்தது..?

(பின் சொல்கிறேன்)

4 comments:

Unknown said...

இந்த வலைப்பூ இன்றுதான் கண்ணில் பட்டது! முழுவதும் படித்து விட்டு வருகிறேன், நண்பரே!

Advocate P.R.Jayarajan said...

தங்களை உள்ளார்ந்த அன்புடன் வரவேற்கிறேன்..
நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

"அம்மா பாத்து.. லாரி வருது" என்று கண்ணன் கத்தினார். வரலக்ஷ்மி இதை உணரும் முன் லாரி அவரது அருகில் வந்து விட்டது. அதன் ஓட்டுனர் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் அழுத்தி அதனால் எழும்பிய ஒலி வெளியில் கேட்டது. லாரியின் டயர் சாலையை அழுத்தித் தேய்க்கிறது. இருந்தாலும் வேகம் சீக்கிரமாக மட்டுப்படவில்லை.

அடுத்து என்ன நடந்தது..?/

மிக பதட்டமான இடத்தில் ..திக்..திக்.. என்று காத்திருக்கிறோம்..

Advocate P.R.Jayarajan said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...