இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Friday 4 November 2011

மதனப் பெண் 18 - அதிர்ச்சி

உரிமையியல் வழக்குகளை நடத்துவதில் நல்ல பெயரையும், புகழையும் ஈட்டினார் கண்ணன். முந்தைய தீர்ப்புகளை தேடிப்பிடித்து சுட்டிக்காட்டி வாதம் செய்வதில் கண்ணனுக்கு ஒரு தனி பெயர் மதுரை நீதிமன்றங்களில் கிடைத்தது.இதனால் தீர்ப்பு வழங்குவது  நீதிபதிகளுக்கு எளிதாக இருந்தது. இதனாலேயே கண்ணனின் வழக்கில் ஒரு நியாயம் இருக்கும், ஒரு சாரம் இருக்கும் என்றும் நீதிபதிகள் நம்பினார். அவர்களது நம்பிக்கைக்கு எந்தக் குந்தகமும் வராதபடிக்கு கண்ணனும் நடந்து கொண்டார். குறிப்பாக பொய், புரட்டு வழக்குகளை தாக்கல் செய்தல், தேவையில்லாமல் வாய்தா வாங்குதல் போன்ற வேலைகள் கண்ணனிடம் இல்லை.

அத்துடன் அவ்வப்போது நடக்கும் இலவச சட்ட உதவி முகாம்களில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நீதிபதிகள் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொள்ளும் இம்முகாம்களில் கண்ணனுக்கு நல்ல அறிமுகமும், நற்பெயரும் கிடைத்தது. வழக்கிட வசதியற்றோருக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அனுப்பும் வழக்குகளை கண்ணன் திறம்பட நடத்தி விரைவில் தீர்ப்பு வாங்கிக் கொடுத்தார். லயன்ஸ் கிளப் உறுப்பினர் ஆனார். சிறிய வயதிலேயே சட்டத் தொழிலில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றி நடை போட்டார். நீதிமன்றத்தில் எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணம் அவரை மற்ற வழக்குரைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டியது. 

தொழிலில் எத்தனை பிசியாக இருந்தாலும் பவித்ரா மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க கண்ணன் தவறுவதில்லை. வெள்ளிக் கிழமை மாலை அலுவலக பணி ஏதும் செய்வதில்லை. பவித்ரா, குழந்தைகளுடன் சினிமா அல்லது மீனாட்சியம்மன் கோவில் என்று எங்காவது வெளியில் சென்று விட்டு உணவருந்தி வீட்டிற்கு திரும்புவது என்பதை கண்ணன் தனது வழக்கமாக கொண்டிருந்தார். சனிக்கிழமை முழு நாள் அலுவலகம் நடக்கும். அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் வழக்குகளை கண்ணனும், அவரது ஜூனியர் வழக்குரைஞர்களும் தயார் செய்து கொள்வார்கள். ஞாயற்று கிழமை அலுவலதிற்கு விடுமுறை. அன்று பவித்ரா செய்யும் நான் விஜிடரியன் உணவு வகைகளை கண்ணன் ஒரு பிடி பிடிப்பார். மதியம் பவித்ராவுடன் ஒரு நிம்மதியான தூக்கம். மாலை குழந்தைகளுடன் விளையாட்டு. இப்படி கண்ணனின் வாழ்க்கை சீராக, மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்தது.

புதிய வீடு கட்டும் பணியும் நன்கு நடந்து கொண்டிருந்தது. வங்கியில் கடன் வாங்கலாம் என்று கண்ணன் நினைத்திருந்தார். ஆனால் அதற்கு தேவை ஏதும் ஏற்படவில்லை. எப்போதெல்லாம் சிமென்ட் லோடும், செங்கல் லோடும் வந்து இறங்குகிறதோ அதற்கு முன் தினமே, ஏதாவது ஒரு புதிய வழக்கும், அதற்கான பீஸும் கண்ணனுக்கு வந்து விடும். எனவே கட்டட வேலை செலவுகளுக்கு கண்ணனுக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை.

