இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Friday, 18 November 2011

மதனப் பெண் 24 - பவித்ராவுக்கு என்ன ஆச்சு ?

வரலஷ்மிக்கு மிக அருகில் லாரி வந்து விட்டது. அம்மாவுக்கு ஏதோ ஆகப் போகிறது என்று கண்ணன் நினைத்து எதிர்புறத்தில் இருந்து ஓடி வர ஆரம்பித்து விட்டார்.

அந்த நேரத்தில் பவித்ரா ஒரு காரியம் செய்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் வரலக்ஷ்மியின் கையை பிடித்து தன்னால் இயன்ற மட்டும் வேகமாக திட்டு பகுதிக்கு தரதரவென இழுத்தாள். வரலக்ஷ்மி நிலை தடுமாறி திட்டின் மீது விழுந்தார். லாரி அவரை உரசிய வண்ணம் சென்று நிற்க ஆரம்பித்தது.

அதே நேரம் அழகு பவித்ராவிற்கு என்ன நடந்தது? வரலக்ஷ்மியின் கையை பிடித்து பின்னுக்கு  இழுத்த வேகத்தில் பவித்ராவும் நிலை தடுமாறி பின் பக்கமாக சென்று திட்டை விட்டு தாங்கள் கோவிலில் இருந்து கடந்து வந்த சாலைப் பகுதியில் விழத் தொடங்கினாள்.

ஐய்யகோ...! என்னவென்று சொல்வது..? எப்படிச் சொல்வது? இப்படியும் ஆகுமா? அந்தக் குல தெய்வம் என்ன காரணத்தாலோ கை விட்டு விட்டதே..! முன் எச்சரிக்கைகளை, அறிகுறிகளை கண்ணனின் குடும்பம் கவனிக்காதது குற்றமாகி விட்டதா?

அப்போது அந்த சாலையில் மதுரையில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார், திட்டிலிருந்து தடுமாறி சாலையில் விழுந்து கொண்டிருந்த பவித்ராவின் மீது சடக்கென மோதிவிட்டது. மோதிய வேகத்தில் பவித்ரா மீண்டும்  திட்டு பகுதிக்கே  தூக்கி  எறியப்பட்டாள். தேவதை பவித்ராவின் உடல் முழுவதும் ரத்தம் கொப்புளித்து வெளி வரத் தொடங்கியது. தலையில் பலத்த அடி  பட்டிருந்தது .

வரலக்ஷ்மிக்கும் கண்ணனுக்கும் திக் பிரமை பிடித்தார் போல் ஆகி விட்டது. தன் கண் முன்னே தனது செல்ல மனைவி  பவித்ரா விபத்தில் அடிபட்டு ரத்தக் களறியாக தூக்கி எறியப்பட்ட காட்சியை கண்டு கண்ணனுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் ஆனது. அந்தக் காட்சியை, உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடனே அருகில் இருந்தவர்கள் அங்கே  கூடிவிட்டனர். அங்கு வந்த பெண்டிர்களில் ஒருவர் உச் கொட்டியவாறு, "அடப்பாவமே.. நான் அப்போதே பார்த்தேன்.. இந்தப் பொண்ணு மாமியாளை காப்பாத்தப் போய் அது இப்போ ஆக்சிடேன்ட்லே மாட்டிகிச்சி" என்றார்.

அப்போது கண்ணன் வந்த காரும் U-Turn எடுத்து வந்து விட்டது. ஒரு 5  நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்து வாழ்க்கை அலங்கோலம் ஆகி விட்டது. பவித்ராவின் பிள்ளைகளுக்கு ஒன்று புரியவில்லை. ஆனால் அவர்கள் தாய் விழுந்து கிடந்த கோலத்தை கண்டு உடனே ஓவென அழத் தொடங்கினார்கள்.

கண்ணன் தட்டுதடுமாறி பவித்ராவின் அருகில் சென்று பார்க்கும் பொழுது, பவித்ராவிற்கு மூச்சு இருந்தது. உடனே பரபரப்பனார். தான் வந்த காரில் பவித்ராவை அள்ளி தூக்கி வைத்துக்கொண்டு, வரலக்ஷ்மியையும் அழைத்துக் கொண்டு உடனே மதுரையில் உள்ள விபத்து சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவமனை நோக்கி விரைந்தார். 'U-Turn எடுத்து வருவதற்குள் வக்கீல் சாரின் வாழ்க்கையே Turn  ஆகி விட்டதே' என்று ஓட்டுனர் ரகுவின் மனதில் பரிதாப எண்ணங்கள் தோன்றின. வழி முழுவதும் வரலக்ஷ்மியும், குழந்தைகளும் அழுது கொண்டே வந்தனர். பவித்ராவின் உடலில் அசைவு இல்லை. ஏற்கனவே சிகப்பாக இருக்கும் பவித்ராவின் உதடுகள் காயம் காரணமாக கிழிந்து மேலும் சிகப்பாகி இருந்தன. அவை மட்டும் அசைவது போல் தெரிந்தன. மூச்சு மெலிதாக வந்து கொண்டிருந்தது. கண்ணனின் மடியில் தலை வைத்து பவித்ரா படுத்து இருந்ததால், அவரது ஆடை முழுவதும் இரத்தமாகி விட்டிருந்தன.

மதுரை வந்தடைந்து,  மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பவித்ரா சேர்க்கப்பட்டாள். அந்த மருத்துவமனை கண்ணனுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயம் என்பதால், அந்தந்த துறை சிறப்பு மருத்துவர்கள் எல்லாம் வந்து விட்டனர். ஒரு குழுவாக நின்று பவித்ராவிற்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

அப்போது பவித்ராவின் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது தெரிந்தது. பவித்ரா ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

குல தெய்வம் பல எச்சரிக்கைகளை  செய்திருக்கிறது. பல சம்பவங்களை காட்டி இருக்கிறது.  ஆனால் அதை கண்ணனின் குடும்பம் கடை பிடிக்கத் தவறி விட்டது. குல தெய்வத்தை தொழுதால் எல்லாம் சரியாகி விடும் என்று மட்டும் நம்பினர். கோவில் ஆராதனையில் கற்பூர தீபம் திடீரென அணைந்த பிறகும், சாலையை இப்படி எச்சரிக்கை இல்லாமல் கடக்கலாமா? 5  நிமிடம் கால தாமதமாக மதுரை சென்றிருந்தால் ஒன்றும் தலை முழுகி போயிருக்காது. இப்போது மொத்த வாழ்க்கையே கேள்விகுறியானதே ! ஆபத்து நெருங்கும் போது இயற்கை சமிக்கை செய்யும். அதை புரிந்து  கொண்டு பொறுமை காக்க வேண்டும்.

