இத்தொடர்கதையை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !

Friday, 23 December 2011

மதனப் பெண் 32 - மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?

படுக்கையில் சுவாதீனமில்லாமல் அம்மா படுத்திருக்கும் காட்சி கண்ணனை மிகவும் வேதனைப்படுத்தியது. சந்தோசமாக  வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த பெண்மணி. இளம் வயதில் வெள்ளை சீலையுடுத்தி,  திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளும் வரம் வாங்கிய அபாக்கியவதி. தனது மகன் நன்கு படித்து முன்னேற தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்த தாய். நல்லதொரு பெண்ணை கட்டி வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதை அழகு பார்க்க வேண்டும் எனக் கனாக் கண்ட ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள உள்ளம். ஆனால் தோப்பாக வாழ வேண்டிய அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை. அந்த வேதனை அவரது இதயம் முழுவதும்  வியாபித்து பரவி இருந்தது. அதன் வெளிப்பாடு இன்று அவருக்கு நெஞ்சில் மரண வலி. அடுத்து வந்த இரண்டு தினங்களில் வரலக்ஷ்மிக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. வலி வந்தால்தான் நமது உடலில் இதயம் என்ற உறுப்பு இருப்பதை அறிவோம் என்று சொல்வார்கள். அந்த இதயம் சீராக செயல்பட, ரத்த ஓட்டம் தடைபடாமல் செல்ல மருத்துவர் மாத்திரை, மருத்துகளை எழுதிக் கொடுத்தார். வரலக்ஷ்மி வலியிலிருந்து மெல்ல மீண்டு இயல்பான நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.  சேதி அறிந்து அனைத்து உறவினர்களும் வரலக்ஷ்மியை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

முன்னதாக கோவையில் இருந்து கண்ணனின் மாமா சுந்தரம், மாமி சர்மிளா ஆகியோரும்  மருத்துவமனைக்கு வந்து  வரலக்ஷ்மியை கவனித்துக் கொண்டனர். விடுமுறைக்காக அழைத்து சென்றிருந்த பேரக்குழந்தைகளையும் சுந்தரம் கையுடன் அழைத்து வந்திருந்தார். ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது. தலையில் கையை வைத்தவாறு சற்று நேரம் அமர்ந்து கொண்டார். வீட்டுக்கு பெரியவரான தான் ஏதாவது ஒரு நல்ல தீர்வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.

சில மருத்துவ அறிவுரைகளுடன் வரலக்ஷ்மியை மருத்துவர் டிஸ்சார்ஜ் செய்தார். சுந்தரமும், சர்மிளாவும் 4  நாட்கள் தங்கியிருந்து ஒத்தாசை செய்தனர். சர்மிளா சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டார்.

சுந்தரம் தனது மகள் பவித்ராவின் பெரிய மாலை போட்ட படத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். ஆனால் அவ்வாறு தான் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்படி தான் மனைவி சர்மிளாவிடம் சொல்வது என்பதை மட்டும் யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு முன் மாப்பிள்ளை கண்ணனிடம் சொல்லி விடலாம் என்று நினைத்து அவரது அலுவலக அறைக்கு சென்றார்.

"வாங்க மாமா.. நிறைய வொர்க் பெண்டிங் ஆயிடிச்சு. அதை கொஞ்சம் சார்ட் அவுட் செய்துகிட்டே இருக்கேன்.. நீங்களும், மாமியும் வந்து அம்மாவை கவனிசிகிட்டதுக்கு ரொம்ப  சந்தோசம். அம்மாவாலே முடியலே.. பாவம்.." என்று கண்ணன் பேசினார். தொடர்ந்து அவரே, "குழந்தைகளோட பியுச்சர் நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.. அதனாலே நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் .. இது சரியா வரும் என்று நினைக்கிறேன். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை நான் சொல்லியே ஆகணும். என்ன இருந்தாலும் நீங்க என்னோட சொந்த தாய் மாமா.. அதோட பசங்களோட தாத்தா, பாட்டி. இந்த மேட்டரா மதியம் உங்ககிட்டே பேசணும்ன்னு இருந்தேன்.. நீங்களே இங்கே வந்துட்டீங்க.. நான் ஏற்கனவே உங்ககிட்டே கூட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணிருக்கேன்" என்றார்.

தான் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று மாப்பிள்ளையிடம் வந்தால், அவர் தன்னிடம் ஒரு விசயத்தை பேச வேண்டும் என்று சொல்கிறாரே என்று சுந்தரம் சற்று திகைத்தார்.

இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?

(பின் சொல்கிறேன்..) 

Wednesday, 21 December 2011

மதனப் பெண் 31 - அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..

கண்ணன் ஒருவித பீதியுடன் வரலக்ஷ்மியின் அருகில் சென்று பார்த்தார். மெல்லிய குறட்டை சத்தத்துடன் சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. இதைக் கண்டு கண்ணனுக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது. "அம்மா.. அம்மா.. என்னாச்சு உங்களுக்கு?" என்றவாறு  வரலக்ஷ்மியை கண்ணன் மெல்ல தட்டி எழுப்பினார். மெல்ல விழித்துக் கொண்ட  வரலக்ஷ்மி, சற்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "ஒண்ணுமில்லேப்பா... மதியம் சாப்பிட்ட பிறகு எப்பவும் இல்லாத மேனிக்கு ரொம்ப அசதியா இருந்தது... கண்ணை அப்படியே இருட்டிக்கிட்டு வந்தது.. கொஞ்ச நேரம் தலையை கீழே வைக்கலாம்ன்னு படுத்தேன்.. அப்படியே நல்ல தூங்கிட்டேன் போல.. மத்தபடிக்கு ஒண்ணுமில்லே" என்றார்.