மகள் ரோஹினி எல்.கே.ஜி. முடித்து யு.கே.ஜி. சேர்ந்தாள். மகன் சத்தியதேவ்-வை  பாலர் பள்ளியில் சேர்க்க பவித்ரா எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மதியம் மேல்தள  கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அன்று மதியம் நீதிமன்றப் பணி ஏதும் இல்லாத காரணத்தால், கண்ணனும் வீட்டில் இருந்தார். அப்போது மேஸ்திரி மேலிருந்து தடதடவென இறங்கி வந்து "சார்.. கொஞ்சம் மேல வந்து பாக்குறீங்களா?" என்று ஒரு வித இறுக்கத்துடன் கண்ணனை அழைத்தார். கண்ணன், "என்ன மேஸ்திரி.. என்ன விஷயம்" என்று கேட்டார். "நீங்க உடனே மேல வந்து பாருங்க.." என்று மேஸ்திரி அனத்தினார். 

மேஸ்திரியுடன் கண்ணன் மேல் தளத்திற்கு சென்றார். பவித்ராவும் பின்னாடியே வந்தாள். மேல் தள கட்டத்திற்கு அப்போதுதான் ரூப் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. அது செட்டாகும் வரை  தாங்கிப் பிடிக்க மரச்  சாரங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. 

பெட் ரூம் கட்டிக் கொண்டிருந்த பகுதிக்கு மேஸ்திரி அழைத்து சென்று, அங்கு உள்ளே ஈசான்ய மூலைப்  பகுதியின் மேல்புறத்தை பார்க்கும் படி கை  காட்டினார். அப்போது பின்னாடி வந்து கொண்டிருந்த பவித்ராவிற்கு கீழிருந்த செங்கல் ஒன்று தடுக்கி கால் இடறி நகம் சிறிதாக உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அதை அப்போதைக்கு சரி செய்து கொண்டு கண்ணனின் பின்னாடியே வந்து மேஸ்திரி காட்டிய பகுதியில் கண்ணனும் பவித்ராவும் பார்த்தனர்.

அவர்களுக்கு மிக்க அதிர்ச்சி ஏற்பட்டது !

அது என்ன? 

(தொடரும்)

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

எப்போதெல்லாம் சிமென்ட் லோடும், செங்கல் லோடும் வந்து இறங்குகிறதோ அதற்கு முன் தினமே, ஏதாவது ஒரு புதிய வழக்கும், அதற்கான பீஸும் கண்ணனுக்கு வந்து விடும். எனவே கட்டட வேலை செலவுகளுக்கு கண்ணனுக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை.

தெய்வ சித்தம்!

இராஜராஜேஸ்வரி said...

அவர்களுக்கு மிக்க அதிர்ச்சி ஏற்பட்டது !

அது என்ன? /

அதிர்ச்சி!??
மிகவும் எதிர்பார்க்கவைக்கும் பரபரப்பான கட்டம்.
விறு விறுப்பாய் நுணுக்கமாய் கதையை நடத்திச்செல்லும் பாங்கு வியக்கவைக்கிறது. பாராட்டுக்கள்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

**எப்போதெல்லாம் சிமென்ட் லோடும், செங்கல் லோடும் வந்து இறங்குகிறதோ அதற்கு முன் தினமே, ஏதாவது ஒரு புதிய வழக்கும், அதற்கான பீஸும் கண்ணனுக்கு வந்து விடும். எனவே கட்டட வேலை செலவுகளுக்கு கண்ணனுக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை.**

//தெய்வ சித்தம்//

கண்ணன்தான் வரம் பெற்றவர் ஆயிற்றே..!
பின்னூடத்திற்கு நன்றி.

நொடியில் கோடி வரம் தரும் நிமிசாம்பாள் பற்றிய உங்கள் பதிவை வாசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. என்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளேன்.

Advocate P.R.Jayarajan said...

@ இராஜராஜேஸ்வரி

//அதிர்ச்சி!??
மிகவும் எதிர்பார்க்கவைக்கும் பரபரப்பான கட்டம்.
விறு விறுப்பாய் நுணுக்கமாய் கதையை நடத்திச்செல்லும் பாங்கு வியக்கவைக்கிறது. பாராட்டுக்கள்.//

நன்றி..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...