இங்கு எல்லாம் தவறாகி விட்டதே..!

(தொடரும்)

Thursday, 17 November 2011

மதனப் பெண் 23 - வாழ்க்கை ஒரு 'U' TURN !

குலதெய்வப் பிரார்த்தனைகள் முடிந்தன. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளில் ஒன்றை எடுத்து கண்ணனின் கழுத்தில் போட்டு பூசாரி ஆசிர்வதித்தார்.

தொடர்ந்து அம்மனுக்கு படைக்கப்பட்ட சக்கரைப் பொங்கலை ஒரு சிறிய எவர்சில்வர் வாளியில் பாதியளவு வைத்து பிரசாதமாக பூசாரி வழங்கினார். அத்துடன் அபிசேகம் செய்த போது பிடித்த  பஞ்சாமிர்தத்தை மற்றொரு சிறிய டப்பாவில் வைத்து  கொடுத்தார்.  அவ்வாறே வாழைப்பழம், தேங்காய் மூடி தட்டை கொடுத்தார். விபூதி, குங்குமம் ஆகியவற்றை சிறு பொட்டலங்களாக கட்டிக் கொடுத்தார்.

அவரிடமிருந்து விடை பெற்று, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஓரிடத்தில் அனைவரும் சற்றே ஓய்வாக அமர்ந்தனர். கோவிலில் அந்த நேரத்தில் இருந்த அனைவருக்கும் சக்கரைப் பொங்கல் பிரசாதத்தை, வரலக்ஷ்மி கொஞ்சம் கொடுத்தார். பின் அனைவரும் சக்கரை பொங்கலை ஒரு கவளம் எடுத்து கண்களில் மேலாக ஒற்றி வாயில் பயபக்தியுடன் இட்டு உண்டனர். குழந்தைகள் ரோஹினி, சத்தியதேவ்-க்கு பவித்ரா ஊட்டிவிட்டாள். அப்போது மதியம் சுமார் 1  மணி இருக்கும். கொஞ்சம் சக்கரை பொங்கலை சாப்பிட்டது, அனைவருக்கும் பசியை மேலும் தூண்டியது.

"மாமா.. காலையிலேயே சாப்பாடு ஆக்கி வைச்சுட்டேன்.. எல்லோரும் வீட்டுக்கு போய் சாப்பாடு சாப்பிட்டுரலாம்... இங்கிருந்து ஒன் அவர்தானே..   2  மணிக்குள்ளே வீட்டுக்கு போயிறலாம்.. வேணுமின்னா வழியிலே இளநி சாப்பிடலாம்...ரொம்ப வெயிலா வேற இருக்கு" என்றாள் பவித்ரா.

இது கண்ணனுக்கும், வரலஷ்மிக்கும் ஏற்புடையதாக இருந்தது. அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்து காரில் பூஜை பொருட்களை எடுத்து வைத்தனர். ஓட்டுனருக்கு சிறிது பொங்கலை பவித்ரா கொடுத்தார். காரில் ஏறப் போன கண்ணன் அந்த சாலைக்கு எதிர் வரிசையில் ஒரு மரத்தடியில் நிறைய இளநீர் காய்களுடன் ஒருவர் அமர்ந்து விற்பனை செய்து கொண்டிருப்பதை பார்த்தார்.

உடனே கண்ணன் கார் டிரைவரிடம், "ரகு... நாங்க அந்தப் பக்கம் போய் இளநி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க அப்படியே வண்டிய எடுத்துப் போய் 'U' turn  பண்ணிக்கிட்டு வந்துடுங்க... நேரா மதுரை போய்டலாம்.." என்று சொன்னார்.

"சார் எல்லாரும் வண்டியிலேயே உக்காருங்க ... 'U' turn   எடுத்து அந்தப் பக்கம் போய் இளநி கடைக்காரர் கிட்டே போய் நிறுத்துறேன்.. இது ஹை வே ரோடு.. ரொம்ப ஸ்பீடா வருவாங்க..எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க சார்.." என்றார் டிரைவர் ரகு.

"இல்லே ரகு ...  'U' turn   எடுக்கிறதுக்கு ரொம்ப தூரம் போகணும்.. நாங்க அதுக்குள்ளே இளநி சாப்பிட்டு முடிச்சு ரெடியா இருப்போம்.. மதிய நேரம்.. வண்டி போக்குவரத்து ஒன்னும் காணோம்.. தோ... ஒரு நடைதானே..இளநி சாப்பிட்டு சீக்கிரமா மதுரை போய்டலாம்.. நல்ல பசி.." என்றார் கண்ணன்.

இதை ஆமோதிக்கும் வண்ணம் பவித்ரா, "ஆமா ரகு... நீங்க 'U' turn   எடுத்து வரதுக்குள்ளே நாங்க இளநி சாப்பிட்டு முடிச்சிடுவோம்.. பாப்பாங்க ரெண்டு பேரும் வேணா காருக்குள்ளே இருக்கட்டும்.. காலையிலே எழுந்தனாலே ரெண்டு பேருக்கும் தூக்கம் சொக்குது.." என்றவாறு இரண்டு குழந்தைகளையும் காருக்குள் படுக்க வைத்தாள்.

"சரி.. நான் அப்போ  'U' turn   எடுத்து அந்தப்பக்கம் வற்றேன்" என்றவாறு காரை கிளப்பினார் ரகு.

கண்ணன், பவித்ரா, வரலக்ஷ்மி அனைவரும் மெதுவாக அந்த இருவழி  சாலையில் ஒரு வழியை  கடந்து நடுவில் சுமார் இரண்டு அடி அகலம் உள்ள சாலை பிரிப்பு (Road Separator) திட்டில் வந்து நின்று கொண்டனர். சொன்னது போல வாகனப் போக்குவரத்து ஏதும் இல்லை. எனவே சாலையை கடப்பது ஒன்றும் சிரமமாக தெரியவில்லை.