"அம்மா.. பி.பி. மாத்திரை ரெகுலரா சாப்பிடுறீங்க இல்லே? மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் அவ இருக்கா.. பாத்துக்குவா... வேணுமின்னா டாக்டர் கிட்டே கூட்டுட்டு போகவா?" என்று கண்ணன் அனுசரணையாக கேட்டார். "வேண்டாம் கண்ணா.. ஏதோ அசதி.. அவ்வளவுதான்" என்றார் வரலக்ஷ்மி.

"சரி ... நீங்க படுத்திருக்கீங்கன்னு நான் அப்படியே மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.. வர்ற வழியிலே ஓட்டல்லே இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன்.. சாப்பிடுங்க.. மதியம் கூட நீங்க கொஞ்சம் சாதம்தான் வச்சுகிட்டீங்க.." என்று கூறிகொண்டே தான் வாங்கி வந்திருந்த டிபன் பொட்டலங்களை கண்ணன் பிரிக்க ஆரம்பித்தார்.

வரலக்ஷ்மி 4  இட்லிக்களை திருப்தியுடன் சாப்பிட்டார். கண்ணனும் சாப்பிட்டார். பிறகு இருவரும் சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். கண்ணன் தொலைபேசியில் கோவையிலிருக்கும் தனது மகள் மற்றும் மகனுடன் சிறிது நேரம் பேசினார். இப்படியாக மாலைபொழுது முற்றிலும் மறைந்து இரவு 10௦ மணி ஆகிவிட்டது.

வரலக்ஷ்மி ஒரு கொட்டாவியுடன் மீண்டும் தனது அறைக்கு சென்று படுத்துக் கொண்டார். ஏதும் பேசவில்லை. கண்ணனும் தனது அறைக்கு சென்று படுத்து விட்டார். அவருக்கு நல்ல தூக்கம்.

பின்னிரவு மணி 3.30 இருக்கும். அப்போது, "கண்ணா.. கொஞ்சம் இங்கே வர்றையப்பா..." என்று தன்னை வரலக்ஷ்மி முனகலுடன் மெல்ல அழைப்பது போல் கண்ணன் உணர்ந்தார். கனவா.. என நினைத்து கண்ணன் சட்டென விழித்துக் கொண்டார். ஆனால் உண்மையில் கண்ணனை வரலக்ஷ்மி தனது அறையில் இருந்து அழைத்துக் கொண்டிருப்பது அவருக்கு நன்கு கேட்டது.

உடனே கண்ணன் வரலக்ஷ்மியின் அறைக்கு ஓடினார். அங்கே, இரவு மின் விளக்கின் ஒளியில் வரலக்ஷ்மி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது கண்ணனுக்கு தெரிந்தது. கண்ணன் உடனடியாக விளக்கை போட்டார். மேலே மின்விசிறி வேகமாக  சுற்றிக் கொண்டிருந்தது. எனினும்  வரலக்ஷ்மியின் உடல் முழுவதும் வியர்த்து இருந்தது. மூச்சு விட சிரமப் படுவது போல் தெரிந்தது. 

"கண்ணா.. நெஞ்சை பிசையறா மாதிரி இருக்கு.. மூச்சு விட முடியலே.. மயக்கமா இருக்கு.. ஏதோ பன்னுதப்பா... " என்றார் வரலக்ஷ்மி. "நான் அப்போதே சொன்னேன்.. டாக்டர் கிட்டே ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்திடலன்னு.." என்றார் கண்ணன். பிறகு உடனடியாக தொலைபேசி செய்து ஒரு டாக்சியை வரவழைத்து வரலக்ஷ்மியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனை வாசலருகே வரும் போது வரலக்ஷ்மி மயக்கமாகி துவண்டு விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த டூட்டி மருத்துவர்கள் வரலக்ஷ்மியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலில் பிராண வாயு செலுத்தினர். இ.சி.ஜி. பார்த்தனர். அங்கேயே நெஞ்சின் மீது நுண்கதிர் படம் எடுத்தனர்.  வரலக்ஷ்மி வழக்கமாக பரிசோதித்துக் கொள்ளும் இருதய சிறப்பு மருத்துவரை துரிதமாக வரவழைத்தனர்.

அவர் வந்து வரலக்ஷ்மியை சுமார் இரண்டு மணி நேரம் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, ஊசிகள் சிலவற்றை அவருக்கு இட்டு, சில குறிப்புகளை அங்கிருந்த டூட்டி மருத்துவர்களிடம் கூறிவிட்டு ஐ.சி.யு.-வில் இருந்து வெளி வந்தார்.

"டாக்டர்.. அம்மாவுக்கு பி.பி. ரைஸ் ஆய்டிச்சா.. ஹார்ட் எப்படி இருக்கு?" என்று அடுக்கடுக்காக சில கேள்விகளை படபடவென கேட்டார் கண்ணன்.

