இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Showing posts with label அத்தியாயம் 37. Show all posts
Showing posts with label அத்தியாயம் 37. Show all posts

Sunday, 15 January 2012

மதனப் பெண் 37 - வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்

புத்தாண்டு மகிழ்ச்சியாக பிறந்தது. கண்ணன், ரோஹினி, சத்தியதேவ் எல்லோரும் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். வரலக்ஷ்மிக்கு சந்தோசம்.

விடுமுறை முடிந்து கண்ணனுக்கு நீதிமன்றம் திறந்து விட்டது. ரோஹிணிக்கும் பள்ளி திறந்து விட்டது. எனவே அவளை பள்ளியில் கொண்டு சென்று விட கண்ணன் தயாரானார். ரோஹிணிக்கு பிரிய மனமில்லை.

"பொங்கல் லீவில் வரலாம்.. ஒரு வாரம் லீவ் கிடைக்கும்" என்று வரலக்ஷ்மி சமாதானம் சொல்லிய பிறகு ரோஹினி பள்ளிக்கு கிளம்பினாள். கண்ணன் அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்பட்டார்.

வழக்கம் போல் பயணம், பள்ளி, ரோஹிணியிடம் விடை  பெறல், மீண்டும் மதுரை நோக்கி பயணம்.

மதுரை வந்த பிறகு கண்ணன் தனது நீதிமன்றப் பணிகளில் மூழ்கினார். அதே நேரம் பொங்கல் பண்டிகை முடிந்து 21-ஆம் தேதி வரவிருக்கும் பவித்ராவின் வருஷ திதிக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் கவனித்தார். புரோஹிதம் செய்ய தெற்கு வாசல் ஐயரைப் போய்ப் பார்த்தார். அவர், "வக்கீல் சார்.. உங்க ஆத்துக்காரி ஆக்சிடேன்ட்லே திடீரென்னு போயிட்டா...அகால மரணம்.. இயற்கையா செத்துபோனவாளுக்குதான் நிறைய சாஸ்திர சம்பிரதாயம் பண்ணனும்ன்னு கருட புராணம் சொல்லுது.. ஆனா அவா இப்படி திடீர் மரணம் அடைச்சதாலே, அவா நம்மோடுதான் இருக்கிறதாதான் அர்த்தம். அதனாலே அதுக்கு தக்க மாதிரி புரோஹிதம் செய்யனும்.. அதே நான் பாத்துகிறேன்... மகளை ஹாஸ்டலே இருந்து அழைச்சிட்டு வந்திடுங்க... சில சாமான்கள் தேவை.. அதுக்கு ஒரு லிஸ்ட் மட்டும் தாரேன்.. அதை வாங்கி பிரிபேர் பண்ணி வச்சிக்கோங்க." என்று ஐயர் விளக்கம் சொன்னார். அவர் கொடுத்த லிஸ்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

பவித்ராவின் வருஷ திதி வரும் விஷயத்தை தனது மாமன்மார்கள், சித்தப்பாமார்கள், தனது  மூத்த வழக்குரைஞர்கள் உட்பட தனது நண்பர்கள் அனைவரிடம் சொல்லி அன்றைய தினம் அனைவரையும் தனது வீடு வரும்படி அழைப்பு விடுத்தார்.

பத்து தினங்கள் பறந்து விட்டன. தொடர்ந்து பொங்கல் விடுமுறைக் காக ரோஹிணியை அழைத்து வர கண்ணன் கொடைக்கானல் கிளம்பினார். அப்பா எப்போது வந்து தன்னை அழைத்துப் போவார் என்று தனது பெட்டியு டன் காத்திருந்தாள் ரோஹினி. பள்ளி வந்தடைந்த கண்ணனை பார்த்ததும் ரோஹினியின் முகத்தில் உற்சாக வெள்ளம்; மகிழ்ச்சி. விடுதியை விட்டு ஓடோடி வந்து கண்ணனை கட்டிப் பிடித்துக் கொண்டாள். 'டாடி.. மை ஸ்வீட் டாடி... லவ்லி டாடி.. " என்று செல்லம் கொஞ்சினாள். கண்ணனும் ரோஹிணியை வாரியணைத்துக் கொண்டார். இருவரும் அப்படியே பள்ளியில் உள்ள பூங்காவைக் கடந்து வெளி வந்தனர்.

அப்போது ரோஹிணியை போல மற்ற பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்திருந்த அவர்களது தாய் தந்தையர் அந்தப் பூங்காவில், தங்கள் பிள்ளைகளுடன் குதூகலமாக இருப்பதையும், விளையாடுவதையும் ரோஹினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் திடீரென சுருங்கியது.

"டாடி... அங்கே பாருங்க.... என் கிளாஸ் மேட் பூஜாவோட மம்மி பூஜாவோட எவ்வளவு ஹேப்பியா விளையாடுறாங்க பாருங்க.." என்று அந்தப் பூங்காவில் ஓரிடத்தைக் காட்டினாள், ரோஹினி.


தொடர்ந்து, "ஏன் டாடி ...  எனக்கும் ஒரு மம்மி இருந்த எவ்வளவு நல்ல இருக்கும்..?" என்று கேட்டாள் ரோஹினி..

கண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்று சட்டென விளங்கவில்லை.

வாழ்க்கை சட்டென விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..! வாழ வாழத்தான் புரியும்.... !!

(பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.. )

Related Posts Plugin for WordPress, Blogger...