பின் அங்கிருந்து மற்றொரு வழி சாலையை கடந்து எதிர்புறம் மரத்தடியில் உள்ள இளநீர் கடையை அடைய வேண்டும். கண்ணன் விடுவிடுவென அந்தப்பக்கம் போய், கடை அருகே நின்று கொண்டார். வரலக்ஷ்மியும், பவித்ராவும் அந்தப் பக்கம் வரவேண்டும். பவித்ராவின் கையை பிடித்தவாறு வரலக்ஷ்மி அந்த சாலை பிரிப்பு திட்டில் இருந்து இறங்கி இரண்டு எட்டுகள் வைத்து சாலையில் நடக்க ஆரம்பித்தார். பவித்ரா அவருக்கு பின்னாடி அவரது கையை பிடித்துக் கொண்டு அந்த திட்டில் இருந்து இறங்க ஆரம்பித்தாள்.

அப்போது அந்த சாலையின் வளைவுப் பகுதியில் இருந்து ஒரு லாரி வேகமாக மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது அசுர வேகம்....

திட்டிலிருந்து  சாலையில் முதலில் காலடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்த வரலக்ஷ்மியின் மீது நேராக மோதியே தீர வேண்டும் என்ற எண்ணத்திலேயே அந்த லாரி வந்தது போல் இருந்தது.

லாரி வேகமாக வருவதும், அது வரலக்ஷ்மியின் மீது மோதி விடும் போல் திட்டு ஓரமாக வருவதும் எதிர் பக்கம் இருந்த கண்ணனுக்கு நன்கு தெரிந்தது. ஏதோ ஒரு பதற்றம் கண்ணனை உடனடியாக தொற்றிக் கொண்டது. அதே நேரம் திட்டிலிருந்து இறங்க முயன்று கொண்டிருந்த பவித்ராவுக்கும் இந்த அபாயம் புரிந்தது. 

"அம்மா பாத்து.. லாரி வருது" என்று கண்ணன் கத்தினார்.  வரலக்ஷ்மி இதை உணரும் முன் லாரி அவரது அருகில் வந்து விட்டது. அதன் ஓட்டுனர் வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் அழுத்தி அதனால் எழும்பிய ஒலி வெளியில் கேட்டது. லாரியின் டயர் சாலையை அழுத்தித் தேய்க்கிறது.  இருந்தாலும் வேகம் சீக்கிரமாக மட்டுப்படவில்லை.

அடுத்து என்ன நடந்தது..?

(பின் சொல்கிறேன்)

Friday, 11 November 2011

மதனப் பெண் 22 -அம்மன் ஏதோ குறி சொல்றா..!

மதுரையில் இருந்து கொடைரோடு செல்லும் சாலையில் கண்ணனின் குல தெய்வமான அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. பரம்பரைபரம்பரையாக தங்கள் குலம் காக்கும் தெய்வமாக கண்ணனின் அப்பா வேதாசலம், அவரது தந்தை, பாட்டன் என எல்லோரும் வழிபட்டு வந்த  தெய்வம்.

சிக்கலான பிரச்சனையில் முடிவெடுக்க அம்மனின் காலடியில் பூப்போட்டு பார்க்கும் வழக்கமும் இங்கு உள்ளது. திருமணம், வீடு கிரஹப்பிரவேசம் போன்ற வீட்டு பெரிய விசேசங்களுக்கு கண்ணனின் பரம்பரை பங்காளி மக்கள் இங்கு முதலில் பத்திரிக்கை வைத்து அம்மனை அழைத்து, ஆசி பெற்ற பிறகுதான் உற்றார், உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பிப்பார். வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நேர்ந்து கொள்வது , நிறைவேறிய உடன் நேர்த்திக் கடன் செலுத்துவது என்று அந்த அம்மன் கோவில் பெரிதும் பிரசித்தம் வாய்ந்தது.

நெடுச்சாலை ஓரம் சிறிதாக இருந்த இக்கோவில், காலம்காலமாக வழிபட்டு வரும் பரம்பரை மக்கள் கொடுத்த நன்கொடை காரணமாக பெரிதாக கட்டப் பட்டு சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிசேகமும் செய்யப்பட்டது. அண்மையில் அந்த நெடுஞ்சாலையை விரிவாக்கும் போது பழமையான இக்கோவிலை இடித்து அல்லது நகர்த்தி விடாமல், அதற்கேற்றவாறு சாலையை சற்றே வளைத்து இட்டார்கள்.

ஏற்கனவே வரலஷ்மி பூசாரியிடம் சொல்லி அபிசேகம் மற்றும் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனவே கண்ணன், பவித்ரா உள்ளிட்ட அனைவரும் குழந்தைகளுடன் காலையிலேயே கார் ஒன்றை வாடகைக்கு  பேசி கிளம்பினர்.

கொடைரோடு சென்றைடைய சுமார் 40  நிமிடம் பிடித்தது. அங்கிருந்து சாலையோரம் இருந்த குலதெய்வம் கோவிலை அடைந்து கண்ணன் குடும்பத்தினர் வழிபாடுகளை தொடங்கினர். இந்த அம்மனை குலதெய்வமாக  கொண்ட குடும்பத்தினர் மட்டுமே அக்கோவிலுக்கு அதிகம் வருவர். அன்றைய தினம் கண்ணனின் குடும்பம் தவிர வேறு யாரும் பூஜைக்கு வந்திருக்கவில்லை. எனவே அம்மனின் அபிசேகத்தை அருகில் அமர்ந்து கண்ணன் குடும்பத்தினர் நன்கு கண்டனர். அபிசேகம் முடிய மதியம் 12.30 மணி ஆகிவிட்டது. பின் அலங்காரம், பூஜை ஆரம்பமானது.

அங்காள பரமேஸ்வரி தாய் வரலக்ஷ்மி வேண்டி வணங்கி சாத்திய மஞ்சள் பட்டுப் புடவையில் அலங்கார ரூபிணியாக தெரிந்தாள். ஆனால் கண்களில் மட்டும் ஏதோ ஒரு சோகம் தெரிவதாக வரலட்சுமிக்கு தோன்றியது. "என்ன குற்றம், குறை இருந்தாலும் மன்னித்து, குளிர்ச்சியாகி, என் குலத்தை காக்க வேண்டும் தாயே!" என்று வரலக்ஷ்மி மனமுருக வேண்டினார்.