"எஸ்.. யு ஆர் கரெக்ட் மிஸ்டர் கண்ணன்.. அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கு.. மைல்ட்ன்னு சொல்ல முடியாது.. பி.பி. நர்மல்லே இல்லே.. நல்ல வேளை சரியான நேரத்துக்கு கூட்டிட்டு வந்திட்டீங்க.. கொலஸ்ட்ரல், சுகர் எல்லாம் டெஸ்ட் செய்யனும். ரெண்டு நாள் இன்டென்சிவ் கேர்லே இருக்கட்டும்.. நாளைக்கு செக் பண்ணிட்டு சில டேப்லேட்ஸ் எழுதி தர்றேன்.." என்றார் மருத்துவர்.

"அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. டென்சன் கூடாது.." என்று கூறிக்கொண்டே கிளம்பி விட்டார் மருத்துவர்.

ஐ.சி.யு. அறைக்குள் வரலக்ஷ்மி பிராண வாயு முகமூடி அணிந்து, ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அதே கையின் ஆட்காட்டி விரல் நூனியில்  நாடித் துடிப்பைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்க, மற்றொரு கையின் மேல் பகுதியில் இரத்த அழுத்தத்தை தானாக கண்காணிக்கும் பட்டை பொருத்தப்பட்டிருக்க, தலைக்கு மேலே இவற்றின் அளவுகளை காட்டும் மானிட்டர் பெட்டியுடன் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் அம்மாவுக்கு 'ஹார்ட் அட்டாக்' என்ற சேதி கண்ணனை நன்றாகவே உலுக்கிப் போட்டது. 


(தொடரும்..) 

Monday, 12 December 2011

மதனப் பெண் 30 - அது வெறும் ஒப்புக்குத்தான் !

மேல்தள கட்டடப் பணிகள் 80  சதவீதம் முடிந்து விட்டன. பவித்ரா இருந்தால் விரிவாக கிரஹப்பிரவேசம் செய்திருக்கலாம். பவித்ரா இல்லை. அத்தோடு பவித்ரா இறந்து 6  மாதங்கள்தான் ஆகின்றன. எனவே எளிய முறையில் பால் பொங்கி மேல் கட்டடத்திற்கு தனது அலுவலகத்தை மாற்றி விடலாம் என கண்ணன் நினைத்திருந்தார். ஆனால், மாமா, சித்தப்பாமார்கள், சில பெரியவர்கள் என எல்லோரும் பவித்ராவின் ஆண்டு திதி முடிந்த பிறகு மேல்தள கட்டத்திருக்கு குடி போகலாம் என்று உறுதியுடன் கூறி விட்டனர். இது கண்ணனுக்கும் சரியெனப்பட்டது.

பவித்ரா ஆசைஆசையாகப் பார்த்து வடிவமைத்து, அவளது மேற்பார்வையில் தொடங்கப்பட்ட அலுவலகக்  கட்டடம், படுக்கையறை, சமையலறை.... அந்தக் அறைகளில் எப்படி எல்லாம் தனது கணவனுடன், குழந்தைகளுடன்  வாழ வேண்டும் என்று பவித்ரா கனவு கண்டிருந்தாளோ, நினைத்திருந்தாளோ ? எனவே முதலில் பவித்ராவின் ஆண்டு திதியை நல்ல முறையில் முடித்து விட்டு பிறகு மேல் தள கட்டடத்திற்கு குடி போகலாம் என்று கண்ணனும் முடிவு செய்து விட்டார்.

கண்ணன் மற்றும் குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை. குழந்தைகள் இருவரையும் அவரது தாத்தா சுந்தரம் அழைத்து சென்று விட்டார். கண்ணன் நீதிமன்றம் திறந்தவுடன் தாக்கல் செய்ய வேண்டிய சில வழக்குகளை தயார்  செய்து கொண்டிருந்தார்.

பவித்ராவின் மறைவுக்குப் பிறகு கண்ணனை தனிமை நிறைய தொந்தரவு செய்தது. பெரிய நட்பு வட்டத்தை கொண்ட அவர்  இப்போது தான் உண்டு, தனது வேலை உண்டு, வீடு உண்டு, குழந்தைகள் உண்டு என்று மிகவும் சுருக்கமானார். சிரிப்பதை மறந்து போனார். உற்சாகமான முகம் இறுக்கமாகிக் விட்டது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அவரால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. பளீர்பளீரென பவித்ராவின் நினைவுகள் அவரது மனதை மின்னலாக தாக்கிக் கொண்டே இருந்தன. குழந்தைகள் மட்டுமே சற்று ஆறுதல். ஆனால் வரலக்ஷ்மியால் இரண்டு குழந்தைகளை சமாளிக்க முடியவில்லை. சரிவர சமைக்க முடியவில்லை. அவரிடமும் எந்த உற்சாகமும் இல்லை. ஏதோ இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

புரிதல் மிக்க அழகான  மனைவி, பாசமிகு தாய், பொறுப்பான மருமகள் என வலம் வந்த பவித்ராவின் திடீர் மறைவு, கண்ணனின் குடும்பத்தை நிலை குலைய வைத்தது. பரபரப்பாய், சந்தோசமாய், கலகலவென பம்பரமாய் சுழன்று வந்த பவித்ரா என்ற ஒரு ஒத்தைப் பெண்மணி இல்லாமல் கண்ணன் உட்பட நான்கு ஜீவன்கள் தடுமாறிப் போனார்கள். அவரவர்களுக்கு உண்டான தவிப்பை உணர்ந்தார்கள். மனித வாழ்வின் முக்கிய தருணங்களில் ஏற்படும் இழப்பை சட்டென சரி செய்து கொள்ள முடியுமா? ஈடு செய்ய இயலுமா? அப்படி முடிந்தாலும் அது வெறும் ஒப்புக்குத்தான்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகளும் தங்கள் தாத்தா வீட்டிற்கு சென்று இருப்பதால் வீடு வெறிச்சோ என்று இருந்தது. கண்ணன் வெறுமையின் கொடுமையை அனுபவித்தார்.

