இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Saturday 15 October 2011

மதனப் பெண் 8 - "ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும் !"

ஏற்கனவே அறிமுகம் இல்லாத இருவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள காலம் பிடிக்கும். ஆனால் கண்ணன், பவித்ராவிற்கு அத்தை மகன். பவித்ரா, கண்ணனுக்கு மாமன் மகள். சிறு வயதிலேயே இருவரும் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடி கணவன், மனைவியாகவே வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். இப்போது நிஜத்திலும் கணவன் மனைவி ஆகி விட்டனர். நினைத்தது கிடைக்கும் போது மகிழ்ச்சிக்கு பஞ்சமா என்ன?

அப்படி எல்லையில்லா மகிழ்ச்சி கண்ணனுக்கும், பவித்ராவிற்க்கும். இனிமையாக நாட்கள் சென்றன.

கண்ணன் மதுரையில் ஒரு மூத்த வழக்குரைஞரிடம் ஜூனியர் வக்கீலாக சேர்ந்து மெல்ல சட்டத் தொழிலில் கால் உன்ற ஆரம்பித்தார். கீழ மாரட் தெருவில் மூத்த வழக்குரைஞரின் அலுவலகம். காலை 7  மணிக்கு கண்ணன் சென்று விடுவார். அவரது சீனியர் டிக்டேசன் கொடுக்க தயாராக இருப்பார். கண்ணன் டிக்டேசன் எடுத்துக் கொண்டு, அன்றைய தினம் விசாரணைக்கு வரும் கட்டுகளை எடுத்து அதில் என்ன பேசுவது என்பது குறித்து சீனியரிடம் குறிப்புகளை வாங்கிக் கொள்வர். தொடர்ந்து தட்டச்சு செய்பவர் வருவார். குமாஸ்தா வருவார். நீதிமன்றத்திற்கு செல்ல எல்லாவற்றையும் தாயார் செய்து கொண்டு அனைவரும் கிளம்புவர். சீனியர் அலுவலத்திலே இருப்பார். தேவைப்பட்டால் அவருக்கு தொலைபேசி செய்து அழைப்பது வழக்கம். கண்ணன், சீனியர் அலுவலத்திலிருந்து கிளம்பி கீழ வெளி வீதியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து பவித்ரா சூடாக செய்து வைத்திருக்கும் டிபன் சாப்பிட்டு விட்டு நீதிமன்றத்திற்கு கிளம்பி விடுவார். 

பவித்ரா உணவு பரிமாறும் அழகே தனி..

"மாமா... இன்னும் ரெண்டு இட்லி வைச்சுகோங்க... நல்ல சாப்பிட்டதன் நல்ல பேச முடியும்... ஒரு வக்கீலுக்கு ஸ்டெமினா முக்கியம்.. மதியம் தக்காளி சாதம் பேக் பண்ணி கொடுத்திருக்கேன்.  நேரத்துக்கு சாப்பிடுங்கோ ... உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்கோ... நான் செய்ஞ்சு தர்ரேன்.." என்று கொஞ்சும் மொழியில் கொஞ்சிக் கொண்டே சொல்வாள். அவள் கொஞ்சக் கொஞ்சிப் பேச கண்ணனுக்கு சில சமயம் நீதிமன்றத்திற்கு செல்லலாமா, வேண்டாமா என்று கூடத் தோன்றி விடும். 'கொஞ்சம் அரட்டை... கொஞ்சம் சேட்டையாக' டிபன் சாப்பிடும் படலம் முடியும். 

எனினும் கடமை முக்கியம் என்பதால், "பவித்ரா.. எல்லாம் சாயந்தரம் வந்து பேசிக்கலாம். ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு கோர்ட்லேயிருந்து வந்த பிறகு சொல்றேன்.." என்று சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு அதே நேரத்தில் கண்களில் ஒரு குறுகுறுப்பை காட்டிவிட்டு கண்ணன் கிளம்புவார். "ராத்திரிக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும்.. அதை நீங்க சொல்ல வேண்டியதில்லை..." என்று சிரித்துக் கொண்டே  பவித்ரா பூடகமாக சொல்வாள். "சாப்பிட என்ன பண்றது" என்பதற்கும், இப்போது இருவரும் பேசிக் கொண்டிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இருவரும் நன்கு அறிவர்.

பவித்ரா வந்த பிறகு கண்ணனின் தாய் வரலஷ்மிக்கு நிறைய நிம்மதி. தங்கச்  சிலை போல் மருமகள். சொந்த அண்ணன் மகள். "அத்தே.. அத்தே.." என்று தன்னை சுற்றி வந்தவள் இப்போது தனது மகனை சுற்றி வருகிறாள். மகனை தாங்குதாங்கு-என தாங்குகிறாள்.  மகன் சந்தோசமாக உள்ளான். பிள்ளைகள் இரண்டும்  இப்படி மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு லக்ஷ்மி அடுத்த கட்டத்திற்கு சென்று பேரப் பிள்ளைகள் பற்றி நினைக்கத் தொடங்கிவிட்டார். 

கண்ணனின் தொழில் வாழ்கை சூடு பிடிக்கத் தொடங்கியது. அதே நேரம் கண்ணன்-பவித்ரா வாழ்கை மிகமிக அன்யோன்ய தம்பதிகளாக, மகிழ்ச்சியாக  சென்று கொண்டிருந்தது. 

பவித்ரா கர்ப்பிணி ஆனாள்.. 

(தொடரும்)


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சந்தோஷ்மாக தொடர்கிறது.

Advocate P.R.Jayarajan said...

சந்தோசத்தின் எல்லை தொடர்ச்சியானது...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...