பூசாரி ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் கற்பூரத் தட்டும்  ஏந்தி அம்மனுக்கு பூஜை செய்ய ஆரம்பித்தார்.

அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. அந்தக் காற்றில் எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் படக்கென அணைந்து விட்டது. எல்லோருக்கும் கருக்கென்று ஆனது.

"தாயே இது என்ன சோதனை.? ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய்? நாங்கள் செய்யும் பூஜையில் என்ன குறை?" என்று வரலக்ஷ்மி வாய்விட்டு அம்மனிடம் கேட்க ஆரம்பித்து விட்டார்.

'நன்றாக, ஜோதியாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் அணைந்து விட்டதே..' என்ற விசனம் பவித்ராவுக்கும். ஏற்கனவே இருந்த குழப்பங்களில்  'கோவிலுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும்' என்று இங்கு வந்தால்.. ஏன் இப்படி நடக்கிறது? என்று கண்ணன் இப்போது உள்ளபடியாக சிந்திக்க ஆரம்பித்தார்.

அதற்குள் பூசாரி கற்பூரத்தை மீண்டும் ஏறிய வைத்து அம்மனுக்கு காட்டினர். "அம்மா.. அம்மன் ஏதோ குறி சொல்றா..! கொஞ்சம் ஜாக்கிரதையா, எச்சரிக்கையா இருங்க !" என்று பூசாரி சொல்லிவிட்டு, தீர்த்தத்தை எல்லோருடைய முகத்திலும் அடித்து, கையிலும் ஊற்றினார். குங்குமம், வீபூதி, சந்தானம் கொடுத்தார். வரலக்ஷ்மி விபூதி  இட்டுக் கொள்ள மற்றவர்கள் அனைத்தையும் இட்டுக் கொண்டனர். தன் மாங்கல்ய பலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கி பவித்ரா நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். தனது தங்கத் தாலியின் மீதும் சிறிது தடவிக் கொண்டாள்.

செல்வத்திற்கு லக்ஷ்மி, கல்விக்கு சரஸ்வதி, எதையும் தொடங்குவதற்கு முன் சுழி போட வேண்டிய இடம் பிள்ளையார், கிரகங்கள் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை அருள நவக் கிரக கோவில்கள் என அததுக்கு கோவில்களும், சாமிகளும் உள்ளன. ஆனால் குலத்தை காப்பாற்ற குல தெய்வம் மட்டுமே துணை.. 

அந்த குல தெய்வம் இப்படி கண்ணனின் பூஜை, புனஸ்காரங்களை சரிவர ஏற்றுக் கொள்ளாமல் வேறு ஏதோ சமிக்கை செய்கிறதே..? கற்பூரம் அணைந்து விட்டதே...?

கண்ணனின் குலத்தை குல தெய்வம் காப்பாற்றியதா..?

(தொடரும்)

Tuesday, 8 November 2011

மதனப் பெண் 21 - ஏதோ நடக்கப் போகிறது !

மேல் தள கட்டடத்திற்கு சென்று பார்த்த அனைவருக்கும் மீண்டும் அதிர்ச்சி !

ஒரு சித்தாள் பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அது அவளது முகம், ஆடை முழுவதையும் சிகப்பாக ஆக்கி கோரமாக தெரிந்தது. வலியால் அழுது கொண்டிருந்தாள். 

பொதுவாக கான்கிரீட் போடும்போது முதலில் கட்டடத்தின் நான்கு சுவர்கள் மீது பலகை வைத்து அதை ஒன்றுடன் ஒன்றாக ஆணி அடித்து இணைத்து, அதே நேரத்தில் அப்பலகைகளின் ஆதரவுக்கு அவற்றின் கீழே சவுக்கு மரங்களை முட்டு கொடுத்து வைப்பார்கள். இவ்வாறு பலகை வைத்த பிறகு, அதன் மீது இரும்புக் கம்பிகளை கட்டி, கான்கிரீட் போடுவார்கள். 

ஆனால் இங்கு அவ்வாறு   செய்யும் போது ஆணியால் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பலகைகள் அந்த ஆணியின் பிடியில் இருந்து எப்படியோ விலகி, கான்கிரீட் தளத்துடன் கெட்டியாக ஒட்டிக் கொள்ளாமல் கீழே இருந்த சவுக்கு மர முட்டுகளின் ஆதரவில் மட்டும் உட்கார்ந்து இருந்தது. கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சித்தாள் பெண் சம்பந்தப்பட்ட மர முட்டை நகர்த்தும் போது அந்த இரண்டு பலகைகளும் எதிர்பாராத விதமாக அவளது தலை மீதே விழுந்து விட்டது. அதில் அரைகுறையாக ஒட்டிக் கொண்டிருந்த ஆணி அவளது நடு மண்டையில் இறங்கியது. இதனால் அவளது தலையில் பொத்தல் விழுந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. பலகை விழுந்த வேகத்தில் அப்பெண் அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த முட்டுகளின் மீது சரிந்தாள். இதனால் அம்முட்டுகளும் சரிந்து விழுந்தன. 

விவரங்களை ஊகித்துக் கொண்ட கண்ணன், உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கவும், வேண்டிய சிகிச்சைகளை செய்யவும் ஏற்பாடு செய்தார்.

பவித்ரவிற்கும், வரலக்ஷ்மிக்கும் நிறைய மன சங்கடங்கள். ஒன்று மாற்றி ஒன்று ஏதோ ஒரு அறிகுறி காட்டி கொண்டே இருக்கிறதே என்று வேதனை பட்டார்கள். "எந்த நேரத்தில் கட்டட வேலை தொடங்கினோமோ தெரியவில்லை... ஏதேதோ நடக்கிறதே ?!"  என்று புலம்ப ஆரம்பித்தனர். 

மருத்துவமனைக்கு சென்று அந்த சித்தாளை சேர்த்துவிட்டு வந்த மேஸ்திரி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தார். 