ஒரு நாள் மதியம் வரலக்ஷ்மி சமைக்கவில்லை. "கண்ணா.. ரொம்ப டயர்டா இருக்கு.. இன்னிக்கு ஓட்டல்லே இருந்து ஒரு எடுப்பு சாப்பாடு வாங்கிட்டு வந்திடு... என்னால சமைக்க முடியலப்பா..." என்று கொஞ்சம் மூச்சிரைக்க வரலக்ஷ்மி கூறினார். அவ்வாறே கண்ணனும் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி வந்தார். வரலக்ஷ்மி சரியாகச் சாப்பிடவில்லை. களைப்பாக இருக்கிறது என்று தனது அறையில் சென்று படுத்துவிட்டார். "சரி.. அம்மா ஓய்வெடுக்கட்டும்" என்று கண்ணன் சிறிது  நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

மாலை 5  மணி இருக்கும்.. வரலக்ஷ்மியின் அறைக்குள் கண்ணன் எட்டிப் பார்த்தார். அப்போதும் வரலக்ஷ்மி தூங்கிக் கொண்டிருந்தார். 'சரி.. தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று கருதி, கண்ணன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அப்படியே கால்நடையாக மீனாட்சியம்மன் கோவிலுக்கு கிளம்பிப் போனார். அங்கே தரிசனம் முடிந்து விட்டு கண்ணன் வீடு திரும்பும் போது 7  மணி இருக்கும். வீட்டுக்குள் மின்விளக்கு ஏதும் போடப்படவில்லை என்பதை வெளி ஜன்னல் வழியாக கண்ணன் தெரிந்து கொண்டார். "அம்மா.. இப்படி சாயங்கால வேளையிலே படுத்திருக்க மாட்டங்களே..! ஏன் இன்னும் எழுந்திரிக்கவில்லை...?" என்ற சில வியப்பான கேள்விகளுடன் பூட்டை திறந்து கண்ணன் ஹாலின் மின் விளக்கை போட்டவாறு வரலக்ஷ்மியின் அறைக்கு சென்றார்.

அங்கே மாலையில் கண்ணன் மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் போது வரலக்ஷ்மி எப்படி வயிற்றின் மீது கைகளை குறுக்காக இட்டு படுத்து இருந்தாரோ அதே நிலையில் அப்போதும் படுக்கையில் படுத்து இருந்தார்.

கண்ணனை சடக்கென ஒரு பயம் தொற்றிக் கொண்டது. உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது. 

(தொடரும்) 

Wednesday, 7 December 2011

மதனப் பெண் 29 - உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க !

பவித்ரா இறந்த பிறகு கண்ணன் பல நாட்கள் வெறுமனே இருந்தார். தனது பணிகளை தொடங்கவில்லை. நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள் வழக்கு கட்டுகளை கவனித்துக் கொண்டனர். கண்ணனின் வாழ்க்கை வறண்ட பூமியாக ஆகி விட்டது. அவ்வப்போது நண்பர்கள் வந்து ஆறுதல் சொல்லி, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

கட்டட வேலை பாதியில் அப்படியே நின்று விட்டது.

மகள் ரோஹினி மட்டும் பள்ளிக்கு சென்று வரத் தொடங்கினாள். மகன் சத்தியதேவ் பாலர் பள்ளிக்கு செல்லவில்லை. ரோஹிணிக்கு வேண்டியதை செய்து அவளை பள்ளிக்கு அனுப்பும் பணிகளை வரலக்ஷ்மி செய்து வந்தார். பவித்ரா வந்த பிறகு ஓய்வில் இருந்த வரலக்ஷ்மிக்கு இந்த திடீர் பணிகள் அவரது உடல்நலத்தை படுத்த ஆரம்பித்தது. அவரால் வீட்டுப் பணிகளை, சமையல் வேலைகளை  முன்பு போல் ஓடியாடி செய்ய இயலவில்லை.  குறிப்பாக மகன் சத்தியதேவ் இரவில் திடீரென முழித்துக் கொண்டு 'மம்மி..மம்மி.." என்று பவித்ராவை தேட தொடங்கினான். அவனை சமாதானப்படுத்தி தூங்க வைப்பது வரலக்ஷ்மிக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இப்படியாக மூன்று மாதங்கள் சென்று விட்டன.

ஒருமுறை தனது பேரக் குழந்தைகளை பார்க்க கோவையிலிருந்து மாமனார் சுந்தரம் வந்திருந்தார். "மாப்பிளே.. நீங்க இப்படியே இருக்கக் கூடாது.. பழையபடி உங்க தொழிலை கவனிக்ககோணும்... குழந்தைகளை பாக்கணும்.. நின்னு போன கட்டட வேலையை முடிங்க.. பவித்ராதான் போயிட்டா..  நீங்களும் இப்படியே இடிஞ்சு போயிட்டா நாங்க என்ன பண்ண முடியும்?" என்று அவர் கண்ணனுக்கு தைரியம் சொன்னார்.

"ஆமா மாமா.. நான் என்னை தயார் படுத்திக்கிட்டு இருக்கேன்.. நான் சில முடிவுகளை எடுத்து இருக்கேன்.. முதல்லே ரோஹிணியை ஒரு போர்டிங் ஸ்கூல்லே சேர்த்தப் போறேன்.. சத்தியாவை வர்ற விஜய தசமி அன்னிக்கு எல்.கே.ஜி.-யிலே சேர்த்தப் போறேன். அம்மாவாலே முடியலே.. இந்த கட்டட வேலையை கூடிய சீக்கிரம் முடிக்கப் போறேன்.." என்று தனது மனதில் இருந்த திட்டங்களை கண்ணன் சொல்லிக் கொண்டு வந்தார்.

"உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்யுங்க.. ஆனா.. பிள்ளைங்களை நல்ல கவனிச்சுக்கோங்க... சத்தியாவை வேணா என்னகிட்டே விட்டுருங்க.. நாங்க அவனை கோயமுத்தூர்லே ஒரு நல்ல ஸ்கூல்லே சேக்கிறோம்... நாங்க பாத்துக்கிறோம்.." என்றார் சுந்தரம்..

ஆனால் அதற்கு கண்ணன் இசையவில்லை. "இல்லை மாமா.. நான் பாத்துக்கிறேன்.. நீங்க கவலைபடாதீங்க.." என்றார் கண்ணன். சுந்தரம் குழந்தைகளை பார்த்து விட்டு அடுத்த நாள் கோவை கிளம்பிச் சென்றார்.

விஜயதசமி அன்று மகன் சத்தியாவை மகள் ரோஹினி படித்துக் கொண்டிருக்கும் அதே பள்ளியில் எல்.கே.ஜி.-வகுப்பில் சேர்த்தார். அதே தினத்தில் தனது அலுவலகத்திற்கு பூஜை போட்டு தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினர். கண்ணன் இவ்வாறு வழக்கமான  பணிக்கு திரும்பியது கண்டு அவரது ஜூனியர் வழக்குரைஞர்கள், தட்டச்சர், குமாஸ்தா அனைவருக்கும் மகிழ்ச்சி. பின் தசரா விடுமுறை முடிந்ததும் கண்ணன் நீதிமன்றத்திற்கு செல்ல ஆரம்பித்தார்.

ஒரு நல்ல நாளில் நின்று போன கட்டட வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார். முந்தைய மேஸ்திரி பணிக்கு வரவில்லை. எனவே வேறு ஒரு மேஸ்திரி மற்றும் பொறியாளரை வைத்து வரைபடத்தில் சில திருத்தங்களை செய்து பணிகளை தொடங்கினார்.

கண்ணன் காலையில் தனது அலுவலக அறைக்கு வரும் போது, மறைந்து போன தந்தையார் வேதாச்சலத்தின் நிழற்படத்தை வணங்கிவிட்டு பணிகளை தொடங்குவது வழக்கம். இப்போது அந்த நிழற்படத்திற்கு அருகே பவித்ராவின் நிழற்படமும் சேர்ந்து விட்டது.

அருகில் இல்லாது போனாலும், உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவரையும் மனதார வணங்கி விட்டு கண்ணன் தனது அன்றாட பணிகளை தொடங்கினார். ரோஹினியும் இப்படி வழிபாடு செய்து விட்டு பள்ளிக்கு சென்று வந்தாள். இவ்வாறு வழிபட சத்தியதேவும் பழகிக் கொண்டான். "வாழ்த்த வேண்டிய வயசிலே, என்னை இப்படி கும்பிட வெச்சிட்டேயம்மா...? நீ எங்கே இருந்தாலும் இந்தப் புள்ளைங்களையும், உன் புருசனையும் காப்பாத்து" என்று புலம்பியவாறு இந்த மூவரின் பிரார்த்தனையில் வரலக்ஷ்மியும் அவ்வப்போது சேர்ந்து விடுவர்.

இப்படியாக நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி காலம் சென்று கொண்டிருந்தது.

ரோஹினி முழு ஆண்டுதேர்வை எழுதி முடித்து விட்டாள். சத்தியதேவ் யு.கே.ஜி.-க்கு தயாராகி விட்டான். கோடைக் கால விடுமுறை தொடங்கி விட்டது. கட்டப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்தன.

அப்போது ஒரு நாள்...!

(தொடரும்) 

Saturday, 3 December 2011

மதனப் பெண் 28 - நான் எதுக்கு மாமா சாகணும்..?

கண்ணனின் விபரீத செயலைக் கண்டு அவரது சிறிய மாமா பதற்றத்தின் உச்சத்திற்கே போனார்.

கண்ணனின் கையை பிடித்து இழுப்பதற்காக அவர் கண்ணனின் அருகே ஓட்டமாக ஓடிச் சென்றார்.

"மாமா.. அவ கூப்புடுறா மாமா..." என்று சொல்லிக் கொண்டிருந்த கண்ணன் இப்போது, "மாமா.. இப்போ பவித்ராவோட குழந்தைங்களும்  தெரியறாங்க... அவ என்னை வரவேனாம்ன்னு சொல்றா மாமா.. குழந்தைங்களை பாத்துக்க சொல்றா... " என்றவாறு கண்ணன் கிணற்றின் சுற்றுச் சுவர் மீதிருந்து கீழே குதித்து அப்படியே குத்துக் காலிட்டு அமர்ந்து கொண்டார். கண்ணனின் அருகில் வந்துவிட்ட மாமாவுக்கு அப்போதுதான், போன உயிர் திரும்பி வந்தது போல் ஆனது.