"மேஸ்திரி, அவளுக்கு எப்போ இப்படி இருக்கு..? டாக்டர் டிரீட்மென்ட் ஆரம்பிச்சட்டரா?" என்று கண்ணன் கேட்டார்.

மேஸ்திரி, அதற்கு எதற்கும் பதில் சொல்லவில்லை. மாறாக, "சார், நான் வேலையே நிப்பட்டுறேன்.. இது நமக்கு சரிப்பட்டு வராது.. 'கட்டடம் காவு கேட்குது சார்-ன்னு நான் அப்போவே சொன்னேன். நீங்க கேட்கலை.. கடா வெட்டி பூஜை போடாமே இனி என்னலே வேலை செய்ய முடியாது. செய்ஞ்ச வரைக்கும் கூலி குடுத்துடுங்க. சித்தாள் ஆஸ்பத்திரி செலவுக்கும் பணம் கொடுங்க" என்று மேஸ்திரி பேசிக் கொண்டே போனார். கூடவே, தனது பணி கருவிகளான சட்டி, சம்மட்டி, மம்மட்டி, கடப்பாரை ஆகியவற்றை மூட்டை கட்ட ஆரம்பித்தார். 

ஒரு கணம் கண்ணனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. "சில நம்பிக்கைகளுக்கு தான் செவி சாயக்காதது தவறாக போய் விட்டதோ..?" என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. அந்த நேரத்தில் மேஸ்திரியின் பக்கம் வரலக்ஷ்மி சேர்ந்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். "நானும் அப்பவோ சொன்னான்.. நீ கேட்கலை.. சிலது சொல்றாங்கன்ன கேட்கணும்.. இப்போ என்ன ஆச்சு பாத்தியா?" என்று வரலக்ஷ்மி சொல்லி விட்டு.. "மேஸ்திரி.. நீ ஒரு நாள் பாத்து பூஜைக்கு ஆக வேண்டியது என்னவோ செய்.. வேலையை நிறுத்தாதே.. பூஜை போட்டு முடிச்ச பிறகு வேணா வேலையை தொடங்கு .. இந்தா பணம்" என்று பூஜைக்கும், சித்தாளின் சிகிச்சைக்கும் உண்டான தொகையை தனது பீரோவிலிருந்து எடுத்துக் கொடுத்தார். 

அதை ஒப்புக் கொள்ளும் வண்ணம் மேஸ்திரி தனது கருவிகளை மூட்டை  கட்டுவதை நிறுத்தி, பணத்தைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

"கண்ணா... இதெல்லாம் கட்டடம் கட்டுவதில் ஒரு சடங்கு, சாங்கியம்.. செய்யாம விட்டா அது தப்பாய்டும். நீ பாட்டுக்கு உன் வேலையை பாரு.. நான் இந்தப் பூஜைக்கு ஆக வேண்டியதைப் பாக்குறேன்.. மறக்காம நாளைக்கு குல தெய்வம் அபிசேகத்துக்கு நீ மதியம் 12  மணிக்கு வரணும்.. மறந்துடாதே.." என்று சொல்லிக் கொண்டே பேரன் சத்தியாவை தூக்கி கொண்டு தன் அறைக்கு சென்றார்.

பவித்ராவிற்கு நிறைய குழப்பம். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த தங்கள் வாழ்வில் ஏன் இப்படி சங்கடங்கள்..? இறக்கையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் ஒரு பெண் ஆந்தை வந்து அமர்ந்து இருந்தது, அப்போதே தன் காலில் அடிபட்டு நகம் உடைந்து ரத்தம் வந்தது.. பின் இன்று சித்தாள் பெண்ணின் தலை மீது பலகை விழுந்து ரத்தம் வந்தது.. இப்படி எல்லா நேர்வுகளிலும் ரத்தம் கண்டது, அந்த எல்லா நேர்வுகளிலும் ஒரு பெண் இனம் சம்பந்தப் பட்டிருந்தது.. இவை யாவும் பவித்ராவின் மனதை நெருடிக் கொண்டிருந்தன. 

"மாமா.. ஏதோ நடக்கப் போவுதுன்னு என் உள்மனசு சொல்லுது.. கட்டடம் கட்டத் தொடங்கியதிலிருந்து பெண்ணா இருக்கிறவங்களுக்கு ஏதோ பிரச்னை வந்த மாதிரி இருக்கு " என்று கண்ணனின் அருகில் நெருக்கமாக வந்து நின்று கொண்டு, அவரது வலது கையை பிடித்துக் கொண்டு அச்சத்துடன் சொன்னாள். ஏதோ ஒரு இனம் புரியாத கவலை அவளை ஆட்கொண்டிருந்தது.

"போடி.. பயித்தியக்காரி... அதெல்லாம் ஒன்னும் இல்லே.. அதுதான் மேஸ்திரி சொன்ன மாதிரி எல்லா பூஜையும் பண்ணப்போறோமே.. அதோட  நாளைக்கு கோவிலுக்கும் போகப் போறோம்.. நீ சும்மா மனசை போட்டு அலட்டிக்காதே .." என்று ஆறுதலுக்கு கண்ணன் சொன்னார். 

ஆனால் கண்ணனின் மனதிலும் பவித்ராவின் உள்மனது சொன்னதைப் போல "ஏதோ நடக்கப் போகிறது..!" என்ற ஒரு நெருடல் இருந்தது. "ஒருவேளை அம்மாவோட உடம்புக்கு ஏதாவது .. அம்மா பிரசருக்கு மாத்திரை சாப்பிடுறாங்க.. ஹெல்தியா இருக்காங்க.." இப்படி கண்ணனின் சிந்தனை கண்டபடி சென்று கொண்டிருந்தது.

ஆனால் 'ஏதோ நடக்கப் போகிறது' என்பது கண்ணனின் குடும்பத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

(தொடரும்) 


Sunday, 6 November 2011

மதனப் பெண் 20 - "ஐயோ.. அம்மா.." என்ற அலறல் சத்தம்

காலை நேரம். மணி சுமார் 9.30௦ இருக்கும். கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல வழக்கு கட்டுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். 

அதே சமயம் மேல் தளத்தில் கான்கிரீட் முட்டுகளையும் பலகைகளையும்   பிரிக்கும் பணி பற்றியும், அதை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டியது என்பது பற்றியும், மேஸ்திரி தனது வேலையாட்களுக்கு ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தார். 