அவர் அப்படியே கண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார். "தெய்வமே.. நான் என்ன பண்ணுவேன்..? இப்படி சோதிக்கிறாயே ..." என்றவர், பிறகு சற்றே சுதாரித்துக் கொண்டு, "கண்ணா.. கொஞ்ச நேரத்திலே என்ன காரியம் பண்ணப் போனே..? நீ இப்படி பண்ணலாமா? உனக்கு மணிமணியா ரெண்டு குழந்தைங்க இருக்குப்பா ... நீயும் பவித்ரா கூப்புடுறான்னு போய்ட்ட அப்புறம் அந்தக் குழந்தைங்க கதி...?!" என்று கண்ணனை நெஞ்சில் ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

பின் கண்ணன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து சடக்கென விடுபட்டார் போன்று, ஓவென கதறி அழ ஆரம்பித்தார். "பவித்ரா.. என்னை இப்படி விட்டுட்டு போயிட்டியே ..." என்பதே திரும்பத் திரும்ப அவரது அழுகையின் ஊடே வந்த அவரது குரலாக இருந்தது.

கண்ணனின் துக்கங்கள், மன வேதனைகள், வருத்தங்கள், பவித்ராவின் நினைவுகள் எல்லாம் அழுகையின் வடிவில் வெளி வரட்டும் என்று அவரது மாமா அவரை அப்படியே சிறிது நேரம் விட்டு விட்டார். கண்ணனின் பெருங்குரல் அழுகையை கேட்டு அந்த நந்தவனத்தில் இருந்த அனைவரும் திரண்டு விட்டனர். நிலைமையை அறிந்து அவர்களில் வயது முதியவர்களாக இருந்த சிலர் கண்ணனை மெல்ல சமாதனப்படுத்தினர்.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்ணன் தனது அழுகை, தொடர்ந்து ஏற்பட்ட விசும்பல் எல்லாவற்றையும் மெல்ல நிறுத்தி, அருகில் இருந்த வாளியை எடுத்து கிணற்றில் விட்டு நீர் சேந்தி தலைக்கு மடமடவென ஊற்றிக் கொண்டார். பின் உடலை துண்டால் துவட்டி கொண்டு, உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டார். இப்போது அவரது முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.

அருகில் வந்த மாமா, "கண்ணா.. நீ இப்போ பண்ணின மாதிரி எப்பவும் பண்ண மட்டே என்று என்கிட்டே சத்தியம் பண்ணு" என்று சற்று உறுதி கலந்த கண்டிப்புடன் தனது உள்ளங்கையை கண்ணனுக்கு எதிராக நீட்டினர். கண்ணன் அவரது கையை அப்படியே தனது கையால் பற்றிக் கொண்டார். "எனக்கு.. எங்கே பாத்தாலும் பவித்ரா தெரியறா  மாமா.. அவளோட untimely  death  என்னை ரொம்ப பாதிச்சிடிச்சு..  சாரி மாமா.. நான் சரி பண்ணிக்கிறேன்...  எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்கு.. பவித்ரா ஆசைப்பட்ட மாதிரி அவங்களை நல்ல வளக்கிறேன்.. அப்போதான் அவளோட ஆத்மா சாந்தியடையும்.. நான் எதுக்கு மாமா சாகணும்..? பவித்ராதான் என்கூடவே இருக்கல்லே...!  இனி குழந்தைங்களுக்காக  வாழப்போறேன்... நாம வீட்டுக்கு போலாம் மாமா.. எல்லோரும் காத்திருப்பாங்க.. " என்றவாறு மாமாவின் கைகளை பிடித்தவாறு கண்ணன் மெல்ல எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தார்.

கண்ணன் உறுதியாக பேசுவதை கண்டு மாமாவிற்கு சற்றே நிம்மதி கிடைத்தது.. கண்ணன் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மனதளவில் தயாரானார்.



அதிகமாக பிரியம் வைத்திருந்து, தானும் சந்தோசமாக இருந்து, மற்றவரையும் சந்தோசமாக வைத்திருக்கும் ஒருவர்,- அதுவும் அவர் அன்பான, அழகான, அருமையான, பொறுப்பான, பொறுமையான, புத்திசாலியான, வாழ்வை வண்ணமயமாகும் மனைவியாக இருந்து, சிறிய வயதிலேயே திடீரென இறந்து விட்டால் இப்படிப்பட்ட உடனடித் தடுமாற்றங்கள் எல்லா கணவன்மார்களுக்கும்  ஏற்படும். அத்துணை இல்லாத வெறுமை, ஆற்றாமை நிறைய சங்கடங்களை தோற்றுவிக்கும்.


இதற்கு கண்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன?

(தொடரும்..)

Tuesday, 29 November 2011

மதனப் பெண் 27 - "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா.."

பவித்ராவை மண்ணுக்கு கொடுத்து விட்டு எல்லோரும் வீடு திரும்பி விட்டனர்.


அவ்வப்போது சின்ன சின்ன விசும்பல்கள் வீட்டில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. பவித்ராவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு, விளக்கேற்றி  ஊதுபத்தி பொருத்தி வைத்திருந்தனர். கண்ணன் அந்தப் புகைப்படத்தின் முன் அமர்ந்தே இருந்தார். பவித்ராவை பார்த்துக் கொண்டே இருந்தார். குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலசமயம் 'ஏன் டாடி.. மம்மி எப்போ வருவாங்க டாடி...? மம்மி சாமியாய்ட்டதா சொல்றாங்க டாடி.. அப்படியென்ன என்ன டாடி..?' என்று ரோஹினி கேட்டாள். எதற்கும் கண்ணனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. ஆனால் அந்த அழகு தேவதை பவித்ரா, கண்ணனையோ, தனது குழந்தைகளையோ கைவிட மாட்டாள் என்று உறவினர்கள் பேசிக் கொண்டனர்.

சாதி மத வழக்கப்படி பத்தாம் நாள் காரியம் செய்வார்கள். ஆனால் பவித்ரா இப்படி துர் மரணம் அடைந்த காரணத்தால் மூன்றாம் நாளே அக்காரியங்கள் செய்வதென முடிவு செய்யப்பட்டன. இடுகாட்டில் பவித்ராவை அடக்கம் செய்த இடத்தில் எல்லோரும் கூடினர்.  கண்ணன் பூஜை செய்தார். பவித்ராவின் மரணம் கொடுத்து அதிர்ச்சியில் இருந்து கண்ணன் எள்ளளவும் மீளவில்லை என்பதை அவர் ஏதோ ஒரு சாவி கொடுத்த பொம்மையாக பூஜை செய்ததிலிருந்து எல்லோரும் அறிய முடிந்தது.

பிறகு அருகில் இருக்கும் நந்தவனத்தில் குளித்து விட்டு கண்ணன் வீட்டிக்குள் நுழைய வேண்டும் என்று சமூகப் பெரியோர்கள் கூறினார். இதனால் கண்ணனை அழைத்துக் கொண்டு அவரது சிறிய மாமா (சுந்தரத்தின் தம்பி) நந்தவனத்திற்கு செல்ல மற்றவர்கள் வீடு திரும்பினர்.

இடுகாட்டில் அந்திமக் காரியம் செய்து விட்டு வரும் உறவின் முறையினர் குளிக்க, உடை மாற்ற, பிற சாங்கியங்கள் செய்ய அதற்கு அருகிலேயே ஒரு இடத்தை பெரிய கிணற்று நீர் வசதியுடன் பூங்காவனம் போல அந்தக் காலத்திலேயே ஒதுக்கி கொடுத்திருந்தனர். அது நந்தவனமாக இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.

நடை தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு வரும் வரையில் கண்ணனோ, அவரது சிறிய மாமாவோ எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நந்தவனம் வந்து அதன் வாயிற் படியில் கண்ணன் இறங்கும் போது, "கண்ணா.. நீ படிச்சவன்.. வக்கீல்.. யாரும் நிரந்தரம் கிடையாது என்கிறதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அவ போய்ட்ட .. நம்மோட இல்லை என்கிறதை நீ நம்பித்தான் ஆகணும்.. இப்படியே நீ மௌனமா இருந்தா எப்படி..? பாவம் .. உன்னோட பிள்ளைங்களை நினைச்சுப் பாரு... நீ பவித்ராவை மறந்துதான் ஆகணும்... பிள்ளைங்களை ஆளாக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு" என்று கண்ணனின் சிறிய மாமா மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே வந்தார். கண்ணன் எவ்வித சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டே வந்தார்.

தொடர்ந்து, "கண்ணா நீ தலைக்கு குளிச்சிட்டு வந்திடு... பவித்ராவுக்கு இங்கேயே முழுக்கு போட்டுட்டு.. அவ திரும்பி வரப்போறதில்லே.. இந்தா பக்கெட்டு.. கிணத்து தண்ணியே சேந்தி தலைக்கு ஊத்திக்கோ" என்று சிறிய மாமா சொல்லிவிட்டு நந்தவன படிக்கட்டுக்கு அருகே சென்று அமர்ந்தார்.

மாமா கொடுத்த வாளியை அந்த பெரிய கிணற்றில் விட்டு தண்ணீர் சேந்தி கண்ணன் தலைக்கு விட்டுக் கொண்டார். அதை பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமா, கண்ணனை பவித்ராவின் நினைவுகளில் இருந்து மீட்டு கொண்டுவர தான் பேசிய பேச்சுகள் ஒரு சிறிய தாக்கத்தை முதற்கட்டமாக ஏற்படுத்தி இருக்கின்றன என்று நம்பினார். அப்போது திடீரென கண்ணன் ஒரு செயலைச்   செய்தார். அவர் அந்தப் பெரிய கிணற்றின் சுற்றுச் சுவர் மீது ஏறி நின்று கொண்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறிய மாமாவுக்கு அதிர்ச்சி. உடனே கண்ணனின் அருகில் ஓடி வந்தார். "கண்ணா. என்ன ஆச்சி...? கீழே இறங்கப்பா..!" என்று கூவிக் கொண்டே வந்தார்.

இது வரையில் பேசாத கண்ணன், இப்போது, "மாமா.. பவித்ராவோட முகம் தெரியுது மாமா..!" என்று கிணற்றில் உள்ள நீரைச் சுட்டிக் காட்டி கூச்சலிட்டார்.

தொடர்ந்து... "மாமா.. அவ என்னை கூப்பிடறா மாமா..!!" என்றவாறு இரண்டு கைகளையும் விரித்து கிணற்றில் விழத் தயாரானார் கண்ணன்.

மாமா பதறிப் போனார்..!?


(தொடரும்.)