தொடர்ந்து ஈசான்ய மூலையில் ஒரு விளக்கு பொருத்தி, வாழைப்பழம், ஊதுபத்தி வைத்து, கர்ப்பூரம் காட்டி மேஸ்திரியும், பணியாட்களும் வணங்கினர். அப்படியே சூரியனைப்  பார்த்தும் நமஸ்கரித்தனர். முடிவில் மேஸ்திரி ஒரு எலுமிச்சை பழத்தை எட்டாக அறுத்து குங்குமம் தடவி அதன் சாறை புதுக் கட்டடத்தின் எட்டு திசைகளிலும் பிழிந்து போட்டார்.

பிறகு முட்டு மற்றும் பலகை பிரிக்கும் பணியில் வேலையாட்கள் ஈடுபட்டனர். முதலில் கண்ணனின் அலுவலக அறையின் முட்டுகளை நகர்த்தி வைத்து, கான்கிரீடுடன்  ஒட்டி இருக்கும் சென்ட்ரிங் பலகைகளை பிரித்து எடுத்து  தனியாக அடுக்கி வைத்தனர். கண்ணனின் அலுவலக அறை பெரியது என்பதால், முட்டு பிரிக்கும் வேலை முடிய சாப்பாட்டு நேரம் ஆகி விட்டது. 

எல்லோரும் தாங்கள் காலை கொண்டு வந்திருந்த சாப்பாட்டு கூடையை  எடுத்து சாப்பிட அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கண்ணன் தனது காலை நேர நீதிமன்ற பணி முடிந்து சாப்பிட வீட்டிற்கு வந்திருந்தார். பவித்ரா அவரை வரவேற்று சாப்பாடு பரிமாறும் பணியில் ஈடுபட்டாள்.

கண்ணன் சாப்பிட அமரும் நேரத்தில் மேல் தளத்தில் பணியாட்கள் தங்கள் மதிய உணவை முடித்து படுக்கை அறையின் முட்டுகள் மற்றும் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

அன்றைய தினம் பவித்ரா கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் போட்டு குழம்பு வைத்திருந்தாள். அத்துடன் பைனாப்பிள் ரசம், கட்டித் தயிர், வெண்டைக்காய் கூட்டு, கேரட், பீன்ஸ் பொரியல், அப்பளம், மலை வாழைப்பழம் என சாப்பாடு மேஜை நிரம்பி இருந்தது. கூடவே சிறிய அளவில் சுடச் சுடச் போண்டா போட்டிருந்தாள். அகோரப் பசியில் இருந்த கண்ணன் அவற்றை பார்த்த உடனே ஒரு திருப்தியுடன் சாப்பிட அமர்ந்தார்.

தட்டில் பவித்ரா சாதம் வைத்து முதலில் பருப்பும், இரண்டு கரண்டி ஆவின் நெய்யும் (காய்ச்சி வைத்திருந்தாள்) ஊற்றினாள். "பவித்ரா.. எனக்கு நெய் எல்லாம் கொஞ்சம் கம்மி பண்ணு.. வெயிட் ஏறிக்கிட்டே போரேன் பாரு .. என்னை கவனிக்கறதே குறைச்சிக்கிட்டு குழந்தைகளை நல்ல கவனி" என்று செல்லமாக கோபித்துக் கொண்டார். "குழந்தைகளையும் நல்ல பாத்துகிறேன்.. நீங்களும் எனக்கு ஒரு குழந்தை இல்லையா..?!" என்று பவித்ராவும் தன் பங்குக்கு உதட்டை உள்ளுக்கு கடித்தார் போல் செய்து ஒரு கண்ணை மட்டும் சற்றே சிறியதாக்கி செல்லமாக கோவித்துக் கொண்டு பேசினாள். 

"சரி.. சரி.. நாளைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு  அம்மா சொல்லிருக்காங்க.. நியாபகப் படுத்துறேன்.. மறந்துடாதீங்க.. அம்மா.. அபிசேகத்துக்கு பணம் கட்டிட்டான்களாம். நீங்க அவசியம் வரணும். வேலை இருக்கு.. அது.. இது.. ஏதாவது சாக்கு சொல்லிடக்கூடாது" என்று பவித்ரா பிரார்த்தனை பற்றி கண்ணனுக்கு நினைவுபடுத்தினாள். 

கண்ணனும் அதை ஏற்றுக் கொள்ளும் வண்ணம்,  "As Your Honour pleases" என்றார். அவருக்கு வீட்டில் பவித்ராதான் நீதிபதி. வீட்டு நீதிபதி பவித்ரா சொல்வதற்கு அவர்  அப்பீல் செய்வதில்லை. பவித்ராவின் தீர்ப்பும் சரியாகவே இருக்கும். 

இப்படி பேசிக்கொண்டே, பருப்புபுடன் பிசைந்து கொண்ட  சாதத்தை எடுத்து அவர் ஒரு வாய் சாப்பிட போனார். 

அப்போது மேல் தளத்தில் இருந்து "ஐயோ.. அம்மா.." என்ற அலறல் சத்தம்,  ஓலமாக கேட்டது. தொடர்ந்து முட்டுகளும், பலகைகளும் சரிந்து தடதடவென விழும் ஓசையும் கேட்டது. 

கண்ணன் பதறிப் போய் கைசாதம் கையிலேயே இருக்க உடனடியாக மேல்தளத்திற்கு விரைந்தார்.  பவித்ராவும், வரலக்ஷ்மியும் கண்ணனின் பின்னால் ஓடினர். 

அங்கே.....? 

(பிறகு சொல்கிறேன்) 

Saturday, 5 November 2011

மதனப் பெண் 19 - "சார்... கட்டடம் காவு கேட்குது"

மேஸ்திரி காட்டிய ஈசான்ய திசை மூலையில் பவித்ராவும், கண்ணனும் பார்த்தார்கள். அப்போது கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்த சித்தாள், கொத்தனார் அனைவரும் அங்கு நின்று வியப்பு கலந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அங்கு அப்படி என்னதான் இருந்தது?