Sunday, 27 November 2011

மதனப் பெண் 26 - வாய் விட்டு அழுதிடு

நன்கு வாழ வேண்டிய இளம் வயதில் ஒருவரை மரணம் தழுவிக் கொண்டால் சம்பந்தப்பட்டவர் வீட்டில் எப்படிப்பட்ட ஒரு அழுத்தமான சோகம் நிலவுமோ அச்சோகம் வரலஷ்மி மற்றும் சுந்தரத்தின் வீட்டில் நிலவியது. மேலும் மாமாமார்கள் , சித்தப்பாமார்கள் என சொந்தபந்தம் வட்டத்தில் பவித்ராவும் கண்ணனும் செல்லப் பிள்ளைகள். எனவே மொத்த உறவே அழுது கொண்டிருந்தது.

பவித்ராவின் அகால மரணம் அக்குடும்பத்தினரை பெரிதும் பாதித்து விட்டது. ஒரு புறம் பவித்ராவின் இழப்பு. மற்றொரு புறம் அவள் விட்டுச் சென்ற இரண்டு பிஞ்சுக் குழந்தைகள். மகள் ரோஹிணிக்கு வயது 5. மகன் சத்யதேவுக்கு வயது 3. இறந்து போன பவித்ராவை நினைத்து அழுவதா? இல்லை இந்த தாயில்லாக் குழந்தைகளை நினைத்து அழுவதா? எல்லா வகையிலும் சோகம், வேதனை.

அந்திம சாங்கியங்கள் முடிந்து பவித்ராவை இடுகாட்டில் புதைக்கும் போது மழை தூறிக் கொண்டிருந்தது. அவளது உடலை அலங்கரிப்பட்ட ஊர்தியில் இருந்து கீழே இறக்கி வைத்திருந்தனர். உடலின் அருகே ரோஹினியும், சத்தியதேவும் அமர வைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மண்ணுக்குள் செல்லவிருக்கும் தாயின் முகத்தை கடைசியாக பார்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்து கண்ணனின் சித்தப்பா குழந்தைகளை அப்படி அமர வைத்திருந்தார். துருதுருவென இருக்கும் இரண்டு குழந்தைகள் மீதும் கண்ணனின் சித்தப்பாவுக்கு மிகவும் பிரியம். அடிக்கடி பார்க்க வருவர். பொம்மைகள் வாங்கி தருவார். அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லி விளையாடுவார். இதனால் குழந்தைகளும் அவரிடம் 'தாத்தா.. சின்ன தாத்தா" என்று நன்றாக ஒட்டிக்கொண்டன. "தனது தாய் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் ஏன் எழுந்திரிக்கவில்லை.."  என்று ரோஹினி புரியாமல் அழுது கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் மீது மழைத்துளி விழாமல் இருக்க அவர் குடை விரித்து பிடித்திருந்தார். விபத்து மரணம் என்பதால் பிரேத பரிசோதனை செய்த பின்னரே பவித்ராவின் உடலை கொடுத்தனர். உடல் முழுவதும் துணிக் கட்டுகள். முகம் மட்டும் தெரிகிறது. அந்த முகத்தில் தூறிக் கொண்டிருந்த மழை துளிகளைக் கண்டு, அந்தக் குழந்தைகள் இருவரும் செய்தது, அனைவரையும் மீண்டும் அழ வைத்தது.

அமர்ந்திருந்த சத்தியதேவ் மெல்ல நகர்ந்து தனது பிஞ்சுக் கைகளால் பவித்ராவின் முகத்தில் விழுந்த மழைத்துளிகளை லேசாக துடைத்து விட்டான். தொடர்ந்து ரோஹினி, "தாத்தா..., மம்மி முகத்திலே மழை விழுது பாருங்க.. மம்மிக்கும் கொஞ்சம் குடை காட்டுங்க..." என்றாள். இந்தக் காட்சிகளைக் கண்டு எல்லோருக்கும் நெஞ்சு அடைத்தது.

"தெய்வமே.. உனக்கு ஈவு இரக்கமே இல்லையா ? இந்த அறியாப் பிஞ்சு குழந்தைகளை இப்படி தவிக்க விட்டு விட்டாயே..." என்று நெஞ்சு குமுறி அழ ஆரம்பித்தார், கண்ணனின் சித்தப்பா.

கண்ணன் சித்தப் பிரமை பிடித்தார் போல் இருந்தார். பவித்ராவின் முகத்தை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யாரிடமும் பேசவில்லை. "கண்ணா.. மனசுக்குள்ளேயே கஷ்டத்தை வைச்சுகிட்டு இருக்காதே.. வாய் விட்டு அழுதிடுப்பா..." என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள். கண்ணன் எல்லோரையும் எப்போதோ, எங்கேயோ பார்த்தது போல் பார்த்தார்.

அடக்கம் செய்பவர் சொன்னவற்றை கண்ணன் ஒரு இயந்திரமாக செய்து கொண்டு வந்தார். இதோ.. அழகு தேவதை பவித்ராவின் உடல் மண்ணுக்குள் இறக்கப்பட்டது. பெண் உறவினர்கள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு 'ஓ..'வென அழ ஆரம்பித்தனர். கடைசி பிடி மண் எடுத்து கண்ணன் பவித்ராவின் உடல் மீது இட்டார்.

எல்லாம் முடிந்து விட்டன. பவித்ரா தனக்கான ஒரு இறுதி இடத்தில் அமைதி ஆனாள். அவளுடன் அவளது கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் எல்லாமே  புதைந்து போயின.. 

(தொடரும்)

Related Posts Plugin for WordPress, Blogger...