அது ஒரு ஆந்தை. உடல் பகுதி வெள்ளையாகவும், இறக்கை பகுதி சற்று வண்ணம் கலந்தவாறும் இருந்தது. அதுதான் அந்த மூலையில் அமர்ந்து தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது. அதன் பார்வை மிகவும் தீட்சன்யமாக இருந்தது. பார்ககவே சற்று பயங்கரமாக தோன்றியது. அதை பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் முகத்தில் ஒரு மிரட்சி அலை தோன்றி மறைந்தது. 

ஒரு புதிய கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும், அதுவும் சுமார் 6 ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு ஆந்தை எப்படி வந்தது என்று எல்லோர் மனதிலும் கேள்விகுறி. இப்படி கும்பலாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போதும் அந்த ஆந்தை பறந்து செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கண்ணன் மெல்லமாக சற்று அருகில் சென்று அந்த ஆந்தையை பார்த்தார். அப்போது ஒன்று புரிந்தது. அதன் இறக்கை பகுதியில் ஏதோ காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஆந்தையால் பறக்க இயலவில்லை. அதற்கான முயற்சியும் செய்யவில்லை. ஏதோ ஒரு வெளிநாட்டு ஆந்தை இறக்கையில் அடிபட்டு இங்கு வந்து தஞ்சம் புகுந்து கொண்டது என்று எண்ணிய கண்ணன் உடனடியாக மதுரை வனத்துறை அலுவலருக்கு தொலைபேசி செய்து விவரம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அலுவலகத்தில்  இருந்து இரண்டு பணியாட்கள் வந்தனர். அவர்கள் அப்பறவையை பார்த்ததும் அது ஒரு வெளிநாட்டு பெண் ஆந்தை என்பதை உறுதி செய்தனர். பின் அதை லாவகமாக பிடித்து தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொண்டனர். அடிபட்ட இடத்திற்கு வைத்தியம் பார்த்து, பழமுதிர்சோலை மலைப்  பகுதியில் விட்டுவிட்டால் பறந்து சென்று விடும் என்று கூறி, அதை கொண்டு சென்றனர். கண்ணன் அவர்கள் வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தார். 

கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் இப்படி ஆந்தை அதுவும் ரத்த காயத்துடன்  வந்து அமர்ந்திருந்ததை மேஸ்திரி 'ஏதோ கெட்டது நடக்கப் போவதற்கான   அறிகுறி' என்று மனதிற்குள் நினைத்தார். ஆனால் தான் நினைத்ததை அப்படியே கண்ணனிடம் சொல்லாமல்,  "சார், கட்டடம் காவு கேட்குது.. கான்கிரீட் முட்டு பிரிக்கறதுக்கு முன்னாடி கடா வெட்டி பூஜை போட்டுறலாம்" என்றார். ஆனால் இந்த சாங்கியத்தில் எல்லாம் கண்ணனுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. "அதெல்லாம் வேண்டாம் மேஸ்திரி", என்றார் கண்ணன். "ஏதோ சொல்லனும்ன்னு தோணிச்சு, சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் மேஸ்திரி.

இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் பவித்ரா மிகவும் அப்செட் ஆனாள். பவித்ராவிற்கு கால் நகத்தில் அடிபட்டது ரத்தம் நின்றிருந்தாலும் மிகவும் வலித்துக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த கண்ணன் 'பவி, வா, கீழே போய் மருந்து போட்டுக் கொள்ளலாம்' என்று பவித்ராவை அழைத்துக் கொண்டு கீழ் வீட்டிற்கு சென்றார்.

நடந்ததை தெரிந்து கொண்ட வரலக்ஷ்மி, "கண்ணா, கட்டிகிட்டிருக்கிற வீட்டிலே ஆந்தை வர்றது நல்லதுக்கு கிடையாது.. அதுவும் பவித்ராவிற்கு அதே நேரத்திலே காலிலும் அடிபட்டிருக்கு. பேசாம மேஸ்திரி சொன்ன மாதிரி செய்றதுதான் எனக்கு நல்லதா படுது. அப்படியே நம்ம குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கும் போய் ஒரு அபிசேகம் செய்துடலாம்.." என்று தனது அனுபவத்தில் இருந்து சில விசயங்களை சொன்னார்.

"அம்மா.. நீங்க புரியாம பேசுறீங்க.. ஒரு வெளிநாட்டு பறவை அடிபட்டு போக்கிடம் இல்லமே இங்கே வந்து உட்காந்துகிச்சு.. அதுக்காக அதப் பண்ணலாம்.. இதப் பண்ணலாம்ன்னு நீங்க சொல்றது எனக்கு பிடிக்கலை" என்றார் கண்ணன். இருப்பினும் கொஞ்சம் இடைவெளி விட்டு, "வேனும்ம்ன்னா.... குலதெய்வம் கோவிலுக்கு வேணா போயிட்டு வரலாம்" என்று தன் தாயை சமாதானப்படுத்தினார். பவித்ராவும் இதற்கு இசைந்தாள். அடுத்த வாரம் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

இருந்தாலும் பவித்ராவிற்கு மேஸ்திரி சொன்ன ஒரு வார்த்தை அப்படியே நெஞ்சில் பதிந்து போனது, "சார்... கட்டடம் காவு கேட்குது" என்ற மேஸ்திரியின் வார்த்தைகள் பவித்ராவின் மனதில் திரும்பதிரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. வீட்டில் திரும்பிய இடத்தில் எல்லாம் ஆந்தை அமர்ந்து இருப்பதாக தெரிந்தது. தனது குழந்தைகளின் முகம் சில சமயம் ஆந்தை முகமாக தெரிந்தது. பவித்ரா மிகவும் டிஸ்டர்ப் ஆனாள்.

"சார்.. கட்டடம் காவு கேட்குது..காவு கேட்குது..." என்ற குரல்  வீடு முழுவதும் எதிரொலிப்பதாக பவித்ராவிற்கு பிரமை ஏற்பட்டது.

ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டபடி குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு முன் தினம் கட்டடத்தின் முட்டுக்களை பிரிக்க மேஸ்திரியும், கூடுதலாக சில ஆட்களும் வந்திருந்தனர். அந்த வேலைகள் ஆரம்பமாகின.

அப்போது என்ன நடந்தது தெரியுமா ?

(தொடரும்)

Friday, 4 November 2011

மதனப் பெண் 18 - அதிர்ச்சி

உரிமையியல் வழக்குகளை நடத்துவதில் நல்ல பெயரையும், புகழையும் ஈட்டினார் கண்ணன். முந்தைய தீர்ப்புகளை தேடிப்பிடித்து சுட்டிக்காட்டி வாதம் செய்வதில் கண்ணனுக்கு ஒரு தனி பெயர் மதுரை நீதிமன்றங்களில் கிடைத்தது.இதனால் தீர்ப்பு வழங்குவது  நீதிபதிகளுக்கு எளிதாக இருந்தது. இதனாலேயே கண்ணனின் வழக்கில் ஒரு நியாயம் இருக்கும், ஒரு சாரம் இருக்கும் என்றும் நீதிபதிகள் நம்பினார். அவர்களது நம்பிக்கைக்கு எந்தக் குந்தகமும் வராதபடிக்கு கண்ணனும் நடந்து கொண்டார். குறிப்பாக பொய், புரட்டு வழக்குகளை தாக்கல் செய்தல், தேவையில்லாமல் வாய்தா வாங்குதல் போன்ற வேலைகள் கண்ணனிடம் இல்லை.

அத்துடன் அவ்வப்போது நடக்கும் இலவச சட்ட உதவி முகாம்களில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். நீதிபதிகள் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொள்ளும் இம்முகாம்களில் கண்ணனுக்கு நல்ல அறிமுகமும், நற்பெயரும் கிடைத்தது. வழக்கிட வசதியற்றோருக்காக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அனுப்பும் வழக்குகளை கண்ணன் திறம்பட நடத்தி விரைவில் தீர்ப்பு வாங்கிக் கொடுத்தார். லயன்ஸ் கிளப் உறுப்பினர் ஆனார். சிறிய வயதிலேயே சட்டத் தொழிலில் தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றி நடை போட்டார். நீதிமன்றத்தில் எல்லோரிடமும் இனிமையாக பழகும் குணம் அவரை மற்ற வழக்குரைஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டியது. 

தொழிலில் எத்தனை பிசியாக இருந்தாலும் பவித்ரா மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க கண்ணன் தவறுவதில்லை. வெள்ளிக் கிழமை மாலை அலுவலக பணி ஏதும் செய்வதில்லை. பவித்ரா, குழந்தைகளுடன் சினிமா அல்லது மீனாட்சியம்மன் கோவில் என்று எங்காவது வெளியில் சென்று விட்டு உணவருந்தி வீட்டிற்கு திரும்புவது என்பதை கண்ணன் தனது வழக்கமாக கொண்டிருந்தார். சனிக்கிழமை முழு நாள் அலுவலகம் நடக்கும். அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் வழக்குகளை கண்ணனும், அவரது ஜூனியர் வழக்குரைஞர்களும் தயார் செய்து கொள்வார்கள். ஞாயற்று கிழமை அலுவலதிற்கு விடுமுறை. அன்று பவித்ரா செய்யும் நான் விஜிடரியன் உணவு வகைகளை கண்ணன் ஒரு பிடி பிடிப்பார். மதியம் பவித்ராவுடன் ஒரு நிம்மதியான தூக்கம். மாலை குழந்தைகளுடன் விளையாட்டு. இப்படி கண்ணனின் வாழ்க்கை சீராக, மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்தது.

புதிய வீடு கட்டும் பணியும் நன்கு நடந்து கொண்டிருந்தது. வங்கியில் கடன் வாங்கலாம் என்று கண்ணன் நினைத்திருந்தார். ஆனால் அதற்கு தேவை ஏதும் ஏற்படவில்லை. எப்போதெல்லாம் சிமென்ட் லோடும், செங்கல் லோடும் வந்து இறங்குகிறதோ அதற்கு முன் தினமே, ஏதாவது ஒரு புதிய வழக்கும், அதற்கான பீஸும் கண்ணனுக்கு வந்து விடும். எனவே கட்டட வேலை செலவுகளுக்கு கண்ணனுக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை.

மகள் ரோஹினி எல்.கே.ஜி. முடித்து யு.கே.ஜி. சேர்ந்தாள். மகன் சத்தியதேவ்-வை  பாலர் பள்ளியில் சேர்க்க பவித்ரா எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மதியம் மேல்தள  கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அன்று மதியம் நீதிமன்றப் பணி ஏதும் இல்லாத காரணத்தால், கண்ணனும் வீட்டில் இருந்தார். அப்போது மேஸ்திரி மேலிருந்து தடதடவென இறங்கி வந்து "சார்.. கொஞ்சம் மேல வந்து பாக்குறீங்களா?" என்று ஒரு வித இறுக்கத்துடன் கண்ணனை அழைத்தார். கண்ணன், "என்ன மேஸ்திரி.. என்ன விஷயம்" என்று கேட்டார். "நீங்க உடனே மேல வந்து பாருங்க.." என்று மேஸ்திரி அனத்தினார். 

மேஸ்திரியுடன் கண்ணன் மேல் தளத்திற்கு சென்றார். பவித்ராவும் பின்னாடியே வந்தாள். மேல் தள கட்டத்திற்கு அப்போதுதான் ரூப் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. அது செட்டாகும் வரை  தாங்கிப் பிடிக்க மரச்  சாரங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. 

பெட் ரூம் கட்டிக் கொண்டிருந்த பகுதிக்கு மேஸ்திரி அழைத்து சென்று, அங்கு உள்ளே ஈசான்ய மூலைப்  பகுதியின் மேல்புறத்தை பார்க்கும் படி கை  காட்டினார். அப்போது பின்னாடி வந்து கொண்டிருந்த பவித்ராவிற்கு கீழிருந்த செங்கல் ஒன்று தடுக்கி கால் இடறி நகம் சிறிதாக உடைந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அதை அப்போதைக்கு சரி செய்து கொண்டு கண்ணனின் பின்னாடியே வந்து மேஸ்திரி காட்டிய பகுதியில் கண்ணனும் பவித்ராவும் பார்த்தனர்.

அவர்களுக்கு மிக்க அதிர்ச்சி ஏற்பட்டது !

அது என்ன? 

(தொடரும்)
Related Posts Plugin for WordPress, Blogger...